வீரிய ஒட்டு மக்காச்சோள விதை உற்பத்தி!

corn seed

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020

திக விளைச்சலைத் தரும் கோ.6 மக்காச்சோளம் வீரிய ஒட்டு இரகமாகும். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டுமே இந்த விதை உற்பத்தியில் பயன்படுகின்றன. இந்த இரண்டும் ஒரே சமயத்தில் பூக்கும் பருவத்தை அடைவதால், வீரிய ஒட்டு விதையை மிக எளிதாக உற்பத்தி செய்யலாம். ஆண் பயிர் வெளிரிய பச்சை இலைகளையும், பெண் பயிர் பச்சை இலைகளையும் கொண்டிருப்பதால், இவற்றை எளிதில் அடையாளம் காணலாம்.

விதை உற்பத்தி

ஒரே பயிரில், அதாவது, நுனியில் ஆண் இனப்பெருக்க அமைப்பும், பயிரின் நடுப்பகுதியில் பெண் இனப்பெருக்க அமைப்பும் தனித்தனியாக இருக்கும். எனவே, மக்காச்சோளத்தில் காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. கலப்பு வீரிய ஒட்டு விதை உற்பத்தியில் பெற்றோராகப் பயன்படும் ஆணும் பெண்ணும் தொடர் தற்கலப்பு மூலம் உருவாக்கப் படுகின்றன.

பெண் பயிரிலுள்ள ஆண் இனப்பெருக்க அமைப்பை நீக்கி விட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் மகரந்தம் மூலம் கருவுறச் செய்து, பெண் பயிரில் வீரிய ஒட்டு விதை உருவாக்கப்படுகிறது. ஆண் பூவிலிருந்து வெளிப்படும் மகரந்தத் தூள்களால், 7 நாட்கள் வரை பெண் பூக்களைக் கருவுறச் செய்ய முடியும். பெண் பூவிலுள்ள சூல்முடி 13 நாட்கள் வரை மகரந்தத் தூளை ஏற்றுக் கருவுறத் தயாராக இருக்கும். இந்த விதை உற்பத்தியை, விதை ஆய்வாளரின் அனுமதி மற்றும் அவரின் மேற்பார்வையில் செய்ய வேண்டும்.

விதைக்கும் பருவம்

ஜூலை-ஆகஸ்ட்டில் வரும் ஆடிப்பட்டம், செப்டம்பர் அக்டோபரில் வரும் புரட்டாசிப் பட்டம் மற்றும் ஜனவரி பிப்ரவரியில் வரும் தைப்பட்டத்தில் விதைக்கலாம். பூக்கும் போது பெய்யும் மழையில் மகரந்தம் அழிந்து விடும். அதிக வெப்பத்தில் மகரந்தத்தின் வீரியம் குறைந்து விடும். குறைந்த வெப்பம் மகரந்தத்தின் உயிர்ப்பை அழித்து விடும். எனவே, மழைக்காலத்தில் பூக்கும் பருவம் வராமல் இருக்க, ஜூலை முதல் வாரத்தில் விதைப்பது நல்லது.

குறுவைப் பயிர் பூக்கும் போது வெப்பநிலை மாற்றத்தால் பாதிப்படைவதைத் தவிர்க்க, நவம்பர் முதல் வாரத்தில் விதைப்பது நல்லது. அதிக மழையும் மிகக் குறைந்த வெப்பமும் நல்ல விதை உருவாவதைத் தடுக்கும். அறுவடை நேரத்தில் அதிக மழை இருக்கக் கூடாது. இதனால், விதையின் ஈரப்பதம், விதை உதிர்ப்பு, விதையின் உயிர்ப்பு மற்றும் முளைப்புத் திறன் பாதிக்கப்படும். 

நிலத் தேர்வு

பூக்கும் நேரத்தை அடிக்கடி பார்வையிட ஏதுவாக, பாதைக்கு அருகிலுள்ள நிலத்தில் பயிரிட வேண்டும்.  இல்லாவிடில், மரபுவழித் தூய்மையைக் காக்க முடியாது. தேவையற்ற மகரந்தக் கலப்பு ஏற்படலாம். விதை உற்பத்தி சாகுபடி நிலத்தில், தாமாக முளைக்கும் மக்காச்சோள விதைகள் இருக்கக் கூடாது. அதாவது, முந்தைய பருவத்தில் மக்கச்சோளத்தைப் பயிரிட்டிருக்கக் கூடாது.

மண்வளம்

வளமான மற்றும் நீர் வடியும் மண்ணாக இருக்க வேண்டும். மணல் கலந்த குறுமண் முதல் களிமண் வரை இருக்கலாம். உவர் மற்றும் சாக்கடை நீருள்ள நிலத்தைத் தவிர்க்க வேண்டும்.

