தென்னையைப் பாதிக்கும் சாறு வடிதல் சிக்கல்கள்!

சாறு வடிதல் Bleeding coconut rotated e1631416893242

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021

ந்தியாவில் 2.1 மில்லியன் எக்டரிலும், தமிழகத்தில் 4.6 இலட்சம் எக்டரிலும் தென்னை மரங்கள் உள்ளன. தேங்காய் உற்பத்தியில், தென்னிந்தியாவில் ஆந்திரம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. ஆள் பற்றாக்குறை மற்றும் அனைத்துப் பாகங்களும் ஏதோவொரு தொழிலுக்குப் பயன்படுவதால், விவசாயிகள் தென்னை சாகுபடியை விரும்பிச் செய்து வருகின்றனர்.

இந்தத் தென்னையைப் பல்வேறு வகையான பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்கி வருகின்றன. இவற்றைப் பல அறிகுறிகள் மூலம் அறிகிறோம். இவ்வகையில், தென்னையில் ஏற்படும் சாறு வடிதல்களுக்கான காரணங்களை இப்போது பார்க்கலாம்.

சிவப்புக் கூன்வண்டு

தென்னையில் குறுகிய காலத்தில் அதிகச் சேதத்தை விளைவிப்பது சிவப்புக் கூன்வண்டுகள் தான். வளர்ந்த வண்டுகளால் நேரடியாகப் பாதிப்பு ஏதுமில்லை. இதன் புழுக்களால் தான் சேதம் அதிகமாகும். பொதுவாக 5-15 வயதுக்குள் இருக்கும் மரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. குருத்தழுகல், இலையழுகல் மற்றும் காண்டாமிருக வண்டு தாக்கிய இளம் தென்னை மரங்களைச் சிவப்புக் கூன்வண்டுப் புழுக்கள் அதிகமாகத் தாக்குகின்றன.

இதனால், உள் மற்றும் நடு இலையடுக்கில் உள்ள ஓலைகள் வாடியதைப் போல மஞ்சள் நிறத்தில் இருக்கும். மட்டைகளின் அடிப்பாகத்தில் நீள வெடிப்புகள் இருக்கும். இள மரங்களின் குருத்துப் பகுதி அழுகிக் கெட்ட வாடை வீசும். மரம் மற்றும் அடிமரத்தில் துளைகள் இருக்கும். இவற்றில் இருந்து பழுப்பு நிறத்தில் திரவம் வழியும். கூர்ந்து கவனித்தால், கூன்வண்டின் இளம் புழுக்கள் மரத்தைத் தின்னும் சப்தத்தைக் கேட்கலாம். மரத்தின் அடியிலும், மட்டைகளின் அடியிலும் கூட்டுப்புழுக் கூடு அல்லது வளர்ந்த வண்டு அல்லது புழுக்கள் வெளியேற்றிய கழிவு இருக்கும்.

கட்டுப்படுத்துதல்: மரங்களின் குருத்துப் பகுதியைத் தேவையான இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும். இடி தாக்கிய மரங்கள், கூன்வண்டு தாக்கிய மரங்கள் கூன்வண்டின் வாழ்விடமாகும். அதனால், அந்த மரங்களை வெட்டித் தீயிட்டு அழிக்க வேண்டும். மரங்களில் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துளைகள் இருந்தால் அவற்றைக் களிமண் அல்லது சிமென்ட்டால் பூசி அடைக்க வேண்டும்.

பச்சை மட்டைகளை வெட்டக் கூடாது. தேவைப்பட்டால் மரத்தில் இருந்து மூன்றடி தள்ளி வெட்ட வேண்டும். நுனிக்குருத்து மற்றும் மட்டை இடுக்குகளில், 5 கிராம் வேப்பங் கொட்டைத் தூள் உள்ள பைகளில் துளையிட்டு வைத்தால், காண்டாமிருக வண்டு தாக்கிய இடங்களில் சிவப்புக் கூன்வண்டுகள் முட்டை இடுவதைத் தடுக்கலாம்.

குருத்தழுகல், இலையழுகல் மற்றும் காண்டாமிருக வண்டுகளால் தாக்கப்பட்ட மரங்கள் அதிகப் பாதிப்புக்கு உள்ளாவதால், அந்த மரங்களை, முதலில் பூசணக்கொல்லி, பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்திப் பாதுகாக்க வேண்டும். கரும்புச்சாறு 2.5 லிட்டர் அல்லது கரும்புச்சாறு கழிவு 2.5 கிலோ, 5 கிராம் ஈஸ்ட் மாத்திரை, 5 மில்லி அசிட்டிக் அமிலம் மற்றும் நீளவாக்கில் வெட்டப்பட்ட ஓலைமட்டைத் துண்டுகள் இடப்பட்ட பானைகளை ஏக்கருக்கு 30 இடங்களில் வைத்து, கூன்வண்டுகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.

கூன்வண்டுகள் தாக்கியதால் தென்னை மரங்களில் ஏற்பட்ட துளைகளை, காப்பர் ஆக்சிகுளோரைடு கலந்த களிமண்ணால் மூட வேண்டும். ஏக்கருக்கு ஓர் இனக்கவர்ச்சிப் பொறி வீதம் வைத்து, சிவப்புக் கூன்வண்டுகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.

அடித்தண்டழுகல் நோய்

இந்நோய் இந்தியாவில் முதன் முதலில் 1906 இல் காணப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் பரவிப் பெருஞ்சேதத்தை ஏற்படுத்தியதால் இதற்குத் தஞ்சாவூர் வாடல் நோய் என்னும் பெயர் வந்தது. கானோடெர்மா லூசிடம் என்னும் காளான் வகைப் பூசணத்தால் இந்நோய் வருகிறது. இந்தப் பூசணம் முதலில் வேரையும் அடுத்து அடிமரத்தையும் தாக்கும்.

இப்பூசணம் தாக்கிய மரங்களில் வாடல் நோயின் அறிகுறிகள் தெரிவதால் இது, வாடல் நோய் எனவும், பாதிக்கப்பட்ட மரத்தின் தூர்ப்பகுதி அழுகுவதால், அடித்தண்டழுகல் நோய் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தப் பூசணம் மரத்தின் வேர்களைத் தாக்கித் தூரில் நுழைவதால் மரத்தின் அடிப்பகுதி மட்டும் பாதிக்கப்படும்.

அதைக் கடந்து மேல் நோக்கி வரும் போது, தூரிலிருந்து ஒரு மீட்டர் உயரம் வரை பட்டையில் வெடிப்புகள் தோன்றி, செம்பழுப்பு நிறத்தில் நீர் வடியும். நோய் தீவிரமானால் மரத்தில் சாறு வடியும் உயரமும் கூடும். சாறு வடியும் பகுதி அழுகி நிறமாறி இருக்கும். இந்தப் பகுதியை வெட்டிப் பார்த்தால், மரத்தின் மையப்பகுதி வரை திசுக்கள் அழுகியிருக்கும்.

சாறு வடியும் மரத்தின் ஓலைகள் வெளிர் மஞ்சளாகவும், அடிமட்டைகள் பழுப்பு நிறமாகவும் மாறிக் காய்ந்து மரத்துடன் ஒட்டித் தொங்கும். இந்த அறிகுறிகள் மரத்தின் மேல் சுற்று மட்டைகளுக்கும் பரவும். தொங்கும் ஓலைகள் கீழே விழுவதில்லை. நோய் முற்றிய நிலையில் எல்லா மட்டைகளும் காய்ந்து விழுவதுடன், குருத்தும் திடீரெனச் சாய்ந்து விடும். இளம் குரும்பைகளும் தேங்காய்களும் கொட்டி விடும். வேர்களும் அதிகமாக அழுகி, நிறமாறிக் குறைந்து விடும்.

இந்நிலையில், மரப்பட்டையில் சைலிபோரஸ் என்னும் துளை வண்டு நுழைந்து சேதம் செய்வதால், மரத்தூள், மாவைப் போல வெளியே விழும். இந்தத் துளைகள் வழியே செம்பழுப்பு நீர்த்துளிகள் வெளியே வந்து காய்ந்து இருக்கும். இந்நோயால் வடியும் செந்நீரில் துர்நாற்றம் வீசுவதில்லை. இந்த நோயுடன் வண்டின் தாக்குதலும் இருந்தால், ஆறு மாதத்தில் மரம் இறந்து விடும்.

மழைக்காலத்தில் நோய் தீவிரமாக இருக்கும். மரத்தின் அடிப்பகுதியில் கேனோடெர்மா பூசணத்தின் வித்துத் திரள் அரைவட்டத் தட்டுகளைப் போல வளர்ந்திருக்கும். இந்நோய், கடற்கரையை ஒட்டிய மணற்பாங்கான இடங்களிலும், மானாவாரி மற்றும் பராமரிப்பு இல்லாத தோப்புகளிலும் அதிகமாக இருக்கும்.

இந்நோய் ஒரு மரத்தில் இருந்து மற்ற மரங்களுக்கு, மண் மற்றும் பாசனநீர் மூலம் பரவும். இளம் கன்றுகளையும் தாக்கும். இத்தகைய கன்றுகளின் ஓலைகள் மஞ்சள் நிறமாகி, சிறுத்து வளர்ச்சிக் குன்றி இருக்கும். ஓலைகள் வாடி இருப்பதுடன் ஓலைத் தண்டின் நடுப்பகுதி மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். நோயுற்ற மரத்தின் பெரும்பாலான வேர்கள் அழுகிக் கறுப்பாகக் காணப்படும்.

கட்டுப்படுத்துதல்: நோயுற்று மடிந்த மரங்களையும், நோய் முற்றிய நிலையில் உள்ள மரங்களையும், வேருடன் பிடுங்கி அகற்ற வேண்டும். மரங்களைச் சுற்றி வட்டப் பாத்திகளை அமைத்து, ஒவ்வொரு மரத்துக்கும் தனித்தனியே பாசனம் செய்ய வேண்டும். கோடையில் பத்து நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். வாழையை ஊடுபயிராக இட்டால், இந்நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

ஆண்டுதோறும் மரத்துக்கு ஐந்து கிலோ வீதம் வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும். நோயுற்ற மரம் மற்றும் அதன் பக்கத்திலுள்ள மரங்களைச் சுற்றி 1.8 மீட்டர் ஆரமுள்ள வட்டப் பாத்திகளை அமைத்து, தலா 40 லிட்டர் வீதம் ஒரு சத போர்டோ கலவையை ஊற்ற வேண்டும். நூறு மில்லி நீருக்கு ஒரு மில்லி ஹெக்சகோனோசோல் வீதம் கலந்து வேர் மூலம் கொடுக்க வேண்டும். இதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என, மூன்று முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.

மட்கிய ஐம்பது கிலோ தொழுவுரத்தில் நூறு கிராம் டிரைக்கோடெர்மா விரிடி, நூறு கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் வீதம் கலந்து நிலத்தில் இட வேண்டும். அல்லது மரத்துக்கு, ஐம்பது கிலோ தொழுவுரத்தில் 300 கிராம் பி.எஸ்.1 கலவையைக் கலந்து ஆண்டுக்கு ஒருமுறை இட வேண்டும். மரத்துக்கு 200 கிராம் அசட்டோபேக்டர் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கலந்த கலவை வீதம் இடுவது நல்லது.

செந்நீர் வடிதல் நோய்

இந்நோய், தியோலாப்சிஸ் பாரடாக்சா என்னும் பூசணத்தால் உருவாகும். இது, தமிழ்நாட்டில் மிகக் குறைவாகவே உள்ளது. இந்நோய், ஒரு மரத்தில் இருந்து அடுத்த மரத்துக்கு, காற்று, மண், பாசனநீர் மூலம் பரவும்.

சதைப்பற்றுடன் இருக்கும் மரப் பட்டையை மட்டுமே இந்நோய் தாக்கும். அதனால் பட்டையில் இருந்து கருஞ் செந்நீர் வடியும். இதில் நாற்றம் இராது. தரையில் இருந்து 1-1.5 மீட்டர் உயரத்துக்கு மேலுள்ள மரப்பட்டையில் இதன் அறிகுறி தெரியும். பாதிப்புப் பகுதியில் 1-2 செ.மீ. நீளத்தில் இருக்கும் வெடிப்புகளில் வரும் கசிவுநீர், வானத்திலுள்ள பனித்துளி அல்லது மழைத்துளி படுவதால் சிவப்பாக மாறுகிறது.

இந்தத் திரவம் காய்ந்து துருவைப் போல இருக்கும். திரவம் வடிந்த பகுதியை நீக்கினால், மஞ்சள் நிறத் திட்டுகள் தென்படும். மரத்தின் எந்தப் பகுதியிலும் திரவம் வடியலாம். இந்நோய்ப் பரவல் மரத்தின் மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் இருக்கும்.

கட்டுப்படுத்துதல்: பாதிக்கப்பட்ட பகுதியைச் சீவிவிட்டு, போர்டோ பசை அல்லது டிரைக்கோடெர்மா பசையைப் பூசி விட வேண்டும். பட்டையைச் சீவி விட்டுச் சூடான தாரைப் பூசுவது மற்றும் சீவிய பட்டையை எரித்து விடுவது, மேலும் நோய் பரவாமல் தடுக்க உதவும். நூறு மில்லி நீருக்கு 2 மில்லி ஹெக்சகோனோசோல் வீதம் கலந்து வேர் மூலம் ஆண்டுக்கு மூன்று முறை செலுத்த வேண்டும்.

ஆண்டுதோறும் மரத்துக்கு ஐந்து கிலோ வீதம் வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும். மரத்துக்கு 50 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி, 50 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ், 10 கிலோ தொழுவுரம் வீதம் கலந்து, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இட வேண்டும்.

இடி, மின்னலால் நீர் வடிதல்

தென்னை மரம் கடின மின்கடத்தி என்றாலும், இடி, மின்னல் தாக்குவதால், பச்சை மரத்தில் மின்சாரம் பாய்ந்து மரம் எரிந்து கருகி விடும். இதனால், ஓலைகள், பாளைகள், காய்கள் உதிர்ந்து விடும்.

மின்னலால் ஏற்படும் மின்சாரம் தூரையும் அனைத்து வேர்களையும் பாதிப்பதால், வேர்களில் சேதம் அதிகமாக இருக்கும். இந்த மின்சாரம், மரத்தின் நுனியில் இருந்து தூர் வழியாக இறங்கி, வேர்களின் வழியாக நாலாபுறமும் மண்ணில் பரவும். அந்த நேரத்தில், பக்கத்தில் உள்ள 6-8 மரங்களின் வேர்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருப்பதால், இந்தப் பாதிப்பு அந்த மரங்களிலும் ஏற்படும். அதனால், பக்கத்தில் உள்ள மரங்களும் கொஞ்ச காலத்தில் மடிந்து போகும். மேலும், பாதிக்கப்பட்ட மரத்தின் உட்புறம் அழுகியும், வெளியே சிறிய வெடிப்புகள் தோன்றியும் செந்நீர் வடியும்.

கட்டுப்படுத்துதல்: ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மரங்கள் பாதிக்கப்பட்டாலும், சிறிய பாதிப்புக்கு உள்ளான மரங்கள் ஓரிரு மாதங்களில் மீண்டும் புதுக்குருத்து மற்றும் பாளைகளை விடும். இவற்றை மட்டும் விட்டுவிட்டு மற்ற மரங்களை வெட்டி எரித்து விட வேண்டும். தவறினால் இவற்றில் காண்டாமிருக வண்டுகள் தங்க நேரிடும். முறைப்படி உரம் மற்றும் நுண்ணுரங்களை இடுவதன் மூலம், குறைவான பாதிப்புள்ள மரங்களைக் காப்பாற்றலாம்.


சாறு வடிதல் RAM JEGATHEESH 2 e1631416674611

முனைவர் இரா.இராம் ஜெகதீஷ்,

முனைவர் ச.ஆறுமுகச்சாமி, நெல் ஆராய்ச்சி நிலையம், அம்பாசமுத்திரம்,

முனைவர் இ.ஜான்சன், முனைவர் து.சீனிவாசன்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading