கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021
சோளம், மக்களின் முக்கிய உணவுப் பொருளாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகின்றன. இந்தியாவில் நெல் மற்றும் கோதுமைக்கு அடுத்த முக்கிய உணவுப் பொருளாகச் சோளம் உள்ளது.
இதில் அதிகளவில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, உயிர்ச் சத்துகள், தாதுப்புகளும், குறைந்தளவில் கொழுப்பும் உள்ளன. சோளப்பயிர் எல்லா மண் வகைகளிலும் தட்பவெப்ப நிலைகளிலும் நன்றாக வளரும். மக்காச்சோளத்தை விட வறட்சியைத் தாங்கி வளரும்.
இந்தியாவில் காரிப் பருவத்தில் சுமார் 28.92 இலட்சம் எக்டரிலும், ராபி பருவத்தில் சுமார் 46.39 இலட்சம் எக்டரிலும் சோளம் விளைகிறது. மராட்டியத்தில் 54%, கர்நாடகத்தில் 18%, இராஜஸ்தானில் 8%, மத்திய பிரதேசத்தில் 6%, ஆந்திரத்தில் 4% அளவில் சோள சாகுபடி உள்ளது.
தமிழ்நாட்டில் 3.2 இலட்சம் எக்டரில் சோளம் பயிரிடப்படுகிறது. தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுமார் 1.2 இலட்சம் எக்டரில், தானியம் மற்றும் தீவன நோக்கில் சோள சாகுபடி நடந்து வருகிறது.
இதன் சராசரி மகசூல் எக்டருக்கு 929 கிலோவாகும். சோளம் மனித உணவாகவும், முட்டைக்கோழி உணவாகவும், லைசின், மெத்தியோனின் போன்ற புரத அமிலங்கள் 0.13% வீதம் இருப்பதால், பன்றி உணவாகவும் பயன்படுகிறது.
இதில் டேனின் குறைவாக இருப்பதால், சிறந்த கால்நடைத் தீவனமாகவும் உள்ளது. பெருகி வரும் மக்களுக்குத் தேவையான உணவு, குறைந்து வரும் நீராதாரம், நிலப்பரப்பு, தீவனத்தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் போது, சோளத்தின் தேவை பல மடங்குகளாக உயரும்.
கோவில்பட்டி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து இதுவரை 12 சோள இரகங்கள், வீரிய ஒட்டு இரகம் ஒன்று என வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் மானாவாரிக்கு ஏற்ற கே.5, செஞ்சோளமான கே.6, தானியச் சோளமான கே.8, தென்காசி வெள்ளைச் சோளமான கே.9, கே. வயடட் ஆகிய இரகங்கள் தானிய இரகங்களாகும்.
கே.7, 10, 11 ஆகியன மானாவாரியில் விளையும் தீவன இரகங்கள் ஆகும். இப்போது, தானியம் மற்றும் தட்டையைக் கருத்தில் கொண்டு கே.12 இரகம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது, எஸ்.பி.வி.772, எஸ்.35-29 ஆகிய ஒட்டு இரகங்கள் மூலம் உருவாக்கப்பட்ட இரகமாகும்.
கே.12 இரகத்தின் சிறப்புகள்
புரட்டாசிப் பட்டத்தில் மானாவாரியில் பயிரிட ஏற்றது. 95 நாட்களில் விளைவதால், வடகிழக்குப் பருவமழையில் நன்கு வளர்ந்து, எக்டருக்கு 3 டன் மகசூலைக் கொடுக்கும். இது, கே.8 இரகத்தின் மகசூலை விட 16.9% அதிகமாகும். எக்டருக்கு 12 டன் தட்டை கிடைக்கும். இது, கே.8 இரகத்தின் மகசூலை விட 34.2% கூடுதலாகும்.
தானிய இரகம் கே.8
இது, 1989 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 95-100 நாட்களில் விளையும். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் விதைக்கலாம். 45×15 செ.மீ. இடைவெளியில், அதாவது, சதுர மீட்டருக்கு 15 செடிகள் கிடைக்கும் வகையில் விதைக்க வேண்டும்.
எக்டருக்கு 2,240 கிலோ தானியமும், 7,300 கிலோ தட்டையும் கிடைக்கும். கதிர்நாவாய்ப் பூச்சிகளின் தாக்குதலையும், வறட்சியையும் தாங்கி வளரும். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மானாவாரியில் பயிரிட ஏற்றது.
தீவனச்சோள இரகம் கே.11
இது, 2000 இல் வெளியிடப்பட்டது. 110-115 நாட்களில் விளையும். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், 45×15 செ.மீ. இடைவெளியில், அதாவது, சதுர மீட்டருக்கு 15 செடிகள் கிடைக்கும் வகையில் விதைக்க வேண்டும். எக்டருக்கு 1,560 கிலோ தானியமும், 10,360 கிலோ தட்டையும் கிடைக்கும்.
இதில் 4.44% புரதம் உள்ளது. ஹைட்ரஜன் தன்மை 50 பிபிஎம் உள்ளது. குருத்துப்புழு, கதிர்ப்பூச்சி மற்றும் அடிச்சாம்பல் நோயைத் தாங்கி வளரும். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மானாவாரியில் பயிரிட ஏற்றது.
தானியம் மற்றும் தீவன இரகம் கே.12
இது, 2015 இல் வெளியிடப்பட்டது. 95 நாட்களில் விளையும். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், 45×15 செ.மீ. இடைவெளியில், அதாவது, சதுர மீட்டருக்கு 15 செடிகள் கிடைக்கும் வகையில் விதைக்க வேண்டும். எக்டருக்கு 3,123 கிலோ தானியமும், 11,600 கிலோ தட்டையும் கிடைக்கும்.
வறட்சியைத் தாங்கி வளரும். குருத்து ஈ, தண்டுத் துளைப்பானை மிதமாகத் தாங்கி வளரும். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மானாவாரியில் பயிரிட ஏற்றது.
தானியம் மற்றும் தீவன இரகம் ஏ.பி.கே.1
இது, 1996 இல் வெளியிடப்பட்டது. 110 நாட்களில் விளையும். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், 45×15 செ.மீ. இடைவெளியில், அதாவது, சதுர மீட்டருக்கு 15 செடிகள் கிடைக்கும் வகையில் விதைக்க வேண்டும். எக்டருக்கு 2,619 கிலோ தானியமும், 8,090 கிலோ தட்டையும் கிடைக்கும்.
வறட்சியைத் தாங்கி வளரும். குருத்து ஈ, தண்டுத் துளைப்பானை மிதமாகத் தாங்கி வளரும். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மானாவாரியில் பயிரிட ஏற்றது.
தானியம் மற்றும் தீவன இரகம் கோ.32
இது, 2020 இல் வெளியிடப்பட்டது. 105-110 நாட்களில் விளையும். தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், 45×15 செ.மீ. இடைவெளியில், அதாவது, சதுர மீட்டருக்கு 15 செடிகள் கிடைக்கும் வகையில் விதைக்க வேண்டும்.
எக்டருக்கு 2,911 கிலோ தானியமும், 11.7 டன் தட்டையும் கிடைக்கும். வறட்சியைத் தாங்கி வளரும். குருத்து ஈ, தண்டுத் துளைப்பான், அடிச்சாம்பல் நோய் ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும்.
நன்மைகள்
சோளம், உடல் நலனுக்கான உணவாக, கால்நடை உணவாக, கோழித் தீவனமாகப் பயன்படுகிறது. மானாவாரியில் விளையும் பயிராக உள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், சோளத்தில் குளுட்டன் இல்லாததால் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
சோளத்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், தையாமின், பொட்டாசியம் போன்றவை, உடலுக்குத் தேவையான நோயெதிர்ப்புச் சக்தியைத் தருகின்றன.
கொழுப்பைக் கட்டுப்படுத்தும் சோளம், இதய நோய் வராமல் காக்கிறது. கோதுமை ஒவ்வாமை உள்ளோர்க்குச் சோளம் சிறந்த உணவாகும். மற்ற தானியங்களில் உள்ளதை விடச் சோளத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது. வேகமாகச் செரிக்க நார்ச்சத்து உதவுவதால், உடல் எடை குறைகிறது.
அரிசி, கோதுமையில் இருப்பதை விடச் சோளத்தில் புரதம் அதிகமாக உள்ளது. இது, குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும். 23 அமினோ அமிலங்களில் 21 வகைகள் அனைத்துத் தானியங்களிலும் உள்ளன. மீதமுள்ள லைசின், டிரிப்டோபன் ஆகியன, சோளத்திலும் கம்பிலும் மட்டுமே உள்ளன.
எனவே, சோளத்தையும் கம்பையும் உண்பதன் மூலம் இந்த இரண்டு அமினோ அமிலங்கள் நமது உடம்புக்குக் கிடைக்கும்.
சாகுபடி முறை
நிலம் தயாரித்தல்: கோடையில் சட்டிக் கலப்பையால் நிலத்தை ஆழமாக உழ வேண்டும். பிறகு, கொத்துக் கலப்பையால் 2-3 முறை உழுது புழுதியாக்க வேண்டும். எக்டருக்கு 8-10 டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். மேலும், எக்டருக்கு 4.5 கிலோ வீதம் திரம் என்னும் பூசணக்கொல்லியை மண்ணில் இடலாம்.
விதைக்கும் காலம்: வடகிழக்குப் பருவமழை தொடங்கும் செப்டம்பர் நான்காம் வாரம் தொடங்கி, அக்டோபர் முதல் வாரத்துக்குள் விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும். எக்டருக்கு 10 கிலோ விதை தேவைப்படும். 45×15 செ.மீ. இடைவெளியில், அதாவது, எக்டருக்கு 1,80,000 செடிகள் இருக்கும்படி விதைக்க வேண்டும்.
ஒரு கிலோ விதைக்கு 14 மில்லி இமிடாகுளோபிரிட், 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 3 கிராம் தையோமீத்தாக்சம் வீதம் கலந்து நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
உர நிர்வாகம்: எக்டருக்கு 86 கிலோ யூரியா, 250 கிலோ சூப்பர் பாஸ்பேட், 88 கிலோ பொட்டாசை அடியுரமாக இட வேண்டும். அடுத்து, 86 கிலோ யூரியாவை விதைத்த 30 நாளில் மேலுரமாக இட வேண்டும்.
களை நிர்வாகம்: பயிரின் தொடக்க வளர்ச்சிக் காலமான, விதைத்த 35 நாட்கள் வரை, நிலத்தில் களை இல்லாமல் இருக்க வேண்டும். இதற்கு, விதைத்ததும், எக்டருக்கு 500 கிராம் அட்ரசின் களைக்கொல்லி வீதம் தெளிக்கலாம். பிறகு, 20 நாட்கள் கழித்துக் கொத்தால் களைகளை நீக்க வேண்டும்.
ஊடுபயிர்: துவரை, பச்சைப்பயறு, சோயா மொச்சை, சூரியகாந்தி ஆகியவற்றை ஊடுபயிராக இடலாம். ஊடுபயிர் இடுவதாக இருந்தால் களைக்கொல்லியை இடக்கூடாது. இரண்டு வரிசை சோளப் பயிர்களுக்கு இடையே இரண்டு வரிசை தீவனத் தட்டைப் பயற்றை ஊடுபயிராக இட்டால் பசுந்தீவனம் கிடைக்கும்; மண்வளம் மேம்படும்; களை வளர்வது தடைபடும்.
பயிர்ப் பாதுகாப்பு
குருத்து ஈ: குருத்து ஈ ஒரு மாதப் பயிரைத் தாக்கும். புழுக்கள் குருத்தைத் தாக்கி அழுகிய பகுதியைத் தின்னும். நடுக்குருத்துக் காய்ந்து வதங்கி விடும். இதைக் கட்டுப்படுத்த, பருவமழை பெய்வதற்கு 7-10 நாட்களுக்கு முன் விதைக்க வேண்டும்.
எக்டருக்கு 10-12 கிலோ விதைகளை விதைக்க வேண்டும். விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். எக்டருக்கு 20 கிலோ கார்போபியூரான் குருணையை மணலில் கலந்து, விதைப்பின் போது அல்லது சிறு பயிராக இருக்கும் போது தெளிக்கலாம்.
தண்டுத் துளைப்பான்: பயிர்கள் முளைத்த இரண்டாம் வாரத்தில் இருந்து அறுவடை முடியும் வரையில் இதன் தாக்கம் இருக்கும். நடுக்குருத்துக் காய்ந்து விடும். வளர்ந்த பயிரின் குருத்தில் துளையிடுவதால், குருத்து முறிந்து விடும். அல்லது கதிர் பதராகி விடும்.
இதைக் கட்டுப்படுத்த, குருத்துகள் காய்ந்த பயிர்களை அறுத்து, தீயில் எரித்து, மற்ற பயிர்களுக்குப் பரவாமல் தடுக்க வேண்டும். விதைத்த 20-35 நாட்களில், எக்டருக்கு 8-12 கிலோ கார்போபியூரான் குருணை அல்லது கார்பரில் மருந்தை, நடுக்குருத்தின் உள்ளே இடலாம். தட்டைப் பயற்றை ஊடுபயிராக இடலாம்.
கதிர்நாவாய்ப்பூச்சி: முட்டைகளில் இருந்து வரும் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள், பால் பிடிக்கும் கதிர்களைத் தாக்கிச் சேதம் செய்யும். இதனால், கதிர்களில் மணிகள் பிடிக்காது. கதிரைத் தட்டினால் ஏராளமான குஞ்சுகளும் பூச்சிகளும் ஓடுவதைக் காணலாம்.
இதைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 25 கிலோ பத்து சத கார்பரில் மருந்தை எடுத்து, கதிர்கள் பூத்த ஒரு வாரத்தில் அவற்றின் மேல் படும்படி, அதிகாலை நேரத்தில் தூவ வேண்டும்.
கதிர்ப்பூசண நோய்: கதிர் வந்ததும் தோன்றும் இந்நோயால், கதிர் முழுவதும் கறுப்பு, வெள்ளை, சிவப்புப் போன்ற பல நிறங்களில் பூசணம் வளரும். இதனால் மணிகள் கெட்டு விடும்; முளைக்கும் திறன் குறையும்; தரமும் சத்துகளும் குறைவதால், தானியம் உண்ண இயலாததாகி விடும்.
இதைக் கட்டுப்படுத்த, டில்ட் என்னும் பூசணக் கொல்லியை 0.2 சதக் கரைசலாக எடுத்து, கதிர்கள் பூக்கும் போதும், அதைத் தொடர்ந்து பத்து நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.
அடிச்சாம்பல் நோய்: இதனால் தாக்கப்பட்ட இலைகள் வெளிர் பச்சையாக இருக்கும். இலைகளின் அடியில் வெண் பூசணம் காணப்படும். கதிர்கள் வராது. வந்தாலும் சிறு கதிராக வரும். மணிகள் பிடிக்கலாம் அல்லது பிடிக்காமலும் போகலாம்.
இதைக் கட்டுப்படுத்த, விதைப்பதற்கு முன் ஆழமாக உழ வேண்டும். ஒரு கிலோ விதைக்கு ஒரு கிராம் மெட்டாலக்சில் அல்லது ரிடோமில் வீதம் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். தொடர்ந்து ஒரு லிட்டர் நீருக்கு 3 மில்லி ரிடோமில் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
முனைவர் நா.மாலினி,
முனைவர் செ.ஹரிராமகிருஷ்ணன், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,
கோவில்பட்டி.