பயிர் விலகு தூரம்

வீரிய ஒட்டு மக்காச்சோள விதை உற்பத்தி நிலம், மற்ற மக்காச்சோள நிலத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். இதன் மூலமே விதைத் தூய்மையைக் காக்க முடியும்.

விதையளவு

தரமான, திடமான பெரிய விதைகளை விதைக்க வேண்டும். ஒரு எக்டர் விதைப்புக்கு 18 கிலோ பெண் விதைகள், 7 கிலோ ஆண் விதைகள் தேவை. மூன்று பெண் வரிசைக்கு ஒரு ஆண் வரிசையென விதைக்க வேண்டும்.

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 4 மி.லி. குளோரிபைரிபாஸ், 0.5 கிராம் பசை, 20 மி.லி. நீர் அல்லது ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் இமிடாகுளோபிரிட் 70 WS கலந்து விதைத்தால், தண்டுத் துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பன்டசிம் வீதம் கலந்து விதைத்தால், டவின்யுமிலடியு நோயைக் கட்டுப்படுத்தலாம்.

ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளை, 600 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் ஆறிய அரிசிக்கஞ்சி கலந்த கலவையில் கலந்து அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். அசோஸ்பைரில்லம் காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிறுத்திப் பயிர் வளர்ச்சிக்கு உதவும்.

விதைப்பு மற்றும் இடைவெளி

அதிக முளைப்புத் திறனுள்ள விதையாக இருந்தால், குழிக்கு ஒரு விதையும், இல்லாவிடில் இரண்டு விதையும் என, பார்களின் பக்கவாட்டில் 4 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும். வரிசை இடைவெளி 60 செ.மீ., பயிர் இடைவெளி 20 செ.மீ. இருக்க வேண்டும். ஆண் மற்றும் பெண் பயிர் வரிசையை அறிய, குச்சி அல்லது ஏதோவொரு அடையாளத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆண் மற்றும் பெண் பயிர் விகிதம்

வீரிய மகரந்தத் தூளின் அளவு, மகரந்தத்தூள் காற்றில் பரவும் நேரத்தின் அளவு, ஆண் மற்றும் பெண் பயிர்களின் ஒருமித்த பூக்கும் நேரம், ஆண் பயிரில் மகரந்தப் பை வெடிப்பும், பெண் பயிரில் சூல்முடி வரும் சமயமும் ஒன்றாக இணைவதைப் பொறுத்து, ஆண் மற்றும் பெண் பயிரின் விகிதம் மாறுபடும். கோ.6 வீரிய ஒட்டு விதை உற்பத்தியில் ஆண், பெண் விகிதத்தை 1:3 என அமைக்கலாம். 

பயிர்க் களைப்பு, எண்ணிக்கைப் பராமரிப்பு

இடைவெளி சமமாக இருக்கும் வகையில் பயிர்களைக் களைக்க வேண்டும்.  இதனால், பயிர்கள் நன்கு வளரவும், கலப்புப் பயிர்களை எளிதில் பார்த்துக் களைக்கவும் முடியும். விதைத்த பத்தாம் நாளில் குழிக்கு ஒரு பயிர் வீதம் விட்டு விட்டு, மற்ற பயிர்களை நீக்கிவிட வேண்டும். விதை முளைக்காத இடங்களில் ஊற வைத்த விதைகளை, குழிக்கு 2 வீதம் பத்து நாட்களுக்குள் நட வேண்டும். ஒரு எக்டரில் 80,600 பயிர்கள் இருக்க வேண்டும்.

கலவன் நீக்குதல்

விதை உற்பத்தியில் பயன்படும் பெற்றோரின் பண்புகளுக்கு மாறுபட்ட பயிர்களை நீக்க வேண்டும். பயிர்கள் பூக்கும் முன்பு, மிகவும் உயரமான மற்றும் குட்டையான பயிர், தண்டின் நிறம், முன்கூட்டியே பூத்த பயிர், தாமதமாக பூத்த பயிர், ஆண் பூவின் நிறம், பெண் பூவின் சூல்முடியின் நிறம், கதிரின் உருவம், இலையமைப்பு மற்றும் எண்ணிக்கை  அடிப்படையில் கலப்புப் பயிர்களை நீக்க வேண்டும். நோயுற்ற பயிர்களைப் பிடுங்கி அழிக்க வேண்டும்.

களை

சரியான நேரத்தில் களையெடுத்தல் நல்ல மகசூலுக்கு வழி வகுக்கும். பயிருக்கும் களைச்செடிக்கும் இடையே உருவாகும் ஈரப்பதம், இடைவெளி மற்றும் உரத் தேவைக்கான போட்டியை இது தடுக்கும். விதைத்த 20 மற்றும் 30 நாளில் களையெடுக்க வேண்டும்.

பெண் பயிரில் ஆண் பூவை நீக்குதல்

பெண் பயிர்களில் ஆண் பூக்கள் வெளிவரத் தொடங்கியதும், காலை 9 மணிக்குள் அகற்றிவிட வேண்டும். இது, பெண் பயிர்களில் உள்ள மகரந்தத்தால் ஏற்படும் தற்கலப்பைத் தடுத்து, வீரிய ஒட்டு விதை உருவாக வகை செய்யும். ஆண் பூக்களை நீக்க, பெண் பயிர்களை இடது கையால் பிடித்துக் கொண்டு வலது கையால் ஆண் பூவை இழுத்துப் பிடுங்க வேண்டும்.

சில நேரங்களில் கவனக் குறைவால், ஆண் பூவின் அடியில் சில மகரந்தப் பைகளை நீக்காமல் விட நேரிடும். இது தற்கலப்புக்கு வழி செய்யும். இதைக் கூர்ந்து கவனித்து ஆண் பூவை முற்றிலும் நீக்கிவிட வேண்டும். பிடுங்கிய ஆண் பூக்களைத் தொலைவில் புதைத்துவிட வேண்டும். இப்பணியை, பூக்கத் தொடங்கிய நாளிலிருந்து 10-15 நாட்கள், காலை மாலையில் தொடர்ந்து  செய்ய வேண்டும். ஆண் பூவைச் சுற்றியுள்ள இலையை நீக்கினால் 5-15% மகசூல் பாதிக்கும்.

உரமிடல்

பயிர்கள் சீராக வளர, நிலம் முழுவதும் ஒரே சீராக இருக்கும் வகையில் உரங்களை இட வேண்டும். எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம், தழை, மணி மற்றும் சாம்பல் சத்தைத் தரும் யூரியா, சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாசு 293:390.6:83 கிலோ தேவைப்படும். இவற்றில், தொழுவுரம், சூப்பர் பாஸ்பேட், பொட்டாசை முழுமையாகவும் மற்றும் யூரியாவில் நான்கில் ஒரு பகுதியான 73.25 கிலோ யூரியாவையும் அடியுரமாக இட வேண்டும்.

அடுத்து, விதைத்து 25 நாட்களில் களையெடுத்த பிறகு, மீதமுள்ள மூன்று பங்கில் இரண்டு பங்கான 146.5 கிலோ யூரியாவையும், 45 நாளில் கடைசியாக உள்ள யூரியாவையும் மேலுரமாக இட வேண்டும்.

மண் அணைத்தல்

விதைத்த 25 நாட்களில் களையெடுத்து, பார்களின் மையத்தில் பயிர்கள் இருக்கும் வகையில், மண்ணை அணைக்க வேண்டும். இதனால், பயிர்கள்  புத்துணர்வைப் பெற்று விரைவாக வளரும்.

பாசனம்

அதிக நீராலும் அதிக வறட்சியாலும் பயிர்கள் பாதிக்கப்படும். எனவே,  சீரான பாசனம் அவசியம். பூக்கும் பருவமான 45-65 நாட்களில் பாசனம் அவசியமாகும். இந்தக் காலத்தில் நிலத்திலும் பயிர்களிலும் ஈரமிருந்தால், மகரந்தத்தூளின் உயிர்ப்புத் தன்மை நெடுநேரம் நீடித்து, பெண் பயிர்களில் விதை உற்பத்தி அதிகமாகும்.

பூச்சி மற்றும் நோய்ப் பராமரிப்பு

பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் அதிகமுள்ள பகுதிகளில் வீரிய ஒட்டு விதை சாகுபடி கூடாது. ஏனெனில், வீரிய ஒட்டு விதை உற்பத்திக்கு உதவும் பெற்றோர் விதைகள், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலுக்கு எளிதில் ஆட்படும்.

தண்டு ஈ: இப்பூச்சி 7-30 நாளுள்ள இளம் பயிரைத் தாக்கும். இதனால், பயிர்கள் காய்ந்து விடும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 6 மி.லி. இமிடா குளோபிரிட் வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். அல்லது 3ஜி கார்போபியூரான் அல்லது 10ஜி போரேட் குருணையை, எக்டருக்கு 10 கிலோ வீதம் நிலத்தில் இட்டு விதைக்க வேண்டும். 

தண்டுத் துளைப்பான்: இதைக் கட்டுப்படுத்த, 10ஜி போரேட் 8 கிலோ  அல்லது 3ஜி கார்போபியூரான் 17 கிலோ எடுத்து, 40 கிலோ மணலில் கலந்து, பயிர்களின் குருத்துகளில் இட வேண்டும். அல்லது விதைத்த 20 நாளில், ஏக்கருக்கு 400 மி.லி. குய்னால்பாஸ் வீதம் எடுத்துத் தெளிக்கலாம்.

கதிர்த் துளைப்பான்: கதிர்கள் வந்து 18 நாட்களுக்குப் பிறகு, எக்டருக்கு 10டி கார்பரில் 25 கிலோ அல்லது 5டி மாலத்தியான் 25 கிலோ வீதம் தூவி, அந்துப்பூச்சியின் தாக்குதலைக் குறைக்கலாம். அல்லது 400 கிராம் 50% கார்பரில் தூளை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.

சாற்றை உறிஞ்சும் பூச்சி: இதைக் கட்டுப்படுத்த, 10 லிட்டர் நீருக்கு 3 மி.லி. இமிடா குளோபிரிட் வீதம் கலந்து தெளிக்கலாம். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. டைமெத்தோயேட் வீதம் கலந்து தெளிக்கலாம்.

கரையான்: இதைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 20 கிலோ பிப்ரோனில் குருணையை இட்டு, மிதமாகப் பாசனம் செய்ய வேண்டும். இலைக்கருகல் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் மேங்கோசெப் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

கதிரை மூடியுள்ள மேலுறையின் பச்சை நிறம் காய்ந்து வைக்கோல் நிறமாக மாறியதும் அறுவடை செய்யலாம். முதலில் ஆண் பயிர்களில் அறுவடையை முடித்துவிட வேண்டும். இதனால், பெண் பயிர்களிலுள்ள வீரிய ஒட்டு விதைகளுடன் கலப்பதைத் தடுக்கலாம். பெண் பயிர்களில் அறுவடை செய்யும் போது, விதையின் ஈரப்பம் 20% இருக்க வேண்டும். மக்காச்சோளக் கதிர்களைப் பரப்பி வைக்க வேண்டும்; குவித்து வைக்கக் கூடாது.

காய வைத்தல்

மக்காச்சோளக் கதிர்களை மண் தரையில் உலர்த்தக் கூடாது. தார்ப்பாய் அல்லது சிமெண்ட் தரையில் உலர்த்த வேண்டும். இரவில் கதிர்களை மூடி வைக்க வேண்டும். விதைத் தூய்மையை நிலை நிறுத்த, வேறுபட்ட நிறமுள்ள கதிர்கள், பூச்சி, நோய் தாக்கிய கதிர்களை அகற்றிவிட வேண்டும். பெண் பயிர் கதிர்களின் ஈரப்பதம் 13-14% இருந்தால் தான் விதைகள் உதிரும் நிலையில் இருக்கும்.

விதைப் பிரிப்பு

முதல் பெண் பயிர்க் கதிர்களில் உள்ள விதைகளை எடுத்துவிட வேண்டும்.  இதனால், ஆண் பயிர்க் கதிர்களின் விதைகள் கலப்பதைத் தடுக்கலாம்.  கைகள் மூலம் அல்லது மக்காச்சோளக் கதிரடிப்பான் மூலம் விதைகளைப் பிரிக்கலாம். சிறிய விதைகள், உடைந்த விதைகள், பூச்சி மற்றும் நோய் தாக்கிய விதைகள் மற்றும் நிறமாறிய விதைகளை நீக்கிவிட வேண்டும்.

விதைச் சேமிப்பு

சேமிப்புக் கிடங்கில் வைக்க, விதையின் ஈரப்பதம் 8% இருக்க வேண்டும்.  குளிர்ப்பதனக் கிடங்கில் சேமிக்க வேண்டும். இல்லாவிடில், விதையின் உயிர்ப்பு மற்றும் முளைப்புத் தன்மை இல்லாமல் போய் விடும். விதைத் தரச்சான்று மற்றும் விதைச்சட்ட முறைப்படி விதைகளை விற்பனை செய்ய வேண்டும்.

சரியான நிலத்தேர்வு, விதை உற்பத்தி உத்திகளைக் கையாளுதல் மற்றும் மரபுவழித் தனித்தன்மையைக் காத்தால், வீரிய ஒட்டு மக்காச்சோள விதைகளை அதிகமாக உற்பத்தி செய்யலாம்.


விதை உற்பத்தி GOPI KRISHNAN 1 e1630388245443

முனைவர் .கோபிகிருஷ்ணன்,

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம்,

விரிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading