இயற்கையின் கொடை இளநீர்!

னித குலத்துக்கு இயற்கை வழங்கிய கொடை இளநீர். வெய்யில் காலம் என்றால் முதலில் நம் நினைவில் வருவது இளநீர் தான். மற்ற பானங்களை விட இளநீருக்கே மதிப்பு அதிகம்.

உடல் நலனைக் காக்கும் இயற்கை பானம் என்பதால் மக்கள் இதை அதிகமாக விரும்பு கின்றனர். பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ள இளநீர், தாகத்தைத் தணித்துப் புத்துணர்வை அளிக்கிறது.

இந்தியாவில் தேங்காயின் மொத்த உற்பத்தியில் 10 சதவீதம் மட்டுமே இளநீராகப் பயன் படுகிறது. கலோரி மதிப்பானது 100 கிராம் இளநீரில் 17.4% உள்ளது.

இளநீரின் நன்மைகளை எடுத்துக் கூறினால், மக்களிடமுள்ள வெளிநாட்டுக் குளிர்பான மோகம் குறைந்து, இளநீர் மீதான நாட்டம் அதிகமாகும். இளநீரை எண்டோ ஸ்பெர்ம் என்கிறது அறிவியல்.

இளநீரில் உள்ள சத்துகளின் அளவு, தன்மை ஆகியன, அதன் வகை, வளரும் சூழ்நிலை, மண்ணின் தன்மைக்கு ஏற்ப அமையும். பொதுவாக, இளநீரில், தண்ணீர், சர்க்கரை, தாதுப் பொருள்கள், புரதம், வைட்டமின்கள், கொழுப்பு ஆகியன அடங்கியுள்ளன.

இளநீரிலுள்ள சத்துகள்

சர்க்கரை: இளநீர்ச் சர்க்கரை, 1.5-5.5 என, வளர்ச்சிக்கு ஏற்ப அமைகிறது. இளநீர் தேங்காயாக மாறும் போது சர்க்கரை அளவு 2% ஆகிறது. இளநீரில் உள்ள சர்க்கரை, குளுக்கோஸ் மற்றும் பிரக்டோசின் அமைப்பைக் கொண்டுள்ளது.

அதுவே தேங்காயாக முற்றும் போது சுக்ரோசாக மாறுகிறது. இப்படி முதிர்ந்த தேங்காயில் 50%க்கும் மேல் சுக்ரோசாக உள்ளது. பொதுவாக, இதில் சர்க்கரை அளவு முதல் ஆறு மாதங்களில் கூடிக் கொண்டே இருக்கும்.

கனிமங்கள்: இளநீரில் பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, காப்பர், சல்பர், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்து உள்ளன. இதிலுள்ள மொத்தத் தாதுக்களில் பொட்டாசியம் 50%க்கும் மேல் உள்ளது.

பொட்டாஷ் உரத்தை அதிகமாக இடுவதே இதற்குக் காரணம். பல்வேறு நிலைகளில் முதிர்ந்த தேங்காய்களை வைத்து நடத்திய ஆய்வில், நன்கு முற்றிய தேங்காயில் பல்வேறு தாதுப் பொருள்களின் அளவு குறைவது கண்டுபிடிக்கப் பட்டது. ஆறு மாத இளநீரில் இந்தப் பொருள்களின் அளவு அதிகமாக இருக்கும்.

புரதம்: இளநீரில் புரதம் குறைவாகவே இருக்கிறது. நைட்ரஜன் மற்றும் மொத்தப் புரத அளவு இளநீரின் முதிர்ச்சிக்கு ஏற்ப அதிகரிக்கிறது.

இளநீர்ப் புரதத்தில் இருக்கும் அர்ஜினைன், அலனின், சிஸ்டைன் மற்றும் செரைனின் அளவானது, பசும்பாலில் இருக்கும் புரதத்தை விட அதிகமாகும்.

முற்றிய தேங்காய் நீரிலுள்ள புரதம் 0.13 லிருந்து 0.29 கிராமாக மிகும் போது, தேங்காயில் உள்ள புரதம் 8.3% லிருந்து 6.2% ஆகக் குறைகிறது.

இளநீராக இருக்கும் போது 70% அமினோ அமிலங்கள், குளுடமின், அர்ஜினைன், அஸ்பர்ஜின், அலனின் மற்றும் ஆஸ்பரிக் அமில வடிவில் இருக்கும்.

ஆனால், முற்றிய தேங்காய் நீரில் 75 கிராம் அளவு அலனின், ஜி-அமினோ பியூட்ரிக் அமிலம் மற்றும் குளுடாமிக் அமிலமாக இருக்கும். ஏழுமாத இளநீரில் அமினோ அமிலம் அதிகமாக இருக்கும்.

வைட்டமின்கள்: இளநீரில் பி வைட்டமின்கள், அஸ்கார்பிக் அமிலம் மிகுந்துள்ளன. அஸ்கார்பிக் அமிலம் 2.2 முதல் 3.7 மில்லி கிராம்/மில்லி லிட்டராக இருக்கிறது. பொதுவாக முற்றிய தேங்காயில் வைட்டமின்கள் குறைவாக இருக்கும்.

கொழுப்பு: இளநீரில் 0.12% ஆக இருக்கும் கொழுப்பு, முற்றிய தேங்காயில் 0.15% ஆகக் கூடுகிறது. முற்றும் போது சர்க்கரை குறைவதும், கொழுப்புக் கூடுவதும் ஒருசேர நடக்கும். எனவே, முற்றிய தேங்காயில் கொழுப்பு அதிகமாக இருக்கும்.

இளநீர் வாசமும் நுரைப்பும்

இயற்கையாகவே தேங்காய்க்குள் ஒருவித நீர் அழுத்தத்தால் இளநீர் அடைக்கப் படுகிறது. எனவே, இளநீரில் கரியமில வாயு கரைந்த நிலையில் இருக்கிறது. இளநீரைப் பக்குவமான பருவத்தில் உடைக்கும் போது வெளிவரும் வாயுவின் மூலம் இதை உணரலாம்.

முற்றும் போது நீரின் அளவு குறைவதால் ஏற்படும் வெற்றிடம், கரைந்த கரியமில வாயுவால் நிரப்பப் படுகிறது. இளநீரில் இருக்கும் மணத்தின் தனித் தன்மை டெல்டா டேக்டோனால் ஏற்படுகிறது.

இந்தப் பொருள் தேங்காய் முற்றும் போது குறைகிறது. எனவே, தனித் தன்மை கொண்ட இந்த மணத்தை, இளநீரைப் பதப்படுத்தும் போது பாதுகாப்பது அவசியம்.

மருத்துவக் குணங்கள்

செரிமானம் சிறக்க, இரத்தம் சுத்தமாக இளநீர் உதவும். சிறுநீர்த் தொற்றையும், சிறுநீரகக் கல்லையும் போக்கும். குழந்தைகளின் குடல் பிரச்சனையை நீக்க, வளர்ச்சியைக் கூட்டப் பயன்படும்.

உடல் வெப்பம் சீராக இருக்க, கோடையில் ஏற்படும் சரும நோய்களைப் போக்க உதவும். சின்னம்மை, பெரியம்மை மற்றும் தாளம்மையைக் கட்டுப்படுத்தும்.

இளநீரிலுள்ள செலைன், அல்புமின் போன்ற வேதிப் பொருள்கள், குடல் புண்ணை ஆற்றும். காலரா நோயாளிக்கு உகந்த உணவு இளநீர்.

இது, மக்களுக்குச் சத்தளிக்கும் பானமாகும். நோயாளிகளின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, அவசரச் சிகிச்சையின் போது மருத்துவரின் பரிந்துரைப்படி நரம்பின் வழியே இளநீரைச் செலுத்தலாம்.

இதற்கு மிக முக்கியக் காரணம், இது, இரத்த பிளாஸ்மாவின் எண்ணிக்கையை அதிகரிப்பது தான்.

இப்படிச் செலுத்தப்படும் இளநீர், உடல் வெப்ப நிலையைக் கூட்டுவதோ அல்லது இரத்தச் சிவப்பணுக்களை அழிப்பதோ இல்லை. உடலில் மருந்தை விரைவாகச் சேரச் செய்து அதன் செயலை வேகப்படுத்தும்.

நச்சுக் கனிமத்தை அகற்றும். சருமப்புற்று மற்றும் வாய்ப்புற்று நோயை எதிர்க்கும். எனவே, இளநீரைப் பருகுவோம்; நலமுடன் வாழ்வோம்!


முனைவர் ஜெ.செல்வி, உதவிப் பேராசிரியை, சமுதாய அறிவியல் கல்லூரி, மதுரை – 625 104.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!