கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019
உலகளவில் சாகுபடி செய்யப்படும் தென்னை மரங்கள், கோடிக்கணக்கான மக்களின் பண்பாடு, சமூகம், பொருளாதார வாழ்வியலில் முக்கியப் பங்காற்றுகின்றன. தேங்காய்க் கொப்பரை, எண்ணெய் ஆகியவை மட்டுமே வணிகப் பொருள்களாக இருந்த நிலையில் இப்போது, தேங்காய்த் துருவல், பால்பொடி, தேங்காய் நார், சிரட்டை போன்றவையும் வணிகப் பொருள்களாக மாறியுள்ளன.
இந்தியாவில் 20.39 இலட்சம் எக்டரில் தென்னை சாகுபடி உள்ளது. உற்பத்தித் திறன் எக்டருக்கு 10,700 காய்களாகும். தமிழகத்தில் 4.65 இலட்சம் எக்டரில் தென்னை சாகுபடி உள்ளது. நம் மாநிலத்தின் உற்பத்தித் திறன் எக்டருக்கு 14,873 காய்களாகும்.
கோவை, திருப்பூர், தஞ்சை, கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் தென்னை சாகுபடி உள்ளது.
தென்னை மரபியல் மற்றும் இரக மேம்பாடு ஆய்வு 1916 இல் கேரள மாநிலம் நைலேஸ்வரில் தொடங்கியது. இதுவே உலகின் முதல் ஆராய்ச்சி மையமாகும். காயாங்குளத்தில் 1947 இல் கேரள வாடல் நோய் ஆய்வு மையம் தொடங்கப்பட்டது.
பின்னர் கேரளத்தில் குமரக்கோம், பலராமபுரம் ஆகிய இடங்களில் கேரள வாடல் நோய் ஆய்வுக்காக, மண்டல ஆய்வு மையங்கள் தொடங்கப்பட்டன. இதைப் போல, கர்நாடகத்தில் அரிசிக்கரை, ஆந்திரத்தில் அம்பாஜிப்பேட்டை, மராட்டியத்தில் இரத்தினகிரி ஆகிய இடங்களில் மண்டல ஆராய்ச்சி நிலையங்கள் தொடங்கப்பட்டன.
தமிழகத்தில் 1958 இல் வேப்பங்குளத்தில் மண்டலத் தென்னை ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டது. இங்குத் தென்னை உழவியல், மரபியல், வினையியல் மற்றும் நோய்கள், பூச்சிகள் குறித்த ஆய்வுகள் நடைபெறுகின்றன.
இதைத் தொடர்ந்து கோவை மாவட்டம் ஆழியாரில் தென்னை ஆராய்ச்சி நிலையம் 1963 இல் தொடங்கப்பட்டது.
தென்னை இரகங்கள்
கொக்கோஸ் என்னும் பெரும் பிரிவில் நியூசிபெரா என்னும் சிற்றினத்தைச் சேர்ந்த தென்னை வகையில் நெட்டை, குட்டை என்னும் இரண்டு இரகங்கள் உள்ளன.
நெட்டை இரகம்
நெட்டை இரகமானது பருமனான தண்டுடன் நீண்டு வளரும். இதன் தூர் சற்றுப் பெரிதாகவும் அதிக வேர்களையும் கொண்டிருக்கும். ஓலைகள் தடித்து நீண்ட மட்டைகள், சற்றுப் பெரிய ஓலை இணுக்குகளுடன் இருக்கும். பருப்பு அதிகக் கனத்துடன் கடினமாக இருக்கும்.
உலர்ந்த பருப்பில் 66-70% எண்ணெய்ச் சத்து இருக்கும். இதன் பூம்பாளைகளில் 36-40 கிளைப் பூந்தண்டுகள் இருக்கும். எ.கா: ஜாவா, அந்தமான் ஜயன்ட், இலட்சத்தீவு சாதா, பிலிப்பைன்ஸ் மற்றும் தென்னமெரிக்க சான் ராமன், சான் பிளாஸ் ஆகியன எண்ணெய்ச்சத்து அதிகமுள்ள இரகங்களாகும்.
குட்டை இரகம்
இந்த இரகம் சற்றுக் குட்டையாக வளரும். தண்டு மற்றும் ஓலையின் அளவு சற்றுச் சிறியதாகவும், தூர் சற்றுச் சிறுத்தும், நெட்டை இரகத்தைவிடக் குறைந்த வேர்களை உடையதாகவும் இருக்கும். இந்தத் தென்னையில் 3-3.5 ஆண்டுகளில் முதல் பாளை வெளிவரும்.
இதன் பூங்குலைகளில் நெட்டை இரகத்தைவிட அதிகமான பெண் பூக்கள் காணப்படும். தேங்காயின் நார்ப்பகுதி சிறுத்தும், பருப்பின் எடையும் எண்ணெய்ச் சத்தும் குறைந்து இருக்கும். இந்த இரகத் தேங்காய்கள் அதிகளவில் இளநீருக்காகப் பயன்படுவதால் இது, இளநீர் இரகம் என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் வாயிலாக, வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து இரண்டு இரகங்களும், ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து மூன்று இரகங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் சிறப்புகளைப் பார்ப்போம்.
வி.பி.எம்.3
ஐந்து ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும். சராசரியாக ஒரு மரம் ஆண்டுக்கு 92 காய்களைத் தரும். காயும் கொப்பரையும் பெரிதாக இருக்கும். கொப்பரை 176 கிராம் இருக்கும். எண்ணெய்ச்சத்து 70% இருக்கும்.
வி.பி.எம்.4 (கேரளம்)
ஐந்து ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும். சராசரியாக ஒரு மரம் ஆண்டுக்கு 80 காய்களைத் தரும். கொப்பரை 176 கிராம் இருக்கும். எண்ணெய்ச்சத்து 68% இருக்கும். வறட்சியைத் தாங்கி வளரும்.
ஏ.எல்.ஆர்.1
அதிக மகசூலைக் குறுகிய காலத்தில் தரும். சராசரியாக ஒரு மரம் ஆண்டுக்கு 126 காய்களைத் தரும். அதிகக் கொப்பரையைத் தரும். எண்ணெய்ச்சத்து 66.5% இருக்கும்.
ஏ.எல்.ஆர்.2
இது ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய வெளியீடாகும். ஐந்து ஆண்டுகளில் காய்க்கும். சராசரியாக ஒரு மரம் ஆண்டுக்கு 109 காய்களைக் கொடுக்கும். கொப்பரை 135 கிராம் இருக்கும். எண்ணெய்ச்சத்து 66.7% இருக்கும். வறட்சியைத் தாங்கி வளரும்.
ஏ.எல்.ஆர்.3
இது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வெளியீடாகும். மூன்றாம் ஆண்டிலிருந்து காய்க்கும். இளநீருக்கு ஏற்றது. 420 மில்லி இளநீர் இருக்கும். நீரில் கரையும் சர்க்கரையின் அளவு 5.2% ஆகும். சராசரியாக ஒரு மரம் ஆண்டுக்கு 86 காய்களைத் தரும்.
அதிகளவாக ஆண்டுக்கு 121 காய்கள் கிடைக்கும். எண்ணெய்ச்சத்து 56% இருக்கும். ஈரியோபைட் சிலந்தித் தாக்குதலை எதிர்க்கும்.
வீரிய ஒட்டு இரகம்
தென்னையின் வளர்ச்சி வேகம் மற்றும் அதிக விளைச்சல் தரும் குணம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் உருவாக்கும் கன்றுகளை, ஒட்டு இரகக் கன்றுகள் என அழைக்கிறோம். இந்த ஆராய்ச்சி 1932 ஆம் ஆண்டு பழைய தமிழ் மாநிலத்தின் மலபார்ப் பகுதியில் நைலேஸ்வர் என்னும் இடத்தில் தொடங்கப்பட்டது.
கரு ஒட்டு மூலம் கன்றுகளை உருவாக்க, கலப்பற்ற நெட்டை மற்றும் குட்டை இரக மரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், நெட்டை மரங்கள் பெரும்பாலும் அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் இனப்பெருக்கம் செய்வதால், மரபணுக் கலப்பற்ற மரத்தேர்வு அவசியம்.
எனவே, கலப்பற்ற நெட்டை மற்றும் குட்டை இரகங்கள் கிடைப்பதும் அரிதாவதால், தற்போது உருவாக்கப்படும் ஒட்டுத் தென்னையில் நாம் எதிர்பார்க்கும் எல்லா வீரியக் குணங்களும் இணைந்து கிடைப்பதில்லை. இதனால் ஓர் ஒட்டைச் செய்ய, கலப்பற்ற ஆண், பெண் தென்னைகளைத் தேர்ந்தெடுப்பது தலையாய கடமையாகும்.
இந்தியாவின் முதல் நெட்டை குட்டை ஒட்டு இரகமான வி.எச்.சி.1 1982ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது. மேலும், வி.எச்.சி.2, வி.எச்.சி.3, வி.எச்.சி.5 ஆகிய வீரிய ஒட்டு வகைகள், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளன.
வி.எச்.சி. 1
பெற்றோர்: கிழக்குக் கடற்கரை நெட்டை x மலேயன் பச்சைக் குட்டை. நான்காம் ஆண்டிலிருந்து காய்க்கும். சராசரியாக ஒரு மரம் ஆண்டுக்கு 98 காய்களைத் தரும். கொப்பரை 135 கிராம் இருக்கும். எண்ணெய்ச்சத்து 70% இருக்கும்.
வி.எச்.சி. 2
பெற்றோர்: கிழக்குக் கடற்கரை நெட்டை x மலேயன் மஞ்சள் குட்டை. நான்காம் ஆண்டிலிருந்து காய்க்கும். சராசரியாக ஒரு மரம் ஆண்டுக்கு 107 காய்களைத் தரும். கொப்பரை 152 கிராம் இருக்கும். எண்ணெய்ச்சத்து 69% இருக்கும்.
வி.எச்.சி. 3
பெற்றோர்: கிழக்குக் கடற்கரை நெட்டை x மலேயன் ஆரஞ்சுக் குட்டை. நான்காம் ஆண்டிலிருந்து காய்க்கும். சராசரியாக ஒரு மரம் ஆண்டுக்கு 127 காய்களைத் தரும். கொப்பரை 162 கிராம் இருக்கும். எண்ணெய்ச்சத்து 70% இருக்கும். இது வறட்சியைத் தாங்கும் இரகமாகும்.
வி.பி.எம். 5
இது இந்தியாவின் முதல் நெட்டை x நெட்டை ஒட்டு இரகமாகும். பெற்றோர்: இலட்சத்தீவு நெட்டை x கொச்சின் சைனா நெட்டை. 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நான்காம் ஆண்டிலிருந்து காய்க்கும். சராசரியாக ஒரு மரம் ஆண்டுக்கு 161 காய்களைத் தரும். கொப்பரை 150 கிராம் இருக்கும். எண்ணெய்ச்சத்து 70% இருக்கும்.
முனைவர் அ.சுப்பிரமணியன்,
அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி, திருச்சி. முனைவர் க.செ.விஜய் செல்வராஜ், தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம்.