விவசாயிகளின் விளை நிலங்களில் சூரிய மின்வேலி அமைக்க, தமிழ்நாடு அரசு நாற்பது சதம் மானியம் வழங்குகிறது. இந்த மானியம் பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையில் ஏற்படும் மோதலைத் தவிர்க்க வகை செய்தல், விளை நிலங்களில் உள்ள பயிர்களைக் காட்டுப் பன்றிகள், காட்டெருமைகள், மான்கள், யானைகள் போன்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பது, சூரிய மின்வேலித் திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தில், சென்னை மாவட்டம் நீங்கலாக, தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்ட விவசாயிகளும் பயனடையலாம். ஒரு விவசாயி இரண்டு எக்டர் நிலத்தில், அதாவது, 566 மீட்டர் நீளம் வரை, சூரிய மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.1.12 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
யானைகள் தவிர்த்த பிற விலங்குகளைத் தடுக்கும் வகையில், 5, 7, 10 வரிசை வேலிகள் மற்றும் யானைகளைத் தடுக்கும் வகையில் 5, 7, 10 வரிசை வேலிகளுடன் கூடுதலாகத் தொங்கும் மின்வேலியை அமைக்கலாம்.
இத்திட்டத்தில், சூரிய மின்வேலி அமைத்துப் பயனடைய விரும்பும் விவசாயிகள், அவரவர் வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைச் செயற்பொறியாளரை அணுகலாம்.
வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு அரசு.