பனை மரத்தின் பற்பலப் பயன்கள்!

பனை FemalePalmyratreetop 89fc2d856ec487ca7b4cfdcb0cf584e7

ரங்களில் பல நமக்கு உணவு, உடை, உறையுள் தருபவை. இந்தச் சிறப்பு மர வகைகளில் மூங்கிலை விட வறட்சியைத் தாங்குவதிலும், நீடித்து நிலைத்துப் பயன்படுவதிலும் சிறந்தது பனைமரம். இம்மரம் விவசாயிகளுக்கு எந்தச் சிரமமும் தராது. தன் வாளிப்பான தோற்றம் மற்றும் உறுதியால் எந்தப் புயலையும் சமாளிக்கும் அற்புதப் பயிர்.

மண் கண்டத்தைப் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஏற்றதாகச் செய்தும், காற்று, மழை மூலம் வளமான மண்ணை இடம் பெயர விடாது காக்கும் காவல் தெய்வம் பனைமரம். வறட்சியிலிருந்து மக்களைக் காத்திட, பதனீர், நுங்கைத் தருவதுடன் எரிபொருள்களையும் தரும். குடியிருக்கும் வீட்டுக்குக் கூரை அமைத்திட ஓலைகளையும் தரும்.

பனையை வளர்த்திட தனிக்கவனம் எதுவும் தேவையில்லை. எல்லா மண்ணிலும், எவ்விதச் சரிவான பகுதியிலும், குளக்கரையிலும், ஆற்றங் கரையிலும் என, எங்கே வேண்டுமானாலும் பனை மரத்தை நட்டு அழகு பார்க்கலாம். சாதாரணமாக ஒரு பனைமரம் 30-50 அடி உயரம் வளரும். இருக்கும் இடத்துக்கு ஏற்ப எத்தனையோ பயிர்களை நட விரும்பும் எவரும் பனையின் மாண்பை முழுமையாக அறியாததால் தான் நல்ல வரவைப் பெறுவதில்லை.

செங்கல் சூளைக்கும், வாய்க்கால் பாதைக்கும் கட்டடப் பணிக்கும் பனைமரம் உதவும். எத்தனையோ குடிசைகளின் நிலையாகப் பயன்படும் பனை மரத்தின் பாகங்கள் சிறப்பு மிக்கவை. அந்தக் காலத்தில் வரப்பை வலுப்படுத்தவும், இரண்டு விவசாயிகளுக்குள் வரப்புத் தகராறு வராமல் தடுக்கவும் உதவியவை பனை மரங்கள் தான்.

நீர் அதிகமாகத் தேவைப்படும் தென்னை மரங்களைத் தேடித் தேடி நடும் நாம், உயிரினப் பெருக்கத்துக்கு உதவி, பாளை விடும் போது சில்வர் நைட்ரேட்டை வெளிவிட்டு மழை பெய்யக் காரணமாக இருக்கும் அற்புத மரமான பனையை மறந்து விட்டோம். இதன் பலன் தான் மண்ணரிப்பும், காற்றினால் ஏற்படும் மண்வளப் பாதிப்பும்.

இந்த இடம் புழுதியாக உள்ளது, இந்த இடம் மணற்சாரியாக உள்ளது, இந்த இடம் கரடுமுரடாக உள்ளது. எனவே, இந்த இடங்களில் எதுவுமே வராது எனத் தவறாக முடிவெடுத்தவர்கள், அங்கே பனைமரம் அருமையாக வளரும் என்னும் பனையின் மாண்பை முற்றிலும் அறியாதவர்கள்.

பனைமரம் உள்ள இடத்தில் தான் பலவித உயிரினங்கள் வாழ முடிகிறது. எறும்பு, ஓணான், பல்லி, பாம்பு, ஈ, கொசு, அணில், எலி, பருந்து, வானம்பாடி, தூக்கணாங்குருவி, பச்சைக்கிளி, மைனா, மயில், ஆந்தை, வௌவால், உடும்பு, மரநரி, மரநாய் எனப் பலவித உயிரினங்கள் வாழ்வதற்கான புகலிடம் தான் பனை மரம்.

விவசாயிக்கு தொண்டு புரியும் சேவகனாக இருக்கும் ஒரு பனைமரம் 10,000 லிட்டர் நீரையும் சேமிக்கும். எனவே, பனையை இன்றே நம் நிலத்தின் பயிர்த் திட்டத்தில் சேர்ப்போம்; சமுதாயத்தைக் காப்போம். 


டாக்டர் பா.இளங்கோவன்,

பேராசிரியர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர்,

பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையம், துவாக்குடி, திருச்சி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading