காய்கறிப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை இயற்கை முறைகளில் கட்டுப்படுத்துதல்!

காய்கறி HP 31e6353e5fee77eee5f445b67806f392

காய்கறிகளில் நமது உடல் இயங்கத் தேவையான நுண் சத்துகளும், வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் மிகுதியாக உள்ளன. எனவே, நம் அன்றாட உணவில் காய்கறிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, பூசணி, புடலை, பீர்க்கன், பாகல், அவரை, சேனை, முட்டைக்கோசு, காலிபிளவர், முள்ளங்கி, பீட்ரூட், முருங்கைக்கீரை போன்றவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் முக்கியக் காய்கறிகளாகும். இத்தகைய காய்கறிப் பயிர்களில் மகசூலைக் குறைக்கும் பூச்சிகளை, அங்கக முறையில் கட்டுப்படுத்தும் நவீன உத்திகளைக் காண்போம்.

காய்கறிப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் அங்கக முறையில், உழவியல், பொறியியல், உயிரியல் சார்ந்த தொழில் நுட்பங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன. கோடையுழவு, சரியான இரகத்தேர்வு, சரியான பட்டம், விதைநேர்த்தி, நோ;த்தி, ஊடுபயிர், கவர்ச்சிப் பயிர், மூடாக்கு, மண் அணைத்தல், பூச்சிகளின் மாற்றுப் பயிர்களைக் கண்டறிந்து களைதல், சரியான சத்து மற்றும் பாசன நிர்வாகம் போன்றவை சிறந்த உழவியல் உத்திகளாகும்.

அங்ககக் காய்கறிப் பயிர்களில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் கண்காணிப்பு மிகவும் அவசியம். இதற்கு, விளக்குப்பொறி, ஒட்டும் பொறி, இனக்கவர்ச்சிப் பொறி போன்ற கருவிகள் பயன்படும். இனவிருத்திக்குக் காரணமாக இருக்கும் தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழித்திட மாலை 6.30 முதல் இரவு 10.30 மணி வரை விளக்குப்பொறியைப் பயன்படுத்தலாம்.

ஒரு அந்துப்பூச்சி 50 முதல் 200 முட்டைகள் வரை இடும். ஒரு தோட்டத்துக்கு ஒரு விளக்குப்பொறி போதும். பலவகை விளக்குப் பொறிகள் இருந்தாலும், மண்ணெண்ணெய் விளக்குப்பொறி, மின்சார விளக்குப்பொறி, சூரிய விளக்குப்பொறி போன்றவை பூச்சிகளை நன்கு கட்டுப்படுத்தும்.

பொதுவாக நிறங்களுக்குப் பூச்சிகளைக் கவரும் தன்மையுண்டு. அதனால், மஞ்சள், வெள்ளை, நீலம், பச்சை ஆகிய நிறங்கள் தாய்ப்பூச்சிகளைக் கவர்ந்திடப் பயன்படுகின்றன. மஞ்சள் நிறமானது வெள்ளை ஈ, அசுவினி, இலைப்பேன், பூப்பேன் போன்ற பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். நீலம், வெள்ளை ஆகிய நிறங்கள், இலைப்பேன், பூப்பேன் போன்ற பூச்சிகளைக் கவந்திழுக்கும்.

சிறிய பிளாஸ்டிக் குடம், காலி பெயின்ட் டப்பா, பிளாஸ்டிக் மற்றும் தார்ப்பாலின்களைத் தேவையான அளவில் எடுத்துக் கொண்டு ஒட்டும் திரவத்தைத் தடவி ஒட்டுப்பொறியாகப் பயன்படுத்தலாம். வண்ண ஒட்டுப் பொறிகளைப் பத்து நாட்களுக்கு ஒருமுறை கவனித்து, ஒட்டுப் பசையைத் தடவி விட வேண்டும். பூச்சிகளின் பார்வையில் நன்கு படும்படி, பயிரின் நுனியிலிருந்து சுமார் ஒரு அடி உயரத்தில் இப்பொறிகளை வைக்க வேண்டும். பூச்சிகளைக் கண்காணிக்க ஏக்கருக்கு 5 வீதமும், அவற்றைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 25 வீதமும் வைக்க வேண்டும்.

