துல்லியப் பண்ணையத்தில் கத்தரி சாகுபடி!

Eggplant on a precision farm

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020

துல்லியப் பண்ணையத் திட்டம் என்பது நவீன வேளாண்மை உத்திகள் மூலம், தரமான பொருள்களை உற்பத்தி செய்து சந்தைகளுடன் இணைக்கும் புதிய பண்ணைய முறை. இம்முறையில் நீர், உரம், பூச்சிக்கொல்லிகள் ஒவ்வொரு பயிரின் வளர்ச்சிப் பருவத்தின் தேவைக்கேற்ப அளிக்கப்படும். தமிழ்நாடு துல்லியப் பண்ணையத் திட்டம் தனிப்பட்ட இடம், நிலம் மற்றும் பயிருக்கு ஏற்ற அணுகுமுறையைக் கையாளும். சிறந்த மகசூலுக்கு உகந்த இடுபொருள்களைப் பயன்படுத்தி, நீர், ஆற்றல் போன்ற மதிப்புமிக்க வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும்.

தரமான நாற்று உற்பத்தி

பாதுகாக்கப்பட்ட நாற்றங்கால்: நாற்றங்காலுக்கு 50% நிழல்வலை போதும். ஒரு மீட்டர் அகலம் மற்றும் போதுமான நீளத்தில் மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். நாற்றுகளைக் குழித்தட்டுகளில் வளர்க்க வேண்டும். குழித்தட்டுகளில் தென்னை நார்க்கழிவு, வேப்பம் புண்ணாக்கு, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து நிரப்ப வேண்டும்.

விதைப்பு

எக்டருக்கு 200 கிராம் கத்தரி விதைகள் போதும். ஒரு கிலோ விதைக்கு 200 கிராம் வீதம் அசோஸ்பைரில்லத்தைக் கலந்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். விதைத்த ஆறு நாட்களுக்குப் பிறகு குழித்தட்டுகளை மேட்டுப்பாத்திகளில் வைக்க வேண்டும். விதைகள் முளைக்கும் வரை தினமும் 2 முறை பூவாளியால் நீரைத் தெளிக்க வேண்டும். லிட்டர் நீருக்கு 30 மில்லி பஞ்சகவ்யா வீதம் கலந்த கலவையை, விதைத்த 15 நாட்களுக்குப் பின் தெளிக்க வேண்டும். 18 நாட்களுக்குப் பின் 19:19:19 மற்றும் 0.5% மாங்கனீசு கரைசலை ஊற்ற வேண்டும். 35 நாட்களில் கத்தரி நாற்றுகள் நடவுக்குத் தயாராகி விடும்.

நடவு

உளிக் கலப்பையால் நிலத்தை ஆழமாக உழ வேண்டும். பின் சட்டிக் கலப்பையால் உழுது விட்டு, கொக்கிக் கலப்பையால் 2-3 முறை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 25 டன் தொழுவுரத்தை இட  வேண்டும். அடியுரமாக 703 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை, கடைசி உழவின் போது இட வேண்டும். எக்டருக்குத் தலா 2 கிலோ வீதம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியாவை, 50 கிலோ தொழுவுரம் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்குடன் இட வேண்டும்.

கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 2.5 கிலோ வீதம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியை, 100 கிலோ தொழுவுரத்தில் கலந்து இட வேண்டும். நடவு நிலத்தை நான்கடி அகலம், ஒரு அடி உயரமுள்ள மேட்டுப்பாத்திகளாக அமைத்து, சொட்டுநீர்ப் பாசனப் பக்கவாட்டுக் குழாய்கள் பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு அமைக்க வேண்டும். நடுவதற்கு 8-12 மணி நேரத்துக்கு முன் நிலத்தை, சொட்டுநீர்ப் பாசனம் மூலம் நனைக்க வேண்டும்.

நடவுக்கு முன் எக்டருக்கு 3 லிட்டர் வீதம் பெண்டிமித்திலின் களைக்கொல்லியைத் தெளிக்க வேண்டும். நாற்றுகளை 0.5% சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கலவையில் 30 நிமிடங்கள் நனைத்து, 90x60x75 செ.மீ. இடைவெளியில், இரட்டை வரிசை முறையில் நட வேண்டும். 16 வரிசைகளுக்கு ஒரு வரிசையில் 40 நாள் செண்டுமல்லி நாற்றுகளை நட வேண்டும். நடவு செய்த ஏழாம் நாள் சந்துகளை நிரப்ப வேண்டும்.

கரையும் உரப்பாசனம்

எக்டருக்கு 200:150:200 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தை, நடவு செய்தது முதல் மூன்று நாட்கள் இடைவெளியில், நீர்வழி உரமாகக் கொடுக்க வேண்டும்.

பின்செய் நேர்த்திகள்

0.5% சூடோமோனஸ் புளோரசன்சை, 15 நாட்கள் இடைவெளியில் 6 முறை இலைகளில் தெளிக்க வேண்டும். நடவு செய்த 15 மற்றும் 30 ஆம் நாளில், டிரைகாண்டனால் என்னும் வளர்ச்சி ஊக்கியை ஒரு லிட்டர் நீருக்கு 1.25 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். நடவு செய்த 45, 60 மற்றும் 90 ஆம் நாளில் பிளானோஃபிக்ஸ் என்னும் வளர்ச்சி ஊக்கியை ஒரு லிட்டர் நீருக்கு 0.25 மில்லி வீதம் கலந்து தெளித்து பூ உதிர்வதைக் கட்டுப்படுத்தலாம்.

நுண்ணூட்டக் கலவையை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் வீதம் கலந்து, நடவு செய்த 40 மற்றும் 80 ஆம் நாளில் தெளிக்க வேண்டும். 19:19:19 மற்றும் மாங்கனீசை ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் வீதம் கலந்து நடவு செய்த 60 ஆம் நாள் தெளிக்க வேண்டும்.

அறுவடையும் சேமிப்பும்

நன்கு முதிர்ந்த காய்களை அறுவடை செய்ய வேண்டும். காய்களை அளவின் அடிப்படையில் தரம் பிரித்து, பூச்சித் தாக்குதல் உள்ள காய்களை நீக்கி பிளாஸ்டிக் பெட்டிகளில் நிரப்ப வேண்டும்.


ALAGU KANNAN

முனைவர் பு.அழகுக்கண்ணன்,

இராஜா ஜோஸ்லின், இராஜ்கலா, திருமலைவாசன், அசோக்குமார், சோபனா,

வேளாண்மை அறிவியல் நிலையம், அரியலூர்-612902.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading