கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2022
உயிர்ப் பன்மயச் சூழலில் தாவரங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. முதல்நிலை உணவு உற்பத்தியாளர்களான தாவரங்கள் இல்லையெனில், இம்மண்ணில் மனிதர்களும் மற்ற விலங்குகளும் வாழ்வதற்கான வாய்ப்பு இல்லை.
எல்லோரும் உணவுக்கும் மற்ற தேவைகளுக்கும் தாவரங்களையே சார்ந்து வாழ்கிறோம். தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 6,000 தாவரச் சிற்றினங்கள் காணப்பட்டு, மரம், செடி, கொடி என வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
மனிதர்களின் உணவுக்காக, பணத்துக்காக எனப் பல்வேறு தாவரங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவற்றைத் தவிர சில தாவரங்களை நாம் கண்டு கொள்வதே இல்லை. இவை பெரும்பாலும் களைச்செடிகள் எனப் புறம் தள்ளப்படுகின்றன.
இவற்றில் பல மூலிகைகளாகவும், கீரைகளாகவும் உள்ளன. இந்தத் தாவரங்கள் மக்களுக்கு மட்டுமன்றி, மற்ற உயிரினங்களின் உணவுத் தாவரங்களாகவும் வாழிடங்களாகவும் உள்ளன. இதைப் புரிந்து கொள்ள நாம் மறுக்கிறோம்.
தாவரப் பன்மயத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தவும், அனைத்துத் தாவரங்களையும் விருப்பு வெறுப்பின்றி உற்று நோக்கவும், களைச் செடிகள் என ஒதுக்கப்பட்ட தாவரங்களைப் பற்றிய கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்வியலுக்குத் தேவையான பெரும்பாலான தாவரங்கள் காட்டுச் செடிகளாக உள்ளன. அவை நமக்குப் பயன்படாத காரணத்தால் அவற்றை அழிப்பதில் நாம் முனைப்புடன் இருக்கிறோம்.
இந்தத் தாவரங்கள் மற்ற உயிர்களுக்கு எவ்வளவு முக்கியமானவை என நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. எனவே, வண்ணத்துப் பூச்சிகள் விரும்பும் மற்றும் வாழும் தாவரங்களைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம்.
பொதுவாக வண்ணத்துப் பூச்சிகள் இரண்டு வகையான தாவரங்களில் வாழ்கின்றன. முதலாவது, nectar plants. அதாவது, வண்ணத்துப் பூச்சிகள் தங்கள் உணவுக்காகப் பயன்படுத்தும் தாவரங்கள். இவை, தேன் சுரக்கும் பூக்களை உடையவை.
பொதுவாகச் சாலை ஓரங்களிலும், பயிரிடப்படாத பகுதிகளிலும் காணப்படும் களைச்செடிகள் (weed plants) ஆகும்.
காலை நேரத்தில் இந்தச் செடிகளின் பூக்களில் வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிடுவதைக் காண முடியும். இவை, தங்கள் உணவுக்காக இந்தப் பூக்களில் உள்ள தேனை உறிஞ்சுகின்றன. மற்றபடி தமது வாழ்க்கைச் சுழற்சிக்காக இந்தத் தாவரங்களைப் பெரிதாக நாடுவதில்லை.
இந்தத் தாவர வகைகளில், பூக்கள் நிறைந்த உண்ணிப்பூ, கிளுகிளுப்பை, காஸ்மோஸ், தேள் கொடுக்கு, மூக்குத்திப்பூ, சிறுபூனைக்காலி, பட்டாசு செடி, எருக்கஞ்செடி போன்ற சாலையோரச் செடிகள் வெகுவாக இடம் பெறுகின்றன.
இரண்டாவது, உணவுத் தாவரமான Larval Host plants. இது வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்ய தேவைப்படும் தாவரங்களாகும். அதாவது, இவற்றில் வண்ணத்துப் பூச்சிகள் இடும் முட்டைகள் பொரிந்து, கம்பளிப் பூச்சிகளாக வளர்ந்து, அந்தச் செடிகளின் இலைகளை உண்டு, கூட்டுப் புழுக்களாக மாறி வண்ணத்துப் பூச்சிகளாக வளர்கின்றன.
நம் வீட்டில் வளர்க்கப்படும் அரளிச் செடிகளில் வண்ணத்துப் பூச்சிகள் முட்டைகளை இட்டு வண்ணத்துப் பூச்சியாக மாறுவதைக் காண முடியும். மேலும், இரத்த எருக்கு, எலுமிச்சை, கறிவேப்பிலை, கிளுகிளுப்பை, எருக்கஞ்செடி போன்றவை, குறிப்பிட்ட வண்ணத்துப் பூச்சிகளுக்கு உணவுத் தாவரங்களாக உள்ளன.
வண்ணத்துப் பூச்சிளோடு தொடர்புள்ள தாவரங்களைப் பற்றி அறிவதற்கு முன், இந்தப் பூச்சிகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்ப்பது இந்தப் பூச்சியினம்.
மற்ற பூச்சிகளை விட, வண்ணத்துப் பூச்சிகள் நம்மை ஈர்ப்பதற்குக் காரணம், அவற்றின் வண்ணச் சிறகுகள் தான்.
ஓவியம், கலை என அனைத்து வடிவங்களிலும் பறவைகளுக்கு ஈடான சிறப்பிடத்தை வண்ணத்துப் பூச்சிகள் பெற்றுள்ளன என்றால் அது மிகையாகாது. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையில் வண்ணத்துப் பூச்சிகள் பெரும் பங்காற்றுகின்றன.
தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட 326 வண்ணத்துப் பூச்சிகளும், புதுச்சேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணத்துப் பூச்சிகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவை சூழியலோடு மிகவும் நெருக்கமான தொடர்பைக் கொண்டவை.
வண்ணத்துப் பூச்சிகள் அழகிகள்(Swallowtails, Papilionidae), வெள்ளையன்கள், புல்வெளியான்கள், நுனிச் சிறகன்கன்கள் (whites & yellows, Pieridae), வரியன்கள், சிற்றினங்கள், வசீகரன்கள் (Brush-footed Butterflies, Nymphalidae), நீலன்கள் (Blues, Lycaenidae), தாவிகள், துள்ளிகள் (Skippers, Hesperiidae), உலோக மின்னிகள் (Metalmarks, Riodinidae) என, ஆறு குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.
பட்டாம் பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி நான்கு வளர்ச்சி நிலைகளைக் கொண்டுள்ளது. பெண் பட்டாம் பூச்சிகள் தமது உணவுத் தாவரங்களில் அல்லது அருகிலுள்ள இடங்களில் முட்டைகளை இடுகின்றன. இவற்றிலிருந்து வெளிவரும் புழுக்கள் அந்தத் தாவரங்களின் இலைகளை உண்கின்றன.
முழு வளர்ச்சி அடைந்த கம்பளிப் புழுக்கள் கூட்டுப் புழுக்கள் என்னும் அடுத்த நிலைக்கு மாறுகின்றன.
இறுதியாக, அந்தக் கூடுகளுக்குள் இறக்கைகள் உள்ள பட்டாம் பூச்சிகளாக உருமாறி வெளியே வருகின்றன. வண்ணத்துப் பூச்சிகளின் வகைப்பாட்டில் அந்துப்பூச்சிகள் என்னும் விட்டில் பூச்சிகளும் அடங்கும்.
வண்ணத்துப் பூச்சிகள் சூரிய ஒளி இருக்கும் போது சுறுசுறுப்பாக இயங்கும். பொதுவாகக் காலை 8 மணி முதல் 11 மணி வரை இவற்றை அதிகமாகக் காண முடியும். ஆனால், அந்துப் பூச்சிகளோ இரவில் தான் இயங்கும். மனித நடவடிக்கைகளால் உலகின் பல பகுதிகளில் பட்டாம் பூச்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
வாழ்விட அழிவு, பூச்சிக்கொல்லி, மற்ற மருந்துகளின் தாக்கம் மற்றும் மாசு தாக்கம், பருவநிலை மாற்றம் போன்றவை, வண்ணத்துப் பூச்சி இனங்களில் பல அழிந்து போகவும், மேலும் பல, கணிசமான சுற்றுச்சூழல் அழுத்தத்திற்கு உள்ளாகவும் காரணமாக உள்ளன.
வண்ணத்துப் பூச்சிகள் பல்லுயிர்ப் பெருக்கத்தின் முக்கியக் காரணியாக விளங்குகின்றன.
எனவே, அவற்றின் அழிவு, பல்லுயிர்ச் சூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். வண்ணத்துப் பூச்சிகளோடு தொடர்புடைய தாவரங்களின் அழிவு, வண்ணத்துப் பூச்சிகளின் அழிவாகும். எனவே, வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் அவற்றின் வாழ்வாதாரமாக விளங்கும் தாவரங்களை நேசிப்பது நமது கடமையாகும்.
து.சங்கரதேவி,
ஆசிரியை, அரசுத் தொடக்கப்பள்ளி,
அபிஷேகப்பாக்கம், புதுச்சேரி – 605 007.