காளான்களைத் தாக்கும் பூசண நோய்கள்!

பூசண நோய் maxresdefault 1 scaled

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018

ழைக்காலத்தில் மட்டுமே விளையும் காளான், அறிவியல் வளர்ச்சியால் இப்போது நாள்தோறும் வளர்ந்து கொண்டுள்ளது. அனைவருக்கும் ஏற்ற உணவான காளானைத் தாக்கும் பூசண நோய்கள் குறித்தும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் காணலாம்.

உலர் குமிழ் நோய்

வெர்டிசிலியம் என்னும் பூசணத்தால் மொட்டுக் காளானில் இந்நோய் பரவுகிறது. முதலில் வெண் பூசணத் திட்டுகள் தோன்றும். அடுத்து, அது சாம்பல் கலந்த மஞ்சளாக மாறும். மொட்டுப் பருவத்தில் காளான் தாக்கப்பட்டால், அது உருவிழந்து வெங்காய வடிவில் காணப்படும். பிறகு, காளானின் ஒருபகுதி மட்டும் பாதிக்கப்பட்டு, வெடிப்புகளுடன் தண்டு வளைந்து காணப்படும். வளைந்த பகுதியில் தோல் உரிந்திருக்கும். மேலும், காளான் முழுவதும் சாம்பல் நிறமாக மாறிக் காய்ந்து விடும்.

இந்தப் பூசணம் மண்மூலம் பரவுகிறது. மேற்பூச்சு மண், காற்று, காளான் ஈ, சிலந்தி, நீர், அதிக ஈரப்பதம், நோயுற்ற காளான், 16 டிகிரி செ.க்கு அதிகமான வெப்பம் ஆகிய காரணங்களாலும் உலர் குமிழ் நோய் பரவும்.

ஈரக்குமிழ் நோய்

மைக்கோகான் என்னும் பூசணத்தால் இந்நோய் மொட்டுக் காளானில் தோன்றும். காளான் மொட்டுகளின் மேல், பஞ்சைப் போன்ற வெண் பூசணம் வளர்ந்து பழுப்பாக மாறி அழுகிவிடும். காற்றின் ஈரப்பதம் அதிகமானால், குமிழ்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து திசுக்கள் நொதித்து உருமாறி, பழுப்பான திரவம் கசியும். இந்தப் பூசணம், பூசண இழை முடிச்சுகளை உருவாக்கி மூன்று ஆண்டுகள் வரையில் மண்ணில் வாழும்.

சிலந்தி வலையைப் போன்ற வளர்ச்சி

இது டேக்டிலியம் அல்லது ஹைப்போமைசிஸ் என்னும் பூசணத்தால் ஏற்படுகிறது. தாக்கப்பட்ட காளான்கள் பழுப்பாக மாறி அழுகிவிடும். இளஞ்சிவப்பு அல்லது கறுப்புத் திட்டுகள் குடையின் மேலே இருக்கும். பிறகு சிவப்பாகிப் பூசண அடைகளாக மாறும்.

பச்சைப் பூசணங்கள்

டிரைக்கோடெர்மா, ஆஸ்பெர்சில்லஸ், பெனிசிலியம் வகைப் பச்சைப் பூசணங்கள், சிப்பிக்காளான், பால்காளான், மொட்டுக்காளான் படுக்கைகளைத் தாக்கும். இப்பூசணங்களால் 30-80% மகசூல் இழப்பு ஏற்படுகிறது. காளானை வளர்க்கப் பயன்படுத்தும் வைக்கோல் அல்லது மட்கில், அமிலத் தன்மை அதிகமானால், டிரைக்கோடெர்மா பூசண வளர்ச்சி மிகுந்து காணப்படும். அறுவடையின் போது, காளான்களைச் சரியாகப் பறிக்காதது, தண்டின் சிறுபகுதி, படுக்கையுடன் ஒட்டிக் கொண்டிருப்பது ஆகியவற்றாலும், இப்பூசணங்களின் தாக்குதல் அதிகமாகும்.

ஆலிவ் பச்சைப் பூசணம்

காளான் படுக்கையில் விதைகளைப் பரப்பும் போது, பசுமை கலந்த கறுப்பாக கீட்டோமியம் என்னும் களைப்பூசணம் தோன்றும். சுத்தமில்லாமல் தயாரிக்கப்பட்ட வளர்புலம் மற்றும் 62 டிகிரி செ. வெப்பநிலைக்கு நீண்ட நேரம் உட்படுத்தப்பட்ட மட்கு ஆகியன, இந்தப் பூசண வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். இதைத் தவிர, பாப்புலோஸ்போரா, மைசீலியோப்தோரா, செபிடோனியம், செபலோஸ்போரியம் வகைப் பூசணங்கள், பழுப்பு, மஞ்சள், வெளிர் மஞ்சள் மற்றும் கருநீலத் திட்டுகளை, காளான் படுக்கையில் அல்லது மேற்பூச்சுக் கலவையில் உண்டாக்கிச் சேதத்தை ஏற்படுத்தும்.

குப்பைக் காளான்கள்

வைக்கோல் அல்லது மட்கில் ஈரம் அதிகமாகி, அம்மோனியா வாயு அதிகமாக உற்பத்தியானால், கோப்ரைனில் அல்லது குப்பைக் காளான்கள் அதிகமாகத் திடீரெனத் தோன்றும். இதனால், சுமார் 90% வரையில் மகசூல் இழப்பு உண்டாகும். இரசாயன முறையில் நெல் வைக்கோலைப் பதப்படுத்தும் போது, இந்தக் குப்பைக் காளான்கள் அதிகமாகத் தோன்றும். மேற்பூச்சு மண்ணில் ஈரம் அதிகமாக இருந்தாலும் குப்பைக் காளான்கள் அதிகமாகத் தோன்றும். முதிர்ச்சியடைவதற்கு முன், இந்தக் காளான்களைப் பிடுங்கி அழிக்க வேண்டும்.

கடுகைப் போன்ற பூசண இழை முடிச்சுகள்

சில சமயங்களில் விதைகளைப் பரப்பும் நிலையில், காளான் பூசணம் வளர்ச்சி இல்லாமல் திட்டுத் திட்டாகத் தோன்றும். இந்தப் படுக்கையைப் பிரித்துப் பார்த்தால், இடையிடையே சுமார் 2 மி.மீ. விட்டமுள்ள கடுகைப் போன்ற பூசண இழை முடிச்சுகள் வளர்ந்திருக்கும். ஸ்கிளிரோசியம் ஒரைசே என்னும் இப்பூசணம், வைக்கோல் மூலம் பரவும். வைக்கோலை நீராவியால் சுத்தப்படுத்தினால் இப்பூசணத்தைத் தடுக்கலாம்.

ஒருங்கிணைந்த களைப்பூசணத் தடுப்பு

காளான் பண்ணையைச் சுற்றிக் கழிவுநீர் தேங்காமல் இருக்க வேண்டும். பண்ணையைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். வைக்கோல், மட்கு போன்ற மூலப்பொருள்களை மழையில் நனையாமல் சேமிக்க வேண்டும். தரமான காளான் வித்துகளைப் பயன்படுத்த வேண்டும். படுக்கையைத் தயாரிக்கும் போது, மட்கு, வைக்கோல், மேற்பூச்சுக் கலவை ஆகியவற்றின் கார அமிலத் தன்மை 6.5-7.5 ஆக இருக்க வேண்டும்.

காளான் படுக்கையைச் சுத்தமான அறையில், சிமெண்ட் தளம் அல்லது மூங்கில் தட்டிகளால் அமைந்த பஞ்சைப் போன்ற அமைப்புகளில் தயாரிக்க வேண்டும். வைக்கோலைக் கிருமி நாசினியில் நனைத்துப் பிழிந்து, பிறகு சாக்குப் படுதாக்களில் இட்டு நன்கு உலர வைக்க வேண்டும். படுக்கையைத் தயாரிக்கும் முன்பு, வைக்கோல் துண்டுகளில் 65% ஈரப்பதம் இருத்தல் மிகவும் அவசியமாகும். அதிகளவு ஈரப்பதத்தைத் தவிர்க்க வேண்டும்.

படுக்கையில் களைப்பூசண வளர்ச்சி, சிறு புள்ளிகளாக அல்லது திட்டுகளாகத் தெரிந்தால், அந்த இடத்தில் 0.05% கார்பெண்டசிம் அல்லது 0.1% மேங்கோசெப் கலந்த பஞ்சினால் நன்றாகத் துடைக்க வேண்டும். படுக்கையின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டிருந்தால், உடனே அப்படுக்கையை அகற்றி எரித்துவிட வேண்டும். அல்லது ஆழமாகப் புதைத்துவிட வேண்டும்.

காளான் படுக்கையில் தெளிப்பான் மூலம் தூவானம் போல நீரைத் தெளிக்க வேண்டும். நீர் வழியும் அளவில் நனைக்கக் கூடாது. காளானைப் பறிப்பவர்கள் சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். படுக்கையைத் தாக்கிச் சேதப்படுத்தும் பூச்சிகளைக் கவனித்துத் தடுக்க வேண்டும். காளான் குடிலில் தேவையான அளவில் வெளிச்சம், காற்று இருக்க வேண்டும்.

காளான் படுக்கை அடிக்கடி கெட்டுப் போனால், படுக்கையைத் தவிர்த்து, பொட்டாசியம் பெர்மாங்கனேட் மற்றும் பார்மலினை 1:2 அளவில் கலந்து புகையூட்டம் செய்ய வேண்டும். சுவர், கூரை, அடுக்குகளில் 0.1% கார்பெண்டசிம், 0.25% மேங்கோசெப் போன்ற பூசணக் கொல்லிகளைத் தெளித்துச் சுத்தப்படுத்த வேண்டும். அறையில் தொங்கும் சாக்குப்படுதா, கூரையோலை இற்றுப் போன நிலையில் இருக்கக் கூடாது.

காளான் வித்துகளைத் தயாரிக்கும் அறை, வித்துகளைப் பரப்பும் அறை, காளான் வளரும் அறை மற்றும் பயன்படுத்தும் பொருள்களை, அடிக்கடி கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.

காளான் வளர்ப்பில் பயன்படும் பூசணக் கொல்லிகள்

பெனோமில்லை ஒரு லிட்டர் நீருக்கு 1-1.5 கிராம் வீதம் கலந்து, வைக்கோல், மட்கு, படுக்கைமீது தெளிக்க அல்லது நனைக்க வேண்டும். மேற்பூச்சுக் கலவையை நனைக்க வேண்டும். கார்பெண்டசிம் என்னும் பாவிஸ்டினை ஒரு லிட்டர் நீருக்கு 1-1.5 கிராம் வீதம் கலந்து, வைக்கோல், மட்கு, படுக்கையை நனைக்க அல்லது தெளிக்க வேண்டும். குளோரோதலோனிஸ் என்னும் கவாச்சை ஒரு லிட்டர் நீருக்கு 1-2.5 கிராம் வீதம் கலந்து மேற்பூச்சுக் கலவையில் தெளித்தல் வேண்டும். புரோகுளோராஸ் என்னும் டில்ட்டை ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் வீதம் கலந்து மேற்பூச்சுக் கலவையை நனைக்க அல்லது தெளிக்க வேண்டும்.

தையோபெண்டசோலை ஒரு லிட்டர் நீருக்கு 1.5-2.5 கிராம் வீதம் கலந்து மேற்பூச்சுக் கலவையை நனைத்தல் அல்லது தெளித்தல் அல்லது கலக்க வேண்டும். ஜினெப் என்னும் இண்டோபில் ZT8ஐ 1-1.5 கிராம் வீதம் கலந்து வைக்கோல், படுக்கை, மட்கை, பஞ்சினால் நனைத்துத் துடைக்க வேண்டும். மேற்பூச்சுக் கலவையை நனைக்க அல்லது தெளிக்க வேண்டும்.


பூசண நோய் Parthasarathy

சீ.பார்த்தசாரதி,

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், கோவை, சு.சுகுணா, பா.சரண்யா, 

தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading