கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2021
கரும்பு தனது வளர்ச்சிப் பருவத்தில் அதிகளவில் நீரை எடுத்துக் கொள்ளும். அதாவது, கரணைகளை நடவு செய்ததில் இருந்து அறுவடைக்கு வரும் வரை, 2,500 மி.மீ. நீர் தேவைப்படும். பொதுவாகப் பாசன வசதியுள்ள இடங்களில் தான் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. ஆயினும், எதிர்பாராத இயற்கைச் சூழல்கள் காரணமாகப் பாசனப் பற்றாக்குறை ஏற்படுவதும் உண்டு. பருவமழை தவறுதல், மழையளவு குறைதல், நிலத்தடி நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் போது, போதியளவில் நீர் கிடைக்காத நிலை ஏற்படும்.
பாசனப் பற்றாக்குறையால் வறட்சிக்கு உள்ளாகும் கரும்புப் பயிரில், முளைப்புத் திறன் குறைதல், எண்ணிக்கை, எடை, சர்க்கரை அளவு குறைதல் போன்ற இழப்புகள் ஏற்படும். வறட்சியால் பாதிக்கப்படும் கரும்பில் 21% மகசூல் இழப்பு ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. இந்த இழப்பு நிகழாமல் இருக்க, சில உத்திகளைக் கடைப்பிடிக்கலாம். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
முன்பட்ட நடவு
கரும்பைப் பின் பட்டத்தில் நடுவதை விட முன் பட்டத்தில் நடுவது சிறந்தது. எடுத்துக்காட்டாக, பிப்ரவரி, மார்ச்சில் நடவு செய்த கரும்புப் பயிர், ஏப்ரல்-ஜூன் காலத்தில், பாசனப் பற்றாக்குறை மற்றும் அதிக வெப்பத்தால் ஏற்படும் வறட்சியால் பாதிக்கப்படும். இதனால், மகசூல் இழப்பு ஏற்படும். ஆனால், டிசம்பர், ஜனவரியில் நடவு செய்த கரும்புப் பயிர், ஏப்ரல், மே-யில் நன்கு வளர்ந்து விடுவதால், வறட்சியின் தாக்கம் அதிகமாக இருப்பதில்லை.
வறட்சியைத் தாங்கும் இரகங்கள்
வறட்சியைத் தாங்கி வளரும் கோ.கு.93076, 94077, கோ.86249, 94008, கோ.கு.5, கோ.சி.6, கோ.க.24, கோ.க.25 ஆகிய கரும்பு வகைகளைப் பயிரிட்டால், வறட்சியால் ஏற்படும் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.
ஆழச்சால் நடவு
பொதுவாக, கரும்பு 20 செ.மீ. ஆழமுள்ள சால்களில் நடப்படுகிறது. இதைச் சிறிதளவு மாற்றி 20-30 செ.மீ. ஆழத்தில் நடலாம். இதனால், கரும்பு வேர்கள், ஆழமாகச் சென்று நிலத்திலுள்ள நீரையும், சத்துகளையும் எடுத்துப் பயிருக்குத் தரும். எனவே, வறட்சியால் அதிகமாகப் பாதிக்கப்படாது.
கரணை நேர்த்தி
செவ்வழுகல் நோயைத் தடுக்கும் விதைக்கரணை நேர்த்தியில், கால்சியம் ஹைட்ராக்சைடு என்னும் சுண்ணாம்புச் சத்தைச் சேர்ப்பதால், இதிலுள்ள கால்சியம் அயனி, கரும்புத் தோகைகளின் செல் சுவர்களில் படிந்து, இலைத் துளைகள் மூலம் நீர் ஆவியாவதைக் குறைக்கிறது. இதனால், வறட்சிக் காலத்தில், கிடைக்கும் குறைந்தளவு நீரானது, பயிருக்குப் பெருமளவில் பயன்பட்டு, மகசூல் பாதிப்பைக் குறைக்கிறது.
தோகையைப் பரப்புதல்
கரும்பு நடவு முடிந்ததும், கரும்புத் தோகையை வரப்புகளின் மேல், சிறு சிறு கட்டுகளாக 10-15 செ.மீ. உயரத்துக்குப் பரப்ப வேண்டும். இதனால், நிலத்தில் இருந்து நீர் ஆவியாதல் 70% வரை குறையும்; ஈரப்பதம் பல நாட்களுக்கு இருக்கும். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தத் தோகையைக் கொத்தி விட்டு மண்ணில் சேர்ப்பதால் நல்ல அங்கக உரமாகவும் பயன்படும். கரும்பு மற்றும் சர்க்கரை மகசூல் கூடும்.
இதைப் போல, 5, 7 ஆகிய மாதங்களில் நீக்கிய காய்ந்த தோகையைப் பரப்பி விட்டு ஈரப்பதத்தைக் காக்கலாம். இதனால், பாசன இடைவெளியை ஏழு நாட்களில் இருந்து பதினான்கு நாட்களுக்கு ஒருமுறை என மாற்றலாம். மேலும், வறட்சியைச் சமாளிக்க, நடவுக் கரணைகளை, எத்ரல் என்னும் வளர்ச்சி ஊக்கிக் கரைசலில் ஊற வைத்து நட வேண்டும். இந்தக் கரைசலை, 200 மில்லி எத்ரலில் 400 லிட்டர் நீரைக் கலந்து தயாரிக்கலாம்.
வெள்ளைக் களிமண் தெளிப்பு
கரும்பு 100-120 நாள் பயிராக இருக்கும் போது ஏற்படும் வறட்சியைச் சமாளிக்க, கையோலின் என்னும் வெள்ளைக் களிமண்ணை, 6% கரைசலாகத் தயாரித்து, கைத்தெளிப்பான் மூலம் பயிர்கள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். இதனால், இலைகளின் வெப்பம் 3-4 டிகிரி செல்சியஸ் குறையும். மேலும், இலைத் துளைகள் மூலம் நீர் ஆவியாவதை 22% வரை குறைக்கலாம்.
சால் விட்டுச் சால் பாசனம்
நீரை ஒரு சால் விட்டு அடுத்த சால் என்னும் கணக்கில் பாய்ச்ச வேண்டும். அடுத்த முறை, கடந்த முறை விடுபட்ட சால்களில் பாய்ச்ச வேண்டும். கடும் வறட்சியில் பயிர்கள் பெருமளவில் பாதிக்காமல் இருக்க, இது சிறந்த பாசன முறையாகும்.
சொட்டுநீர்ப் பாசனம்
இம்முறையில், பயிர்களின் வேர்களின் அருகிலேயே நீர் கிடைக்கும். இதனால், நீரானது வீணாதல் தவிர்க்கப்படுகிறது. சாதாரணமாக வாய்க்கால் மூலம் ஒரு ஏக்கரில் பாய்ச்சும் நீரை, இம்முறையில் 2-2.5 ஏக்கரில் பாய்ச்சலாம்.
அங்கக உரமிடல்
மட்கிய தென்னைநார்க் கழிவு அல்லது ஆலை அழுக்கை, எக்டருக்கு 25 டன் வீதம் எடுத்து அடியுரமாக இட வேண்டும். மட்கிய தொழுவுரம் என்றால் எக்டருக்கு 12.5 டன் வீதம் எடுத்து அடியுரமாக இட வேண்டும். இதனால், நிலத்தின் நீர்ப்பிடிப்புத் திறன் அதிகமாகும். பாசனத்தையும் 14 நாட்களுக்கு ஒருமுறை செய்யலாம். கரும்பு மற்றும் சர்க்கரை மகசூலும் கூடும்.
சத்து நிர்வாகம்
பாசனம் போதியளவில் இல்லாத நிலையில், நிலத்திலுள்ள சத்துகளைப் பயிர்களால் எடுத்துக் கொள்ள முடியாது. இதைத் தவிர்க்க, கோடையில், 2.5% யூரியாக் கரைசலைப் பயிர்களின் மேல் தெளிக்கலாம். இத்துடன், 2.5% பொட்டாஷ் கரைசலையும் சேர்த்துத் தெளித்தால், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை உண்டாகும்.
மேலும், கரும்பு வளர்ச்சி ஊக்கியைத் தெளிப்பதன் மூலம், கணுக்களுக்கு இடையிலான நீளம், கரும்பின் வளர்ச்சி, எடை மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மையும் அதிகமாகும். இதை, கரும்பை நட்ட 45, 60, 75 ஆகிய நாட்களில், ஏக்கருக்கு 1, 1.5, 2 கிலோ வீதம் எடுத்து, 200 லிட்டர் நீர் மற்றும் ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கலாம்.
முனைவர் இரா.அனிதா,
கரும்பு ஆராய்ச்சி நிலையம், கடலூர். முனைவர் செ.தமிழ்ச்செல்வி,
வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை, தஞ்சை மாவட்டம்.