அங்கக வேளாண்மையில் பயிர்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் பெரிதும் உதவும், அமுதக் கரைசல் மற்றும் தேமோர் கரைசலைத் தெளித்துக் கூடுதல் மகசூலைப் பெற வேண்டும் என, நாமக்கல் வட்டார விவசாயிகளை, வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
அமுதக் கரைசல் செய்முறை: இதற்கு, மாட்டுக் கோமியம் 1 லிட்டர், மாட்டுச் சாணம் 1 கிலோ, பனை வெல்லம் 250 கிராம் தேவை. 10 லிட்டர் நீரில் மாட்டுச் சாணம், கோமியம், பொடி செய்த பனை வெல்லம் ஆகியவற்றை நன்கு கலந்து 24 மணி நேரம் காற்றுப் புகாமல் மூடி வைத்தால் அமுதக் கரைசல் தயாராகி விடும்.
இக்கரைசலை 10 லிட்டர் நீருக்கு 1 லிட்டர் வீதம் கலந்து உடனடியாக, கைத்தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். இக்கரைசல் தழைச்சத்தை இலைவழியாகப் பயிர்களுக்குக் கிடைக்க செய்வதோடு, உடனடி வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படும்; பூச்சிகளையும் விரட்டும்.
தேமோர்க் கரைசல் செய்முறை: தேங்காய்ப் பால் மற்றும் மோர் கலந்த கலவைக்கு தேமோர் என்று பெயர். இதற்குத் தேவை 5 லிட்டர் புளித்த மோர், 10 தேங்காய்களைத் துருவி, நீர் சேர்த்து நன்கு ஆட்டி எடுத்த 5 லிட்டர் தேங்காய்ப் பால் மற்றும் தேங்காய் நீர்.
இவற்றை நன்கு கலந்து ஒரு மண் பானையில் 7 நாட்களுக்கு ஊறவிட்டால், கலவை நன்கு நொதித்துப் புளித்துக் கரைசல் தயாராகி விடும். இக்கரைசலை, 10 லிட்டர் நீருக்கு ஒரு லிட்டர் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். இதற்கு, பயிர்களை வளர்க்கும் ஆற்றலும், பூச்சிகளை விரட்டும் குணமும் உண்டு. மேலும், பயிர்கள் பூசண நோயைத் தாங்கி வளரவும் உதவும், பயிர்களின் பூக்கும் திறனும் அதிகமாகும்.
எனவே, இந்தக் கரைசல்களைத் தயாரித்து, அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தினால் கூடுதல் மகசூலைப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, அந்தந்தப் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் அட்மா திட்ட அலுவலர்களை அணுகலாம் அல்லது ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகிப் பயன் பெறலாம் என, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தனது செய்திக் குறிப்பில் விவசாயிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.