கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி போன்றவை, கடற்கரைக் கால்வாய் மற்றும் ஏரிப்பாசனத்தின் அருகில் இருப்பதால், இங்குள்ள விளைநிலங்கள் பெரும்பாலும் களர் மற்றும் உவர் தன்மையுடன் உள்ளன. இவற்றில் நெல் தான் சாகுபடி செய்யப்படுகிறது. மண்ணிலுள்ள உப்புகள் நிலத்தின் மேற்பரப்பில் மிகுதியாகப் படிந்திருப்பதால், கோடையில் களர் உவர் தாக்கம் அதிகமாக இருக்கும். உவர் மண் மற்றும் உவர் களர் மண்ணில் கரையும் உப்புகள் மிகுந்திருப்பதால், பயிர்களின் வேர்களால் நிலத்திலுள்ள நீரை எடுத்துக்கொள்ள முடிவதில்லை. இந்த மண்ணில் நீரில் கரையும் உப்புகளும் மிகுந்திருப்பதால் பயிர் வளர்ச்சியும் பாதிக்கப்படும்.
இம்மண்ணில், பாக்டீரியா, பூசணம் மற்றும் ஆக்டினோமைசிடீசின் எண்ணிக்கையும், இயக்கமும் குறைவாக இருக்கும். தழை, மணி, இரும்பு, துத்தநாகம் ஆகிய சத்துகள் குறைந்திருப்பதால், பயிர்கள் காய்ந்து விடும். ஆனால், சீர்திருத்த முறைகளைப் பின்பற்றினால், களர் உவர் மண்ணை வளமிக்கதாக மாற்றலாம்.
சீர்த்திருத்த முறைகள்
நல்ல நீரைப் பயன்படுத்தி உப்புகளை வடிக்க வேண்டும். நீரை தேக்குவதற்கு முன் நிலத்தை நன்கு சமப்படுத்த வேண்டும். அல்லது சரிவுக்கு ஏற்றபடி, சிறிய பாத்திகளாகப் பிரித்து, நன்னீர் அல்லது மழைநீரை மூன்று நாட்களுக்குத் தேக்கி வைத்து உழுத பின், அந்நீரை வடிக்க வேண்டும். இதற்கு, முக்கிய மற்றும் பக்கக் கால்வாய்களை 60 செ.மீ. ஆழம், 45 செ.மீ. அகலத்தில் அமைக்க வேண்டும்.
அடுத்தடுத்த வாய்க்கால்களில் நீரைப் பாய்ச்சியும், உவர் நீரை நல்ல நீருடன் கலந்து பாய்ச்சியும் உவர் மண்ணைச் சீர்திருத்தலாம். பாத்திகளை உயரமாக அமைத்து, வரப்பு வாய்க்கால் முறையில் விதைக்கலாம். நான்கு அங்குல உயரத்துக்கு நீரைத் தேக்கி வைத்தால், நீர் கசிந்து வெளியேறும். இப்படி 3-4 முறை நீரைப் பாய்ச்சி வடியவிட வேண்டும்.
நெல் நடவுக்கு 10-15 நாட்களுக்கு முன், தொழுவுரம், தென்னைநார்க்கழிவு அல்லது எக்டருக்கு 5 டன் மண்புழு உரத்தை வயலில் இட வேண்டும். எக்டருக்கு 6.25 டன் கொளுஞ்சி, தக்கைப்பூண்டு கிளைரிசிடியா போன்ற பசுந்தாள் உரங்களை வளர்த்து மடக்கி உழலாம். எக்டருக்கு பத்துப் பொட்டல அசோஸ்பைரில்லம், பத்துப் பொட்டல பாஸ்போபாக்டீரியாவை, 25 கிலோ தொழுவுரம், 25 கிலோ பெருமணலுடன் கலந்து, நடவுக்கு முன் சீராகத் தூவ வேண்டும். அல்லது இருபது பொட்டல அசோபாசை இடலாம்.
நீரின் உட்புகு திறன் மற்றும் காற்றோட்டத்தை மேம்படுத்த, ஆழமாக உழுது நல்ல வடிகால் வசதியை அமைக்க வேண்டும். மண்ணாய்வின்படி, ஜிப்சத்தை இட்டு மரக்கலப்பையால் சேற்றுழவைச் செய்ய வேண்டும். பரிந்துரை அளவை விட 25% நைட்ரஜனைக் கூடுதலாக இட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 10 மில்லி மோலார் சோடியம் குளோரைடு வீதம் எடுத்து, விதையைக் கடினப்படுத்த வேண்டும். 0.5 பிபிஎப்எம் பிராசினோலைடு வளர்ச்சி ஊக்கியைத் தெளிக்க வேண்டும்.
இலைவழி உரமாக, யூரியா 1% டிஏபி 2% பொட்டாஷ் 1% கரைசலை, பூங்குருத்து உருவாகும் போது இருமுறையும், அடுத்து 10 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். 100 பிபிஎம் சாலிசிலிக் அமிலத்தைத் தெளிக்க வேண்டும். பிபிஎப்எம் நுண்ணுயிர் உரத்தை நெல் வயல்களில் நிறைய இடலாம். ஐந்து கிலோ விதைக்கு 200 கிராம் வீதம் எடுத்து விதைநேர்த்தி செய்யலாம். எக்டருக்கு 2 கிலோ வீதம் அடியுரமாக இடலாம்; 500 மி.லி. வீதம் எடுத்து, பூக்கும் போதும் கதிர் வரும்போதும் தெளிக்கலாம்.
முனைவர் அ.முகமது அஸ்ரப்,
உழவியல் துறை, முனைவர் சி.நாசியாபேகம்,
பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641003.