நிலத்தில் பூச்சிகள் இருப்பதை, இனக்கவர்ச்சிப் பொறிகள் மூலமும் அறியலாம். இந்தப் பொறிகளில் தாய்ப் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் வாசனைத் திரவம் இருக்கும். இதை இனக்கவர்ச்சித் திரவம் என்று அழைப்பர். இந்தத் திரவம் பூச்சிகளால் சுரக்கப்படும் ஒருவகை வாசனைப் பொருளாகும்.

ஒருவகைப் பூச்சிகளால் சுரக்கப்படும் இந்தத் திரவம், அதே இனத்தைச் சேர்ந்த பூச்சிகளைக் கவர்ந்திழுக்க உதவுகிறது. சுற்றுச்சூழலில் வெளியாகும் இந்தத் திரவ வாசம் பரவும் இடங்களிலுள்ள பூச்சிகள், தமது உணர்வுக் கொம்புகள், உணர் முடிகளால் நுகர்ந்து ஒன்றோடு ஒன்று தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றன. இந்த அடிப்படையில், பூச்சிகளைக் கவர்ந்து அழித்து அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுவது தான் இனக்கவர்ச்சிப் பொறி.

இனக்கவர்ச்சிப் பொறிகள் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. புனல் வடிவப் பொறியானது பெருவகை அத்துப் பூச்சிகளைக் கவரவும், குடுவை வகைப் பொறியானது பழ ஈக்களைக் கவரவும், முக்கோண வடிவப் பொறியானது சிறுவகை அந்துப் பூச்சிகளைக் கவரவும், தட்டு வகைப் பொறியானது கத்தரிக்காய்ப் புழுக்களை உருவாக்கும் பூச்சிகளைக் கவரவும் பயன்படுகின்றன.

நிலங்களில் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, ஏக்கருக்கு 1-3 இனக்கவர்ச்சிப் பொறிகள் போதும். இவற்றை 60 மீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும். பூச்சிகளைக் கூட்டமாக கவர்ந்து அழிக்க, ஏக்கருக்கு 5-10 பொறிகள் தேவைப்படும். இவற்றை 40 மீட்டர் இடைவெளியில், பயிர்களை விட ஒரு அடி உயரத்தில் வைக்க வேண்டும். பயிர்கள் வளர வளர, இனக்கவர்ச்சிப் பொறிகள் இருக்கும் உயரத்தையும் கூட்ட வேண்டும்.

புடல், பாகல், பீர்க்கன் போன்ற பந்தல் காய்கறிப் பயிர்களைத் தாக்கும் பழ ஈக்களைக் கட்டுப்படுத்தும் குடுவை இனக்கவர்ச்சிப் பொறிகளை பந்தலிலேயே தொங்கவிட வேண்டும். இந்தப் பொறிகளைப் பயன்படுத்தி, கத்தரிக்காய்த் துளைப்பான், தக்காளிப்பழத் துளைப்பான், வெண்டைத் துளைப்பான், பூசணிக் குடும்பக் காய்கறிப் பயிர்களைத் தாக்கும் பழ ஈ, முட்டைக்கோசு, பூக்கோசு, முள்ளங்கியைத் தாக்கும் வைரமுதுகுப் பூச்சி ஆகியவற்றின் தாய்ப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

இனக்கவர்ச்சிப் பொறிகளை வாரம் ஒருமுறை கண்காணிக்க வேண்டும். பொறிகளில் பூச்சிகள் மற்றும் இலைச் சருகுகள் நிரம்பியிருப்பின் அவற்றைச் சுத்தப்படுத்த வேண்டும். இனக்கவர்ச்சிப் பொறிகளின் செயல் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப வேறுபடும். மிதமான தட்ப வெப்பத்தில் சிறப்பாகச் செயல்படும். வெப்பநிலை 35 டிகிரி செல்சியசுக்கு மேலிருந்தால், அத்திரவம் வேகமாக ஆவியாகி விடும். வெப்பநிலை 10 டிகிரி செல்சியசுக்குக் கீழ் இருப்பின் மிகவும் குறைந்த அளவில் திரவமாக வெளிப்படும்.

