கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019
வேளாண் காடு என்பது குறிப்பிட்ட பரப்பில் பயிர்கள், கால்நடைகளுடன் மரங்களையும் வளர்ப்பதாகும். நகரமயம், பாசனநீர், ஆள் பற்றாக்குறை, போன்றவற்றால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இவற்றைச் சமாளித்து அதிக வருமானம் பெறுவதற்கான வழிதான் வேளாண் காடு வளர்ப்பு. இதை, வளமான பகுதி, வறண்ட பகுதி, புதர்க்காடு, சமனற்ற பகுதி, அமிலம் மற்றும் காரத்தன்மை மிதமாக உள்ள பகுதிகளிலும் வளர்த்து, மண் மற்றும் சூழலைப் பாதுகாத்து வருமானத்தைப் பெறலாம்.
வேளாண் காடுகளின் வகைகள்
வேளாண் மரங்கள் வளர்ப்புத் திட்டம்: இதில், முக்கிய வருமானப் பயிர் மரங்களாகும். துணை வருமானத்தைத் தருவது ஊடுபயிர். இவ்வகையில், சவுக்கு, தைலமரம், மலை வேம்பு போன்றவற்றை வளர்க்கலாம். ஆண்டின் மழையளவு 750 மி.மீ. இருந்தால், இதற்குள் நிலக்கடலை, உளுந்து, பாசி, துவரையை ஊடுபயிராக இடலாம். ஊடுபயிர், நிழலை விரும்பும் பயிராக, சல்லி வேருள்ள பயிராக, தீவனப் பயிராக இருக்க வேண்டும்.
தைல மரங்களை மட்டும் வளர்த்தால் நான்காண்டில் 5-6 இலட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இதில், நிலக்கடலையை ஊடுபயிராக இட்டால், மூன்றாண்டு வரை ஆண்டுக்கு 35-40 ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும்.
காற்றின் சேதத்தைத் தடுக்கும் திட்டம்: புயல் வந்தால், வாழை, முருங்கை, முந்திரி, தென்னை போன்ற மரங்கள் பாதிக்கப்படுகின்றன. இதற்குத் தீர்வாக, வரப்பைச் சுற்றி மூன்று வரிசைகளில் ஜிங்குனியானா சவுக்கை, 2×1 மீட்டர் இடைவெளியில் ஓர் ஏக்கரில் 240 மரங்களை வளர்க்கலாம்.
முல்லைப்புல் பரப்புத் திட்டம்: இது, கடினமான கட்டைகளைத் தரும் மரங்களை, தீவனப் பயிர்களுடன் வளர்ப்பதாகும். இதில், ஒருவகைப் புரதமுள்ள பன்முக மரங்கள் நிலத்தின் சுற்று வரப்புகளில் வளர்க்கப்படும். எடுத்துக்காட்டாக, வேலம், வாகை, வேம்பு, அகத்தியை வளர்த்தால், இவற்றின் தழைகள் தீவனமாகும். வறண்ட பகுதியில், புளி, வேம்பு, வேலம், அகத்தி மரங்களுக்கு இடையில் புல்லை வளர்க்கலாம். இதன் மூலம் ஆண்டுக்கு 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தீவனம் கிடைக்கும். மண் மற்றும் நீரின் அளவைப் பொறுத்து, மரங்களுடன் பல்வேறு பயிர்களை வளர்க்கலாம்.
தைல மரங்களுள் ஊடுபயிர்
தைலமரக் கன்றுகளை நடுவதற்கு முன், சட்டிக் கலப்பையால் நிலத்தை உழ வேண்டும். இதில் ஒரு அடி ஆழத்துக்கு மண் புரட்டப்படுவதால் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படும். ஒரு கன அடி அளவுள்ள குழிகளை எடுத்து, தொழுவுரத்தை இட்டு நட வேண்டும். இறவையாக இருந்தால் ஒரு குழிக்கு 50 கிராம் வீதம் சூப்பர் பாஸ்பேட்டை இட வேண்டும்.
மானாவாரியில் ஜூன்-ஆகஸ்ட் காலத்தில் நட வேண்டும். நடவு செய்த ஒரு வாரத்தில் மழை இல்லையெனில் நீரை விட வேண்டும். கரையானைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் நீருக்கு 500 மி.லி. குளோரிபைரிபாசைக் கலந்து செடியை நனைத்து விட வேண்டும்.
அதிக மகசூலைத் தரும் டிஎம்வி 14, கோ.6 நிலக்கடலை இரகங்களை ஊடுபயிராக இடலாம். இதனால், வளிமண்டல நைட்ரஜன் மண்ணில் கலந்து நிலவளம் கூடும். மேலும், ஏக்கருக்கு 35-40 ஆயிரம் ரூபாய் கூடுதல் வருமானமாகக் கிடைக்கும்.
இரண்டாம் ஆண்டின் தொடக்கத்தில் 17:17:17 காம்ப்ளக்ஸ் உரத்தை, செடிக்கு 100 கிராம் வீதம் இட வேண்டும். மூன்றாம் ஆண்டிலிருந்து சட்டிக் கலப்பையால் உழ வேண்டும். நான்காம் ஆண்டின் முடிவில் 4,26,100 ரூபாய் மொத்த இலாபமாகக் கிடைக்கும். எனவே, விவசாயிகள் காடு வளர்ப்பில் கவனம் செலுத்தினால் அதிக வருமானம் என்பது உறுதி.
பொ.மகேஸ்வரன்,
முனைவர் பெ.பச்சைமால், எம்.அருண்ராஜ், இரம்யா சிவச்செல்வி,
வேளாண் அறிவியல் நிலையம், தேனி-625520.