நாமக்கல் வட்டார விவசாயிகள் நானோ யூரியாவைப் பயன்படுத்தி, மண்வளத்தைக் காத்து, மகசூலைப் பெருக்கும்படி, வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பயிர்களுக்குத் தேவையான பேரூட்டங்களில் முதலிடத்தில் இருப்பது தழைச்சத்து. இதை, யூரியா அல்லது அம்மோனிய வகை உரங்கள் மூலம் பயிர்களுக்குக் கொடுக்கலாம். இவற்றில், குருணை வடிவ யூரியாவையே அதிகளவில் பயன்படுத்தி வருகிறோம். இந்த யூரியாவில் தழைச்சத்தான நைட்ரஜன் 46 சதம் உள்ளது. ஆனால், இதில் 70 சதம் சத்து, பயிர்களுக்குக் கிடைக்காமல் வீணாகிறது.
இதனால், மண்ணில் அமிலத் தன்மை கூடும்; நீரில் கரைந்தோடும் யூரியாவால் நீர் நிலைகள் கெடும். விளையும் உணவுப் பொருள்களில் நச்சுத் தன்மையும் அதிகமாகும். ஆகவே, தழைச்சத்து உரத்தைக் குறைவாகப் பயன்படுத்தி, அதிக மகசூலை எடுக்கும் வகையில், திரவநிலை நானோ யூரியாவை, இஃப்கோ நிறுவனம் தயாரித்து, குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
இந்த 500 மி.லி. நானோ யூரியா, 45 கிலோ குருணை யூரியாவுக்குச் சமமாகும். இது, மிக நுண்ணிய துகள்களைக் கொண்டதாக இருப்பதால், இலைத் துளைகள் மற்றுமுள்ள பிற திறப்புகள் மூலம் பயிர்களின் அனைத்துப் பகுதிகளையும் அடைகிறது. மேலும், தழைச்சத்தைப் பயன்படுத்தாத இலைகளின் வெற்றிடத்தில் தேங்கி இருந்து, பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் போது மெதுவாகக் கிடைக்கிறது.
ஒரு ஏக்கருக்கு 500 மி.லி. நானோ யூரியா போதுமானது. இதை, 125 லிட்டர் நீரில் கலந்து பயிர்களின் இலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். பயிர்கள் 30-35 நாட்கள் வயதில் இருக்கும் போது முதல் முறையும், அடுத்து, பயிர்கள் பூப்பதற்கு ஒருவாரம் இருக்கும் போது அல்லது முதல் தெளிப்பிலிருந்து 20-25 நாட்கள் இடைவெளியில் இரண்டாம் முறையும் தெளிக்க வேண்டும்.
நானோ யூரியாவை, சல்பேட் ஆஃப் பொட்டாஷ் அல்லது நீரில் கரையும் 0:52:34 வகை உரத்துடன் கலந்து தெளிக்கும் போது, பயிர்களுக்குத் தேவையான தழை, மணி மற்றும் சாம்பல் சத்து கிடைப்பதால் நல்ல மகசூல் கிடைக்கும். ஆகவே, விவசாயிகள் திரவ நானோ யூரியாவைப் பயன்படுத்திப் பயனடைய வேண்டும் என்று கூறியுள்ளார்.
நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.