எனினும், இத்தகைய குளிர்ச்சியான நிலைகளில் பூச்சிகளின் பெருக்கமும் குறைவாக இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை. இனக்கவர்ச்சித் திரவம் 45 நாட்களுக்குச் சிறப்பாகச் செயல்படும். பூச்சிகளைக் கவரும் தன்மை குறைந்தால், இனக்கவர்ச்சித் திரவத்தை மாற்ற வேண்டும்.

அங்கக வேளாண்மையில் பாரம்பரிய இரகங்களும், மேம்படுத்தப்பட்ட இரகங்களும், வீரிய ஒட்டு இரகங்களும் பயன்படுத்தப்படுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரகங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வீரிய ஒட்டு இரகங்களை விட, இரகங்கள் மற்றும் பாரம்பரிய இரகங்களில் இயல்பாகவே பூச்சிகளை எதிர்க்கும் திறன் இருப்பதால், அந்தந்த இடத்துக்கு ஏற்ற இரகங்களைப் பயிரிடுவது சிறந்தது. முக்கியப் பூச்சிகளை எதிர்க்கும் திறனுள்ள மேம்படுத்தப்பட்ட காய்கறி இரகங்கள், பல்வேறு பல்கலைக் கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

ஒரு பயிருடன் வேறு குடும்பத்தைச் சார்ந்த பயிரை இடைப்பயிராக இடுவது ஊடுபயிர் சாகுபடி எனப்படுகிறது. ஊடுபயிர்களின் இலை மற்றும் தண்டு உரோமச் சுரப்பிகளில் சுரக்கும் திரவங்கள், பூச்சிகளின் இனப்பெருக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. சில ஊடுபயிர்கள் தீங்கு செய்யும் பூச்சிகளுக்கு ஒவ்வாத நிலையில் அமைந்து, அவற்றை நிலத்தில் இருந்து வெளியேறச் செய்கின்றன.

குறிப்பிட்ட பூச்சியினம் ஒன்றுக்கும் மேற்பட்ட தாவரயினங்களை உண்ணும் என்றாலும், அவை மிகவும் விரும்பி உண்பது குறிப்பிட்ட தாவரமாகத் தான் இருக்கும். அந்தப் பயிர் கவர்ச்சிப் பயிர் எனப்படும். இத்தகைய கவர்ச்சிப் பயிர்களை வரப்புகளில் அல்லது பயிர்களுக்கு இடையில் இட்டுப் பூச்சிகளைக் கவரச் செய்து அழிப்பதன் மூலம், முக்கியப் பயிரைப் பாதுகாக்கலாம்.

இவ்வகையில், தக்காளி, மிளகாய், வெண்டை, பூசணிக் குடும்பக் காய்கறிகள், முட்டைக்கோசு, பூக்கோசு, பீட்ரூட், முள்ளங்கி போன்ற பயிர்களைத் தாக்கும் அமெரிக்கன் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்த, செண்டுமல்லியைப் பொறிப்பயிராகப் பயிரிடலாம்.

வரப்புப் பயிர் சாகுபடியானது அங்ககக் காய்கறித் தோட்டங்களில் பூச்சிகளை மட்டுப்படுத்தும் சிறந்த உத்தியாகும். காய்கறிப் பயிர்களின் வரப்பு ஓரங்களில், சோளம், மக்காச்சோளம், கம்பு, தக்கைப்பூண்டு போன்ற வேகமாக வளரும் வேறு குடும்பத்தைச் சார்ந்த பயிர்களை 2-4 வரிசைகளில் அடர்த்தியாகவும், வரிசையாகவும் விதைத்து, பூச்சிகள் நிலத்தில் நுழைவதைக் குறைக்கலாம். இதனால், காய்கறிப் பயிர்களில் வைரஸ் நோயைப் பரப்பும் சாறுறிஞ்சு ஊடகப் பூச்சிகளைக் குறைத்து, வைரஸ் நோய் பரவுவதைக் குறைக்கலாம்.

உயிருள்ள ஜீவன்களைக் கொண்டு பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது, உயிரியல் முறைப் பூச்சி மேலாண்மை ஆகும். இவற்றில் ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள் மற்றும் நுண்ணுயிரிகள் அடங்கும். தீமை செய்யும் நச்சுகளைப் பண்ணைகளில் பயன்படுத்தாமல் இருந்தாலே, பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் இயற்கையாகவே குறைந்து விடும். மேலும், தீய பூச்சிகளுக்கு நிகராக நன்மை செய்யும் பூச்சிகளும் இருக்கும்.

தீய பூச்சிகளும், நல்ல பூச்சிகளும் 4:1 என்னும் விகிதத்தில் இருக்கும் நிலத்தில், தீய பூச்சிகளை அழிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய அவசியமே ஏற்படாது. மேலும், இத்தகைய நிலத்தில் தீமை செய்யும் பூச்சிகளுக்கு நோய்களை உருவாக்கும் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஆக்டினோமைசிஸ் போன்ற நுண்கிருமிகள் திறமையாக இயங்கி நோய்களை ஏற்படுத்தி அப்பூச்சிகளைக் கொன்று விடும்.

டிரைக்கோகிரம்மா, பிரக்கன், அசிரோபேகஸ், என்கார்சியா போன்ற ஒட்டுண்ணிகளும், பச்சைக் கண்ணாடி இறக்கைப்பூச்சி, கிரிப்டோலிமஸ், பொறிவண்டு போன்ற இரை விழுங்கிப் பூச்சிகளும் பயிர்களுக்கு நன்மை செய்யக் கூடியவை. இவை ஆய்வுக்கூடங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. டிரைக்கோகிரம்மா என்பது சிறிய குளவி வகை முட்டை ஒட்டுண்ணியாகும். இது, தீமை செய்யும் தாய் அந்துப் பூச்சியின் முட்டைகளில் தனது முட்டைகளை இட்டு அவற்றை அழித்து விடும்.

பிரக்கான் புழு ஒட்டுண்ணி வகையாகும். இது, தீமை செய்யும் புழுக்களில் தனது முட்டைகளை இட்டு புழுப் பருவத்திலேயே அவற்றைக் கொன்று விடும். இதைப் போல, அசிரோபேகஸ் ஒட்டுண்ணியானது, கத்தரி, தக்காளி, வெண்டை, மிளகாய், தண்டுக்கீரை போன்ற காய்கறிப் பயிர்களில் சாற்றை உறிஞ்சிச் சேதப்படுத்தும் பப்பாளி மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. என்கார்சியா மெல்லிய உடலைக் கொண்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணியாகும். இது, வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

பச்சைக் கண்ணாடி இறக்கைப் பூச்சியானது, போன்ற தத்துப்பூச்சிகள், அசுவினி, இலைப்பேன், வெள்ளை ஈ போன்றவற்றையும், இவற்றின் முட்டைகள் மற்றும் குஞ்சுகளையும் உண்டு அழித்து விடும். கிரிப்டோலிமஸ் பொறிவண்டானது, மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் சிறந்த இரை விழுங்கி. இதன் குஞ்சுகள் மாவுப்பூச்சியைப் போலவே இருக்கும். மாவுப்பூச்சி ஒரே இடத்திலேயே இருக்கும். ஆனால், கிரிப்டோலிமஸ் குஞ்சுகள் அங்கங்கே நகரும். மேலும், இவை மாவுப்பூச்சியை விடப் பெரியளவில் இருக்கும்.

நுண்ணுயிர்க் கொல்லியான பேசில்லஸ் வகை பாக்டீரியா, பட்டாம் பூச்சிப் புழுக்களை அழிக்கப் பயன்படுகிறது. பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்னும் பாக்டீரியா, புழுக்களின் செரிமான மண்டலத்தை அடைந்ததும், டெல்டா என்டோடாக்சின் என்னும் வேதிப்பொருளை உண்டாக்கி வயிற்று நஞ்சாக்கி, புழுக்களை அழிக்கிறது.

மெட்டாரைசியம், பெவேரியா, வெர்ட்டிசிலியம், இர்சுடெல்லா, பெசிலோமைசிஸ், நுமேரியா போன்ற பூஞ்சைகள், காய்கறிப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மெட்டாரைசியம், வெள்ளை வேர்ப்புழு, வெட்டுக்கிளி, கரையான் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பெவேரியா, வண்டு மற்றும் பட்டாம் பூச்சியினப் புழுக்களையும், சாற்றை உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது. வெர்ட்டிசிலியம் மூலம் செதில் பூச்சி, மாவுப்பூச்சி, கறுப்பு ஈ, அசுவினி, இலைப்பேன் போன்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். நுமேரியாவைக் கொண்டு, பட்டாம் பூச்சியினப் புழுக்களையும், இர்சுடெல்லாவைக் கொண்டு, சிலந்தி வகைப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம்.

என்.பி.வி. வைரஸ் பூச்சிக் கட்டுப்பாட்டில் சிறந்து விளங்குகிறது. இதன் மூலம், பட்டாம் பூச்சியினப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். இதனால் தாக்கப்பட்ட புழுக்கள் இறந்து தலைகீழாகத் தொங்கும். இப்படி, நிலத்தில் இயற்கையாக இறக்கும் 100 புழுக்களைச் சேகரித்து அரைத்து நீரில் கலந்து பயிரில் தெளிக்க வேண்டும்.

தாவரப் பூச்சி விரட்டிகளால் பெரும்பாலும் பூச்சிகள் எதிர்ப்புத் திறனைப் பெறுவதில்லை. மேலும், இவற்றிலுள்ள நச்சுகள் எளிதில் முறியும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படுவதில்லை. வேம்பு, நொச்சி, ஆடாதொடா, எருக்கு, ஊமத்தை, துளசி, புங்கம், இலுப்பை, நித்திய கல்யாணி, சோற்றுக் கற்றாழை, அரளி, ஆமணக்கு, ஆவாரை, கற்பூரவள்ளி,

மலைவேம்பு, நிலவேம்பு, சீத்தா, கள்ளி, காட்டாமணக்கு, சீமைக்கருவேல், பூவரசு, எட்டி, இஞ்சி, பூண்டு, மிளகாய், பாகல், வசம்பு, தங்கரளி, பிரண்டை, பெருங்காயம், சிறியாநங்கை, செண்டுமல்லி, எலுமிச்சை, நுனா, மருதாணி, செம்பருத்தி, பப்பாளி, முருங்கை, சாமந்தி போன்றவை குறிப்பிடத் தக்க பூச்சிவிரட்டித் தாவரங்கள் ஆகும்.

முக்கோணக் குறியீட்டுடன் கூடிய, சுற்றுச்சூழலைப் பாதிக்காத பூச்சிக் கொல்லிகளான ஸ்பைனோசாட், அவர்மெக்டின், அபாமெக்டின், எமாமெக்டின் பென்சோயேட் போன்றவற்றைப் பயன்படுத்தியும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.


காய்கறி Narayanan e1645014878842

ப.நாராயணன்,

தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம்,

கீழ்நெல்லி, திருவண்ணாமலை- 604 410.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading