இரும்புச்சத்துக் குறையால் ஏற்படும் இரத்தச்சோகை உலகம் முழுவதும் இருக்கிறது. இதனால் உலகளவில் 1.62 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் இரத்தச்சோகைப் பாதிப்பு அதிகம். இரத்தச் சிவப்பணுக்களில் ஏற்படும் குறைபாடே இரத்தச்சோகை (Anemia) எனப்படுகிறது. சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் என்னும் நிறமிகள் தான், நம் உடல் இயங்கத் தேவையான ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்கின்றன. சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ஹீமோகுளோபினின் செயலும் குறைந்து, ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுவது தடைபடும் நிலையையே இரத்தச்சோகை என்கிறோம்.
இந்தியாவில் 75% பெண்கள், அதில் கர்ப்பிணிப் பெண்கள் 50%, குழந்தைகள் 60%, அதில் இளம் பெண்கள் தான் இரத்தச் சோகையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹீமோகுளோபின் அளவு, ஆண், பெண், குழந்தை என மூன்று தரப்புக்கும் சிறிது மாறுபடும். ஆண்களுக்குச் சராசரியாக 14.5-15.5gm/dl, பெண்களுக்கு 13.5-14.5 gm./dl இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு 16-17 gm/dl எனக் கொஞ்சம் அதிகமாக இருக்கும். இந்த ஹீமோகுளோபின் அளவு குறைவதை வைத்து இரத்தச்சோகையின் தாக்கம் எவ்வளவில் உள்ளது என்பதை அறியலாம்.
ஹீமோகுளோபின் 10-11 கிராம் இருந்தால் ஆரம்ப இரத்தச்சோகை. 9-10 கிராமாக இருந்தால் மிதமான இரத்தச்சோகை. 8 கிராமுக்குக் கீழ் இருந்தால் தீவிர இரத்தச் சோகையாகும்.
காரணங்கள்
இந்தியாவில் இரும்புச்சத்துக் குறை காரணமாகவே பெரும்பாலான மக்கள் இரத்தச்சோகைக்கு உள்ளாகிறார்கள். ஆண், பெண், குழந்தை என எல்லாத் தரப்பினருக்கும் இரத்தச்சோகை ஏற்படும். ஆனாலும், அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பருவமடைதல், மாதவிலக்கு, பிரசவம் போன்றவற்றால் பெண்கள் இயல்பாகவே அதிக இரத்த இழப்பைச் சந்திக்கிறார்கள். பாலூட்டும் பெண்களுக்குத் தேவையான இரும்புச்சத்துக் கிடைக்காத போது இரத்தச்சோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைக்கும் போதுமான இரும்புச்சத்துக் கிடைக்காமல் போகும்.
இரத்தச்சோகை ஏற்பட முக்கியக் காரணமாக இருப்பது, உணவில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12, வைட்டமின் சி, வைட்டமின் பி6 ஆகிய சத்துகள் பற்றாக்குறை தான். இரும்புச்சத்துக் குறைந்து, குடல் கொக்கிப் புழுக்களின் தாக்கம் அதிகமாவதும், மலேரியா நோயும் இரத்தச் சோகைக்குக் காரணங்களாகும். காசநோயால் நுரையீரலிலிருந்து இரத்தம் வருதல், குடல்புண்ணால் வயிற்றிலிருந்து இரத்தம் வருதல், மூலநோயால் இரத்தம் வருதல், பெரிய காயங்களிலிருந்து இரத்தம் வருதல், பெண்களுக்கு மாத விலக்கின் போதும், பேறுகாலத்தின் போதும் இரத்தம் வெளியேறுதல் ஆகியவற்றாலும் இரத்தச்சோகை ஏற்படுகிறது. மாதவிலக்கின் போது இரத்தத்தோடு இரும்புச்சத்து வீணாவதும் ஒரு காரணம்.
எலும்பு மஜ்ஜை கோளாறு காரணமாக சிவப்பணுக்கள் உருவாக முடியாத நிலையில் இரத்தச் சோகை வரும். சிறுநீரக நோய்கள், முடக்குவாதம், நீண்ட நாட்களாக உள்ள தொற்று நோய்கள், புற்றுநோய் போன்றவை இரத்தச் சோகைக்குக் காரணமாகும். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு இரும்புச்சத்துக் குறை ஏற்படும். மேலும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சத்துமிகு இணை உணவுகள் கொடுக்காமல் இருந்தாலும் இரத்தச்சோகை ஏற்படும். இன்றைய துரித உணவுப் பழக்கத்தால் சத்தில்லாத உணவை உண்பதும் இரத்தச்சோகைக்குக் காரணமாகும்.
பாதிப்புகள்
குழந்தைகளுக்கு: நோயெதிர்ப்புச் சக்தி குறையும். உடல் வளர்ச்சி, மனவளர்ச்சிக் குன்றும். படிப்பில் கவனமிராது. விளையாட, வேலை செய்ய முடியாது. நினைவாற்றல் இராது. தொடர் சோர்வு, ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும்.
பெரியவர்களுக்கு: வேலை செய்ய இயலாது. எளிதில் சோர்வடைவர். பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய்ப் பாதிப்புகள் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்களுக்குக் கருச்சிதைவு மற்றும் எடை குறைந்த குழந்தை பிறத்தல் மற்றும் குறைப் பிரசவம் உண்டாகும். குழந்தைகள் உடல்நலக் குறையுடன் பிறத்தல் மற்றும் உயிருக்குப் பாதிப்பு ஏற்படும். பிரசவத்தின் போது அல்லது பிரசவித்த பின் தாயின் உடல் நலம் குன்றும். இரத்தச் சோகையின் ஆரம்ப அறிகுறிகளாவன: சோர்வு, மூச்சுவாங்குதல் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமை. கடுமையான அறிகுறிகளாவன: வேலை செய்யாத போதிலும் மூச்சு வாங்குதல், முகம், நகம் வெளிறியிருத்தல். விரல்கள் வெளுத்துக் காணப்படுதல், கண்கள், நாக்கு வெளிறியிருத்தல், கை, கால், முகம் வீக்கம், மார்புப் படபடப்பு போன்றவையாகும்.
சிகிச்சை முறைகள்
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அறிந்து அதற்கேற்ப சிகிச்சையளித்தல். பெரஸ் சல்பேட் மற்றும் போலிக் அமிலமுள்ள மருந்துகளைப் பயன்படுத்துதல். இரத்தச்சோகை சரியான பிறகும், 3-4 மதங்களுக்கு மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு உடலில் இரும்புச்சத்து இருப்பை உறுதிப்படுத்துதல். கருவுற்ற பெண்கள் 4 மாதம் முதலும், பாலூட்டும் பெண்கள் முதல் 6 மாதங்களுக்கும் இரத்தச் சோகைத் தவிர்ப்புக்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல்.
தடுப்பு உணவுகள்
இரத்தச் சோகையைத் தவிர்க்க, இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். சைவ உணவைவிட அசைவ உணவிலுள்ள இரும்புச்சத்தை உடல் நன்கு ஏற்றுக் கொள்கிறது.
இரும்புச்சத்து, போலிக் அமிலம் உள்ள உணவுகள்
ஈம் இரும்புச்சத்து: இது பெரும்பாலும் அசைவ உணவில் கிடைக்கும். ஆடு, கோழி, மீன், கருவாடு, ஈரல், மண்ணீரல் ஆகியவை ஈம் இரும்புச்சத்தைக் கொண்ட உணவுகளாகும். பால், முட்டை முதலான அசைவ உணவில் ஈம் அல்லாத இரும்புச்சத்துக் காணப்படும்.
ஈம் இல்லாத இரும்புச்சத்து: முருங்கைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, புதினா, பொன்னாங்கன்னி, குப்பைக்கீரை, துளசி, மணத்தக்காளிக்கீரை, முள்ளங்கி இலை, காலிபிளவர் கீரை மற்றும் அனைத்துக் கீரைகள். பாகற்காய், சுண்டைக்காய், கொத்தவரை, வாழைக்காய், பீன்ஸ் போன்ற காய்கறிகள். பப்பாளி, தர்ப்பூசணி, அன்னாசி, சீதா, மாதுளை, சப்போட்டா, பேரீட்சை, உலர்ந்த திராட்சை போன்ற கனிகள். கைகுத்தல் அரிசி, கம்பு, சோளம், கேழ்வரகு, கம்பு, கொள்ளு, எள்ளு, சோயா, காராமணி, பட்டாணி, மொச்சை, கேழ்வரகு, கோதுமை, சாமை, சோயாபீன்ஸ், பட்டாணி போன்ற தானிய, பருப்பு வகைகள்.
இரும்புச்சத்தின் தேவை
உடல் நலத்துடன் பிறக்கும் குழந்தைக்கு, முதல் 6 மாதத்துக்குத் தேவையான இரும்புச்சத்து உடலில் இருக்கும். தாய்ப்பாலில் உள்ள இரும்புச்சத்தில் 50% வரை குழந்தை உறிஞ்சிக்கொள்ளும். பசும்பாலில் இரும்புச்சத்துக் குறைவாக இருக்கும். அதனால்தான் ஒரு வயதாகும் வரை பசும்பாலைக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது என்கிறோம். ஆறு மாதம் வரை தாய்ப்பாலையும் அதன்பின் இரும்புச்சத்துள்ள திட உணவையும் சேர்த்துத் தரலாம். ஓராண்டுக்கு முன்பே தாய்ப்பால் நிறுத்தப்பட்ட குழந்தைகளுக்கு இரும்புச்சத்துள்ள பாலைக் கொடுக்க வேண்டும்.
இரும்புச்சத்தை உறிஞ்சும் தன்மை
இரும்புச்சத்தை உறிஞ்சுவது என்பது, நாம் உண்ணும் உணவிலுள்ள இரும்புச்சத்து உடலுக்குள் உறிஞ்சப்படும் மற்றும் பயன்படும் விதத்தைப் பொறுத்து அமையும். உடல் நலமுள்ள மனிதன் உண்ணும் உணவில் 30% மட்டுமே உறிஞ்சப்படுகிறது. உடலில் சேர்த்து வைத்துள்ள இரும்பின் அளவு உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்தும். இது, இரும்பு நச்சுப்பொருளாக மாறுவதைத் தடுக்கும். எந்த வகை இரும்புச்சத்து உணவில் உள்ளது என்பதைப் பொறுத்தும் மாறும். புலால் உணவிலுள்ள ஈம் இரும்புச்சத்து அதிவிரைவில் உறிஞ்சப்படும். ஈம் இரும்பை 35% வரை உறிஞ்ச முடியும். ஆனால் ஈம் அல்லாத இரும்புச் சத்தில் 2-20% வரை மட்டுமே உறிஞ்சப்படுகிறது. இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதற்கு, வைட்டமின் சி, போலிக்கமிலம், வைட்டமின் பி12 போன்ற பிற சத்துகளின் துணை அவசியம்.
அவ்வகையில், வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், எலுமிச்சை, முளைகட்டிய தானியங்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகள் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைக் (Increases bioavailability) கூட்டும். விலங்குப் புரதத்திலுள்ள சிஸ்டினும் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைக் கூட்டும். ஆனால், தேநீரில் உள்ள தானின், கால்சியம் என்னும் சுண்ணாம்புச்சத்து, பாலிபீனால் போன்றவை, இரும்பு உறிஞ்சப்படுவதை மந்தமாக்கும்.
குறைந்த சக்தியுள்ள உணவுகள் அதிக கலோரிகளைக் கொண்டிருக்கும். ஆனால், வைட்டமின் மற்றும் தனிமங்கள் குறைவாக இருக்கும். இவற்றை உண்டால், இரும்பின் அளவு கணிசமாகக் குறையும். கேக்குகள், உருளைக் கிழங்கு வறுவல் போன்றவை இதற்கு உதாரணங்களாகும். அதைப்போல, சில மென்பானங்களில் உள்ள செயற்கைச் சர்க்கரையும் கூட, இரும்பின் உறிஞ்சும் அளவைக் குறைக்கும்.
அனைத்து வயதினரும் கவனிக்க வேண்டிய முக்கிய ஊட்டச்சத்துக் குறை நோயாக இரத்தச்சோகை இருக்கிறது. எனவே, இரும்புச்சத்து குறையால் ஏற்படும் இரத்தச் சோகையைப் போக்கும் வகையில் சத்துள்ள உணவைப் பயன்படுத்தி நலமாக வாழ்வோம்.
முனைவர் க.ஞா.கவிதாஸ்ரீ,
முனைவர் மு.பாண்டியன், முனைவர் மு.சித்ரா
வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.