பர்கூர் மலை மாடுகள்!

பர்கூர் மலை மாடுகள் Bargur Mountain Cows

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021

லைகளில் பிறந்து காலங்காலமாக அந்த மலைகளிலுள்ள மக்களால் வளர்க்கப்படும் மாடுகள் மலை மாடுகளாகும். குறிஞ்சி என்னும் மலையும் மலை சார்ந்த ஊரான ஆலம்பாடியில் இருப்பவை ஆலம்பாடி மாடுகள்; பர்கூர் மலைப் பகுதியில் இருப்பவை பர்கூர் மாடுகள். தேனி மலைப் பகுதியில் இருப்பவை தேனி மலை மாடுகள்.

முல்லை என்னும் காடும் காடு சார்ந்த ஊரான காங்கேயத்தைச் சேர்ந்தவை காங்கேய மாடுகள். மருதம் என்னும் வயலும் வயல் சார்ந்த ஊரான புளிக்குளத்தைச் சேர்ந்தவை புளிக்குளம் மாடுகள். இவற்றைப் போலத் தஞ்சைப் பகுதியில் இருப்பவை உம்பளாச்சேரி மாடுகள்.

பர்கூர் மாடுகளின் தோற்றம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பர்கூர் மலையைத் தாயகமாகக் கொண்டவை பர்கூர் மலை மாடுகள். இந்த மாடுகள் பர்கூர் செம்மறை மாடுகள் எனவும் அழைக்கப்படும். மேற்குத் தொடர்ச்சி மலையின் கரடுமுரடான மலைப்பகுதி இவற்றின் வாழிடமாகும். பர்கூர்ப் பகுதியில் கன்னட மொழி பேசும் லிங்காயத்து மக்கள் இவற்றை வளர்க்கின்றனர். இவை மலைப் பகுதியில் விவசாயம் செய்வதற்குப் பயன்படுகின்றன.

பர்கூர் மாடுகளின் பண்புகள்

நடுத்தர அளவிலான இந்த மாடுகள் பழுப்பு நிறத்தில் வெள்ளைத் திட்டுகளுடன் இருக்கும். சில மாடுகள் வெள்ளை நிறத்தில் பழுப்புத் திட்டுகளுடனும் இருக்கும். முழு வெள்ளை மற்றும் பழுப்பு நிற மாடுகள் மிகவும் அரிதாகவே இருக்கும். பர்கூர்க் காளை மாடுகளின் கால்கள் குட்டையாகவும் தடித்தும் இருக்கும். திமில் பெரிதாக இருக்கும்.

பசுக்கள் சிவப்பு அல்லது சிவப்புக் கலந்த வெண் புள்ளிகளுடன் இருக்கும். காளை மற்றும் பசுவின் கொம்புகள் வெளிர் பழுப்பு நிறத்தில் முன்னோக்கி வளைந்தும் கூர்மையாகவும் இருக்கும். பர்கூர் மாடுகள், மற்ற நாட்டு மாடுகளை விட இரு மடங்கு அதிகமாக உழைக்கும். கடும் வறட்சியைத் தாங்கி வளரும். நான்கு நாட்களுக்குக் கூடத் தண்ணீரைக் குடிக்காமல் இருக்கும்.

கரடு முரடான மண்ணில் களைப்பின்றி ஏரிழுக்கும். நான்கு மாடுகளின் பாரத்தை ஒற்றை மாடு சுமக்கும். விரைவாக ஓடும். ரேக்ளா பந்தயத்தில் ஓடுவதிலும் பெயர் பெற்றவை. ஆயினும் அடம் பிடிக்கும். கரடுமுரடான, வாழச் சிரமமான மலைக்காட்டில் வாழப்பழகிய இந்த மாடுகளின் கால் குளம்புகள் இலாடம் அடிக்கத் தேவையில்லாத வகையில், கெட்டியாகவும் உறுதியாகவும் இருக்கும்.

பர்கூர்ப் பசு மாடுகள் பால் உற்பத்திக்கு மிகவும் உகந்தவை. இவற்றின் பால் மருத்துவ மதிப்புள்ளது. ஒரு மாட்டின் சராசரி பால் உற்பத்தி 250 முதல் 1300 கிலோ வரை இருக்கும். பர்கூர் மாடுகள் அந்தியூர்ச் சந்தைக்குத் தான் பெரும்பாலும் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

பர்கூர் மாடுகளின் சிறப்புக் குறிப்புகள்

இந்த மாடுகள் மிகவும் கோபமிக்கவை; எச்சிலை உமிழும் தன்மை மிக்கவை. எனவே, இவற்றைப் பழக்குவது கடினம். சுறுசுறுப்பாக இருக்கும். கடந்த 40-50 ஆண்டுகளுக்கு முன், ஒவ்வொரு வீட்டிலும் 10-20 பர்கூர்ச் செம்மறை மாடுகள் என ஒரு இலட்சம் மாடுகள் வரை இருந்து வந்தன. ஆனால், இப்போது வீட்டுக்கு ஒரு மாடுகூட இல்லாத நிலையில் 3-4 ஆயிரம் மாடுகள் மட்டுமே உள்ளன.

மலைப் பகுதியில் மட்டுமே வாழும் இந்த பர்கூர் மாட்டினம் இன்று அழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. மலைப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடும் வறட்சியால் போதிய தீவனம் கிடைக்காமல் போவதால், இந்த மாடுகளைச் சந்தையில் விற்று விடுகின்றனர்.

இந்நிலையில், பர்கூர் மாடுகளைக் காக்கும் வகையில், பர்கூர் இன மாடுகள் ஆராய்ச்சி மையம், ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே, தட்டக்கரை துருசனாம் பாளையத்தில் 2015 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த மையத்தின் மூலம் பர்கூர் மாடுகளை அதிகரிக்க, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதனால் இப்போது பர்கூர்ப் பகுதியிலுள்ள இந்த மாடுகள் மூலம் கிடைக்கும் சுமார் 500 லிட்டர் பால் வரை கிடைக்கிறது. இது தொடக்கத்தில் 100 லிட்டராக மட்டுமே இருந்தது. இதைத் தனியார் அமைப்புடன் சேர்ந்து நகரங்களில் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏ2 இரகத்தைச் சேர்ந்த இந்தப் பால் உடலுக்கு நன்மை தருவதாகும். வீட்டுத் தேவைக்கான அளவில் மட்டுமே கிடைத்து வந்த பர்கூர்ப் பசும்பால் இப்போது விற்பனை செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பாலின் விலை 100 ரூபாயாகும். இந்தப் பாலிலிருந்து ஐஸ் கிரீம், வெண்ணெய், நெய் போன்ற மதிப்புமிகு பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன.

இதனால் மலைப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர வாய்ப்புள்ளது. மலைப்பகுதி கால்நடைகளுக்குத் தேவையான தீவன உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். பர்கூர் மலையில் உள்ள செம்மறை மாடுகளின் இனம் அழியாமல் காக்கும் வகையில் அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும்.


PB_Dr.Usha Kattuppakkam

முனைவர் சு.உஷா,

அ.யசோதா, கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை,

சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை-07.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading