கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2022
பன்றிகளில் பல்வேறு இனங்கள் உள்ளன. அவையாவன: காட்டுப் பன்றிகள், நாட்டுப் பன்றிகள், சீமைப் பன்றிகள் என்னும் வெண் பன்றிகள். இந்தியாவில் பெருமளவில் வளர்க்கப்படும் வெளிநாட்டு இனங்கள்: பெரிய வெள்ளை யார்க்ஷயர், நடுத்தர வெள்ளை யார்க்ஷயர், லான்ட்ரோஸ் ஆகியன. இவை மட்டுமின்றி, இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் சாடில்பாக், பெர்க்ஷயர் ஆகிய இனங்கள் உள்ளன. இந்த இனங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டவை.
இந்தப் பன்றி வகைகளை ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கால்நடைப் பராமரிப்புத் துறை பராமரித்து வருகிறது. தனியார் பண்ணைகளும் பராமரித்து வருகின்றன. வெளிநாட்டுப் பன்றிகள் லார்டு அல்லது கொழுப்பு வகை, பேக்கன் வகை, இறைச்சி வகை என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
லார்டு அல்லது கொழுப்பு வகை: பல ஆண்டுகளுக்கு முன் பன்றி உற்பத்தியாளர்கள் நல்ல வாட்டமாக, கொழுகொழுவென இருக்கும் பன்றிகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்தனர். அப்போது பன்றிக் கொழுப்பைச் சமையலில் பயன்படுத்தியதால் அவற்றை வளர்த்து வந்தனர். ஆனால், இப்போது கொழுப்புக் குறைவாக உள்ள பன்றிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பேக்கன் வகை
இந்தப் பன்றிகள் நல்ல சதைப்பற்றைக் கொண்டிருக்கும். கொழுப்புக் குறைவாக இருக்கும். பால் உபரிப் பொருள்கள் மற்றும் கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் அதிகமாகக் கிடைக்கும் பகுதிகளில் இப்பன்றிகளைப் பார்க்கலாம். கனடா, டென்மார்க், அயர்லாந்து போன்ற நாடுகளில் பேக்கன் வகைப் பன்றிகள் அதிகம்.
இறைச்சி வகை
இந்தப் பன்றிகள் கொழுப்பு வகைக்கும், பேக்கன் வகைக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கும். விரைவாக வளர்ந்து, கொழுப்புக் குறைவாக உள்ள தரமான இறைச்சியைத் தரும். இப்போது இறைச்சி வகைப் பன்றிகளே பெருமளவில் வளர்க்கப்படுகின்றன.
இறைச்சிப் பன்றிகள் -யார்க்ஷயர்
இது, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தது. இதில், பெரிய வெள்ளை யார்க்ஷயர், நடுத்தர வெள்ளை யார்க்ஷயர் என இரு வகைகள் உள்ளன. இந்தப் பன்றிகள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கும். சிலவற்றில் கரும் புள்ளிகள் இருக்கும். யார்க்ஷயர் தாய்ப் பன்றிகள், குட்டிகளை நன்கு பராமரிக்கும். அதாவது, அதிகக் குட்டிகளை ஈன்று அத்தனை குட்டிகளுக்கும் நன்றாகப் பால் கொடுக்கும்.
இப்பன்றிகள் நீண்டு பருத்த உடல் மற்றும் தடித்த தசையுடன் இருக்கும். நன்கு வளர்ந்த ஆண் பன்றிகள் 300-400 கிலோ வரை வளரும். பெண் பன்றிகள் 250-300 கிலோ வரை வளரும். நம் நாட்டில் பெரும்பாலும் இந்த யார்க்ஷயர் பன்றிகளைப் பண்ணைகளில் வளர்த்து வருகின்றனர். இவை, நம் நாட்டின் தட்ப வெப்ப நிலையிலும், எவ்வித வளர்ப்புச் சூழலிலும் நன்கு வளரும் இனமாகும்.
லான்ட்ரோஸ்
இதன் தாயகம் டென்மார்க் ஆகும். இதன் தோலும் உரோமமும் வெள்ளையாக இருக்கும். உடல் நீண்டும் பருத்தும் இருக்கும். கால்கள் சிறிதாக இருக்கும். அதிகளவில் குட்டிகளை ஈனும் திறனும், அதிகத் தீவன மாற்றுத் திறனும் கொண்ட இனமாகும்.
பெர்க்ஷயர்
இதன் தாயகம் இங்கிலாந்து ஆகும். கவரும் உடலமைப்பைக் கொண்ட இவ்வினம், பன்றிகளில் தனித் தன்மை மிக்கது. இதன் மூக்கானது சிறுத்து மேல்நோக்கி இருக்கும். கால், முகம் மற்றும் வால் வெள்ளையாகவும், மற்ற பகுதிகள் அடர் கறுப்பாகவும் இருக்கும். இந்திய கிழக்கு மாநிலங்களில் உள்ள நாட்டுப் பன்றிகளின் தரத்தை மேம்படுத்த, இப்பன்றிகள் பயன்படுத்தப்படுகின்றன.
செஸ்டர் ஒயிட்
இது, அமெரிக்காவைச் சேர்ந்தது. பேரைப் போலவே வெள்ளை நிறத்தில் இருக்கும். எனினும், உடலின் பல பகுதிகளில் நீலப் புள்ளிகள் இருக்கும். விரைவில் பருவமடைந்து விற்பனைக்குத் தயாராகும் பண்பும், நிறையக் குட்டிகளை ஈனும் பண்பும் மிக்கது.
டியூராக்
இதுவும் அமெரிக்காவைச் சேர்ந்தது. சிவப்பாக இருக்கும். ஆண் பன்றிகள் 200 கிலோ வரை வளரும். இதன் தோலின் கீழுள்ள கொழுப்புத் தடிமன் 2 செ.மீ. அளவில் மிகவும் குறைவாக இருக்கும். எனவே, கொழுப்புக் குறைந்த பன்றியினங்களை உருவாக்க, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகப் பண்ணையில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வினம், அதிகக் குட்டிகளை ஈனும் தன்மை மிக்கது.
ஹேம்ப்ஷயர்
இது, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தது. கறுப்பாக இருக்கும். தோளில் வெண்பட்டை காணப்படும். அதிகக் குட்டிகளை ஈனும். தரமான இறைச்சியைத் தரும். ஆண் பன்றிகள் 250-350 கிலோ வரையும், பெண் பன்றிகள் 200-250 கிலோ வரையும் வளரும். இது, மிகவும் சுறுசுறுப்பான பன்றியினமாகும்.
போலந்து சைனா
இது, அமெரிக்காவைச் சேர்ந்தது. கறுப்பாக இருக்கும். கால், முகம், மூக்கு, வாலில் மட்டும் வெண் பட்டைகள் இருக்கும். ஆண் பன்றிகள் 300-400 கிலோ வரை வளரும். உடல் நீண்டும், தொடை பருத்தும் இருக்கும்.
ஹெர்போர்டு
இது, சிவப்பாக இருக்கும். முகமும் கால்களும் மட்டும் வெள்ளையாக இருக்கும். இதன் உடலமைப்பு மற்ற பன்றியினங்களைக் காட்டிலும் சிறியதாக இருக்கும்.
டாம்வொர்த்
இதன் தாயகம் அயர்லாந்து ஆகும். இது, பேக்கன் வகைப் பன்றியாகும். சிவப்பாக இருக்கும். கால்கள் நீண்டும், உடல் நீண்டும் உருண்டும் இருக்கும். குட்டிகளை அதிகமாக ஈனும்.
தரம் உயர்த்தப்பட்ட பன்றிகள்:
பொதுவாக வெளிநாட்டுப் பன்றிகள், நம் நாட்டுத் தட்பவெப்பச் சூழலைத் தாங்குவது சற்றுக் கடினம். ஆனால், நம் நாட்டுப் பன்றிகள் அதிக வெப்பத்தைத் தாங்கும் திறனும், சிறந்த நோயெதிர்ப்புச் சக்தியும் மிக்கவை.
எனினும், இவற்றின் உடல் வளர்ச்சியும், உற்பத்தித் திறனும் குறைவாகும். எனவே, வல்லுநர்கள் இதைக் கருத்தில் கொண்டு, நாட்டினப் பன்றிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்த, வெளிநாட்டுப் பன்றிகளுடன் இனச்சேர்க்கை செய்து, தரம் உயர்த்தப்பட்ட பன்றிகளை உருவாக்கி வருகின்றனர்.
முனைவர் பா.குமாரவேல்,
முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி,
உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம்.