சிப்பிக் காளான் வளர்ப்பு!

காளான் mushroom 1

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன்.

காளான் சிறந்த சத்துமிகு உணவாகும். பொதுவாகச் சிப்பிக் காளான் காய்கறி வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், இது கோழிக்கறியைப் போலச் சுவை உள்ளதாகும். எனவே, இக்காளான், கோழிக் காளான் எனவும் அழைக்கப்படுகிறது.

இயற்கையில் பூசணம் என்று அழைக்கப்படும் காளான்களில் 69,000 வகைகள் உள்ளன. இவற்றில் சுமார் 2,000 வகைகள் உணவுக் காளான்கள் ஆகும். இந்தியாவில் 55,000 மெட்ரிக் டன் காளான்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் 90% மொட்டுக் காளான்கள் ஆகும்.

ஏனெனில், மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படும் காளான்களில் இந்த மொட்டுக் காளானும், சிப்பிக் காளானும் முக்கியத்துவம் பெறுகின்றன. சிப்பிக் காளான் மட்டுமே எளிதாக உற்பத்தி செய்யக் கூடியதாகவும், தொழில் நுட்பங்கள் எளிதில் பின்பற்றக் கூடியதாகவும் இருப்பதால், பெரும்பாலும் கிராமம் மற்றும் பெரு நகரங்களுக்கு அருகில் வைக்கோலை ஆதாரமாகக் கொண்டு சிப்பிக் காளான் உற்பத்தி செய்யப்படுகிறது.

சிப்பிக் காளான் வளர்ப்பு, சிறந்த குடிசைத் தொழிலாகும். குறைந்த முதலீட்டில், சிறிய இடத்தில் சுயவேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம். இத்தொழிலை, வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள் பகுதிநேர வேலையாகவும் பின்பற்றலாம்.

மேலும், இந்தக் காளான் வளர்ப்பில், குறைந்த நாட்களில், அதாவது, 40-45 நாட்களிலேயே வருமானம் கிடைப்பதால், சுய தொழில் செய்பவர்களுக்கு இது உகந்ததாகும். இப்படிப்பட்ட பயனுள்ள சிப்பிக் காளான் மற்றும் மொட்டுக் காளானில் ஆராய்ச்சிகளைச் செய்து ஏழு இரகங்களைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.

இந்த ஏழு இரகங்களில், கோ-1, அருப்புக்கோட்டை (ஏ.பி.கே.)-1, மதுரை (எம்.டி.யு)-1, ஊட்டி -1, மதுரை (எம்.டி.யு)-2 ஆகியன சிப்பிக் காளான் வகையைச் சார்ந்தவை. பெரும்பாலும் தமிழகத்தில் இந்தக் காளான் வகைகளே உற்பத்திக்குச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

தமிழகத்தில் வளர்ப்பதற்கேற்ற காளான்கள்

சிப்பிக்காளான்: சிப்பிக்காளான் உற்பத்தியாக 45-50 நாட்களாகும். காளான் உற்பத்திக்கான பூசணம் பரவ 25-28 டிகிரி செல்சியஸ் வெப்பமும், காளான் வளர 22-25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் தேவை. ஈரப்பதம் 85-90 சதம் இருக்க வேண்டும். சிப்பிக்காளான் வளர்ப்புக்கான மூலப் பொருள் வைக்கோலாகும். இதன் உற்பத்தித் திறன் 100-180 சதமாகும்.

பால் காளான்: இந்தக் காளான் உற்பத்தியாக 45-50 நாட்களாகும். காளான் உற்பத்திக்கான பூசணம் பரவ 25-35 டிகிரி செல்சியஸ் வெப்பமும், காளான் வளர 20-30 டிகிரி செல்சியஸ் வெப்பமும் தேவை. ஈரப்பதம் 85-90 சதம் இருக்க வேண்டும். சிப்பிக்காளான் வளர்ப்புக்கான மூலப்பொருள் வைக்கோலாகும். இதன் உற்பத்தித் திறன் 145-180 சதமாகும்.

மொட்டுக்காளான்: இந்தக் காளான் உற்பத்தியாக 90-120 நாட்களாகும். காளான் உற்பத்திக்கான பூசணம் பரவ 20-30 டிகிரி செல்சியஸ் வெப்பமும், காளான் வளர 25-28 டிகிரி செல்சியஸ் வெப்பமும் தேவை. ஈரப்பதம் 85-90 சதம் இருக்க வேண்டும். சிப்பிக்காளான் வளர்ப்புக்கான மூலப்பொருள் மட்கு ஆகும். இதன் உற்பத்தித் திறன் 30-35 சதமாகும்.

காளான் வளர்ப்பின் பயன்கள்

பண்ணைக் கழிவுகளை மதிப்புமிக்க உணவாக மாற்றி விடுகிறது. கிராம மக்களின் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற உதவுகிறது. கிராமப்புற, நகர்ப்புற இளைஞர்களுக்குச் சுயவேலை வாய்ப்புக் கிடைக்கிறது. காளான் வளர்க்கத் தேவைப்படும் நிலம், நீர் ஆகியன மிகக் குறைந்த அளவில் இருந்தால் போதும். சுமார் 750 கிலோ வைக்கோல் மூலம் காளான்களை வளர்த்து ரூ.12,000 வரை இலாபம் பெறலாம். காளானை வளர்த்த பின்பு கிடைக்கும் கழிவுகளை உரமாகப் பயன்படுத்தலாம்.

காளானில் உள்ள சத்துகள்

புரதச்சத்து 2.9 சதம், கொழுப்பு 0.4 சதம், மாவுப்பொருள் 5.3 சதம், நார்ப்பொருள் 1.1 சதம், ஈரப்பதம் 90.3 சதம் உள்ளன. உலர்ந்த காளானில் 20-35 சதம் புரதம் இருப்பது நல்ல தரம் வாய்ந்ததாகும். இது, காய்கறி மற்றும் பழங்களில் உள்ள புரதச்சத்தை விட அதிகமானது. மேலும், லைசின், ட்ரிப்டோஃபேன் போன்ற அமினோ அமிலங்கள், வைட்டமின் பி, சி போன்றவையும் அதிகமாக உள்ளன.

சிப்பிக்காளான் வளர்ப்புக்குத் தேவையானவை

காளான் குடில், காளான் விதை, நெகிழிப் பை, வைக்கோல், கிருமிநாசினி (டெட்டால்).

குடிலின் அளவு

காளான் குடில்கள் முழுவதும் பனை அல்லது தென்னை ஓலைகளால் வேயப்பட்ட கூரையாக இருக்க வேண்டும். பெரும்பாலும் சன்னல்கள் இல்லாமல் இருக்கலாம். உட்புறச் சுவர்களில் கோணிப் பைகளால் ஆன திரைச்சீலைகளைத் தொங்கவிட வேண்டும். தரைப்பரப்பு அரையடி உயரம் வரை ஆற்று மணல் பரப்பியதாக இருக்க வேண்டும். ஏனெனில், கோடைக்காலத்தில் காளான் குடில்களைக் குளிர்விக்கத் தெளிக்கப்படும் தண்ணீர் தேங்காமல் இருக்க உதவும்.

தினமும் ஒரு கிலோ காளானை உற்பத்தி செய்ய, விதை பரவும் அறை 4×2 ச.மீ., காளான் உருவாகும் அறை 4×2 ச.மீ. இருக்க வேண்டும். தினமும் நான்கு படுக்கைகளைத் தயாரிக்க வேண்டும். ஐந்து கிலோ காளானை உற்பத்தி செய்ய, விதை பரவும் அறை 13.5×3 ச.மீ., காளான் உருவாகும் அறை 13.5×3 ச.மீ. இருக்க வேண்டும். தினமும் இருபது படுக்கைகளைத் தயாரிக்க வேண்டும். இருபது கிலோ காளானை உற்பத்தி செய்ய, விதை பரவும் அறை 27×6 ச.மீ., காளான் உருவாகும் அறை 27×6 ச.மீ. இருக்க வேண்டும். தினமும் எண்பது படுக்கைகளைத் தயாரிக்க வேண்டும்.

வைக்கோல் தயாரிப்பு

அறுவடை செய்து ஆறு மாதங்களுக்குள் உள்ள வைக்கோலைச் சிறு துண்டுகளாக வெட்டி 8 மணி நேரம் குளிர்ந்த நீரில் உலர வைக்க வேண்டும். பின்பு, 80 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள சுடுநீரில் ஒருமணி நேரம் நனைய வைத்துத் தொற்று நீக்கம் செய்ய வேண்டும். அல்லது ஒரு பாத்திரத்தில் இட்டுக் கொதிக்கும் வரை வேக வைக்க வேண்டும். தொற்று நீக்கம் செய்த வைக்கோலை 60 சதம் ஈரப்பதம் உள்ளவாறு உலர்த்த வேண்டும்.

காளான் படுக்கைத் தயாரிப்பு

ஒரு விதைப் புட்டியிலிருந்து இரண்டு காளான் படுக்கைகளைத் தயாரிக்கலாம். 60 செ.மீ. உயரமும், 30 செ.மீ. அகலமும் 80 காஜ் தடிமனும் உள்ள நெகிழிப் பையை எடுத்துக் கொண்டு அதன் மத்தியில் நான்கு சிறு துளைகளை இட வேண்டும். பின்பு, நெகிழிப் பையினைச் சிறு நூலால் கட்டிவிட்டு, அடிப்பாகத்தை வட்டமாக இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.

இதில், முதலில் 5 செ.மீ. உயரம் தொற்று நீக்கம் செய்யப்பட்ட வைக்கோலை நிரப்ப வேண்டும். அதன் மேல் சுற்று ஓரங்களில் 30 கிராம் விதைகளைத் தூவ வேண்டும். பின்பு, மீண்டும் வைக்கோல், விதை ஆகியவற்றை மாற்றி மாற்றி இட்டு நெகிழிப் பையை இறுக்கமாகக் கட்டி, காளான் குடிலில் வைத்து விட வேண்டும்.

காளான் விதை, பைகளில் பரவ 15-20 நாட்கள் ஆகும். அப்போது அவற்றைக் காளான் வளர்ப்பு அறையில் மாற்றி வெப்பம் மற்றும் ஈரப்பதத்தைப் பாதுகாக்க வேண்டும். காளான் மொட்டுகள் வெளிவந்த 2-3 நாட்களில் காளான் நன்கு வளர்ந்ததும் அறுவடை செய்து சமைத்து உண்ணலாம்.

ஒரு காளான் படுக்கையில் இருந்து, முதல் அறுவடையில் 300-400 கிராம் காளானும், இரண்டாம் அறுவடையில் 200-300 கிராம் காளானும் கிடைக்கும். மொத்தத்தில் ஒரு காளான் படுக்கையில் இருந்து 40 நாட்களில் 500-750 கிராம் காளானை உற்பத்தி செய்யலாம். இந்தக் காளான்களை விற்பதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம்.

காளான் விற்பனை

தற்பொழுது பெரு நகரங்களில் ஒரு கிலோ காளான் ரூ.100 முதல் 200 வரை இடத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. சுய தொழிலில் ஈடுபடுவோர் தினமும் குறைந்தது 5 கிலோ காளான்களை உற்பத்தி செய்வதன் மூலம் இத்தொழிலை இலாபகரமாகச் செய்யலாம்.


முனைவர் க.வேல்முருகன், தோட்டக்கலை இணைப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading