காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாரம், கோவிந்தவாடி வே.பழனி முன்னோடி விவசாயி. இவர் தனது விவசாய அணுகுமுறை, அதிக உற்பத்தி ஆகியவற்றுக்காக, விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார். நீர்வளம் மிகுந்த கோவிந்தவாடியின் முக்கியப் பயிர் நெல்லாக இருக்கும் நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை, எள்ளையும் தொடர்ந்து பயிரிட்டு வருகிறார். இவரிடம், உங்கள் எள் சாகுபடி அனுபவத்தைக் கூறுங்கள் என்று கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:
எளச்சவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளுன்னு நம்மகிட்ட ஒரு பழமொழி உண்டு. எள் பொருள், எள்ளுல இருந்து கிடைக்கிற நல்ல எண்ணெய்யை உணவுல நல்லா சேர்த்துக்கிட்டா, மெலிஞ்ச ஒடம்பு சத்துப் பிடிப்பான ஒடம்பா மாறிரும்ங்கிறது இதோட அர்த்தம். இந்தப் பழமொழி விவசாயத்துக்கும் பொருந்தும்.
அதாவது, சிறு விவசாயிகளுக்கு, பாசன வசதி குறைவா இருக்குற விவசாயிகளுக்கு, எள்ளு ரொம்ப ரொம்ப ஏத்த பயிரு. எழுபது நாள் பயிரு. வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பயிரு. அதிகமா தண்ணி தேவைப்படாது. பனி ஈரத்துலயே வெளஞ்சிரும். அதிகமா உரமோ, மருந்தோ தேவைப்படாது. அதே நேரத்துல நமக்குக் கிடைக்கிறது விலை மதிப்புள்ள பொருள்.
எங்க நெலத்துல பெரும்பாலும் நெல்லு தான் இருக்கும். ஆனாலும், எள் சாகுபடிக்காக அரை ஏக்கராவ ஒதுக்கி வச்சிருவேன். கொஞ்சம் வறட்சிக் காலமா இருந்தா, நாலஞ்சு ஏக்கராவுல கூட எள்ளைப் பயிர் பண்ணிருவேன். எப்பிடி இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகைப் பட்டத்துல எங்க நெலத்துல எள் பயிர் உறுதியா இருக்கும். சுருக்கமான செலவுல சுருக்கமான நாள்ல வெளையிற வெள்ளாம. வீட்டுக்குத் தேவைக்கு எண்ணெய்யும் எடுத்துக்கிறலாம்.
முதல் போக நெல் சாகுபடி முடிஞ்சதும் எள்ளு சாகுபடிக்கான நெலத்தை ஒதுக்கி, திரும்பத் திரும்ப உழுதுக்கிட்டே இருப்பேன். நெலம் கண்ணாடி மாதிரி இருக்கணும். ஒவ்வொரு உழவும் ஒரு உரம் போடுறதுக்குச் சமம்ன்னு பெரியவக சொல்லுவாக. என் அனுபவத்துலயும் பாத்துருக்கேன். அதனால, எத்தனை தடவை சாலு ஓட்டுறமோ அந்தளவுக்கு எள்ளு பொலி கட்டும். எட்டு சாலு ஓட்டுனா எட்டி வெளையும் எள்ளு.
நானு பத்து தடவை கூட உழுவேன். எள்ளுக்குள்ள களையே இருக்கக் கூடாது. விதைப்புக்கு முன்னால தண்ணிய பாய்ச்சி நெலத்துல மிச்சம் மீதி இருக்குற களை விதைகளையும் முளைக்க விட்டு சாலோட்டிக் காய வச்சுருவேன். அடைமழைக் காலம் முடிஞ்சு, கார்த்திகை மாசம் பளிச்சின்னு வெய்யில் அடிக்கும். அப்போ ஒரு பத்து தேதி வாக்குல எள்ள வெதச்சு விட்டுருவேன்.
அரை ஏக்கராவுக்கு அரை கிலோ எள்ள வெதச்சா போதும். இந்த விதையை ஒரு பொட்டலம் ரைசோபியம், ஆறுன அரிசிக்கஞ்சி கலவையில சேர்த்து நல்லா கலந்து ஒரு அரைமணி நேரம் நெழலுல உலர்த்தி வெதச்சா, பயிருக்கு வேண்டிய தழைச்சத்துல ஒரு பகுதி காத்துல இருந்து கெடச்சிரும்.
இதுக்கு ஒரு பத்து ரூவா தான் செலவாகும். ஆனா உரத்துக்காக நாம நூத்துக்கணக்குல செலவழிக்கிற பணம் மிச்சமாகும். நானு வாலாஜாபாத் விவசாய டெப்போவுலயே எள்ளு விதை, ரைசோபியத்த வாங்கிருவேன்.
டெப்போவுல வாங்குற விதை தரமா இருக்கும். பருவத்துக்கு ஏத்த இரகமா வச்சிருப்பாங்க. நானு திண்டிவனம் 5 அல்லது 6 எள் இரகத்தைத் தான் பயிர் பண்ணுறேன். எள்ளு விதை சிறுசா இருக்குறதுனால இதுகூட மணலைக் கலந்து விதைப்பேன். விதைகள் நல்ல முளச்ச பிறகு, நெருக்கமா இருக்குற பயிர்கள களச்சு விடுவேன். ஒரு அடிக்கு ஒரு செடி இருந்தா கிளைகள் விட்டு நல்லா காய்க்கும்.
உரம்ன்னு எடுத்துக்கிட்டா, ஒரு டிராக்டர் தொழுவுரம், அரை மூட்டை டிஏபியை அடியுரமா போடுவேன். பயிர் முளச்சு 25 நாள்ல மழை எதுவும் இல்லேன்னா ஒரு பாசனம் குடுப்பேன். அப்போ அரை மூட்டை யூரியாவை மேலுரா குடுப்பேன். இந்தத் தண்ணியோட பனி ஈரத்துலயே எள்ளு வெளஞ்சிரும்.
எள்ளுச் செடிகள்ல நுனிக்கருகல் வரும். அப்புறம் எள்ளுக் காயை உரிச்சுப் பார்த்தா, வெள்ளையா சின்னதா புழுக்கள் இருக்கும். இதுக்கு மட்டும் ஒரு மருந்து அடிச்சா போதும். மத்தபடி வேறெந்த மருந்தும் தேவைப்படாது. இப்பிடிச் செஞ்சா எழுபது நாள்ல எள்ளுச் செடிக நல்லா வெளஞ்சு அறுப்புக்குத் தயாராகிரும்.
இந்தச் செடிகள அடியோட அறுத்துக் கட்டுகளா கட்டி, களத்துக்குக் கொண்டு வந்து வட்டமா அடுக்கி வச்சிருவேன். காய்கள் இருக்குற தலைப்பகுதி உள்ளுக்குள்ள இருக்கணும். அடிப்பகுதி வெளியே நீட்டிக்கிட்டு இருக்கணும். இப்பிடி வச்சா, பச்சையா இருக்குற ஒருசில காய்களும், ஆம்பல் புடிச்சு பழுப்பு நெறமா மாறிரும்.
இப்பிடி ரெண்டு நாளைக்கு இருந்தா போதும். மூனாவது நாள் கட்டுகள பிரிச்சு, களத்துல பரப்பிக் காய வச்சு செடிகள உதிர்த்தா நல்லா வெளஞ்ச தரமான எள்ளெல்லாம் தரையில கொட்டிரும். அப்புறம் அந்தச் செடிகள களத்துல அப்பிடியே ஒரு நாள் காய வச்சு அடுத்த நாள்ல செடிகள அலசி, கீழே கொட்டுற எள்ள எடுத்துருவோம். அப்புறம மறுபடியும் அந்தச் செடிகள களத்துல ஒருநாள் காய விட்டு, அடுத்த நாள் மிச்ச மீதி இருக்குற எள்ள எடுத்துச் சுத்தம் செய்வோம்.
இந்த அரை ஏக்கராவுல 80 கிலோ எடையில மூனு மூட்டை எள், அதாவது, 240 கிலோ எள் மகசூலா கிடைக்கும். இன்னிக்கு ஒரு கிலோ எள்ளோட விலை 90 ரூபா. 240 கிலோ எள்ளோட விலை 21,600 ரூபா. இதுல 6,600 ரூபா செலவுக் கணக்குல போயிட்டாலும், அரை ஏக்கருல, 70 நாள்ல, 15 ஆயிரம் ரூபா, நமக்கு நிகர வருமானமா நிக்கும் என்றார்.
பசுமை