நாட்டுப் பசுக்களால் கிடைக்கும் நன்மைகள்!

பசு DSC04137 e4ae0586287ba3e690720d8aa24bca0a

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை.

சுக்கள் கோமாதா என்றும், தெய்வமாகவும் காலம் காலமாகப் போற்றப்பட்டு வருகின்றன. இந்திய நாட்டில் முப்பதுக்கும் மேற்பட்ட பசுவினங்கள் உள்ளன. அவற்றில் கிர், சாகிவால், சிந்தி, தார்பார்க்கர் ஆகிய நான்கு பசுவினங்கள் அதிகப் பாலைத் தரக்கூடிய இனங்களாகும். தற்பொழுது இந்தப் பசுவினங்கள் பால் உற்பத்திக்காகப் பெருமளவில் மக்களால் வளர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் காங்கேயம், உம்பலாச்சேரி, பர்கூர், புலிக்குளம், நாட்டுக்குட்டை ஆகிய பசுவினங்கள் உள்ளன. இந்தப் பசுவினங்கள் பொதுவாக விவசாய வேலைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

பாலானது மக்களால் தினசரி பயன்படுத்தப்படும் முக்கிய சரிவிகிதப் புரத உணவாகும். பசுவின் பால் குழந்தைகளின் முக்கிய உணவாகும். பாலிலுள்ள முக்கியச் சத்துப் பொருள் புரதமாகும். அதிலும், கேசின் என்னும் புரதம் இரண்டாவது முக்கியப் பால் புரதமாகும். இது, மொத்தப் பால் புரதத்தில் 80% உள்ளது. கேசின் புரதம் குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பீட்டா கேசின் என்னும் புரதமானது இரு வகைகளில் வெளிப்படுகிறது. அவற்றை விஞ்ஞானிகள் ஏ1 மற்றும் ஏ2 வகைப் புரதம் என்று அழைக்கிறார்கள். இயற்கையில் அனைத்துப் பாலூட்டிகளிலும் உள்ள பீட்டா கேசின் ஏ2 புரத வகையைச் சேர்ந்தது.

அயலின மாடுகளிலிருந்து பெறப்படும் பாலில் ஏ1 வகைப் புரதமே காணப்படுகிறது. ஏ1 புரதம் உள்ள பாலினைத் தொடர்ந்து உண்பதால், இதய அடைப்பு, ஆட்டிசம், சர்க்கரை நோய், நரம்பு நோய்கள் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது. ஏனெனில், ஏ1 புரதம் செரிக்கும் போது, ஒருவகை வேதிப்பொருள் வெளிப்படுகிறது. இந்தப் பொருள் இரத்தத்தில் கலந்து, மூளை, நரம்பு மண்டலம் மற்றும் இதயத்தைத் தாக்கி மார்பு சார்ந்த பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும், இத்தகைய ஏ1 புரதம் அடங்கிய பாலை, குழந்தைகள் தொடர்ந்து பருகும் போது வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது.

நாட்டு மாட்டுப் பாலிலுள்ள மற்றொரு முக்கியச் சத்து கால்சியம். இது, எலும்புகளின் உறுதிக்கும், இரத்தம் உறைதலுக்கும் மிக முக்கியமாகப் பயன்படுகிறது. மேலும், உணவிலுள்ள சில கலப்பிட வேதிப் பொருள்களால் ஏற்படும் மலக்குடல் புற்று நோயை வர விடாமல் இந்தக் கால்சியம் தடுக்கிறது. மேலும், உடல் பருமன், மார்பகப் புற்று நோய், தலைவலி போன்ற நோய்கள் குழந்தைகளுக்கு வராமல் பாதுகாக்கிறது.

நாட்டு மாட்டுப் பாலில் உள்ள பீட்டா கேசின் கால்சியத்துடன் இணைந்து கலவையாகக் காணப்படும். ஆனால், மற்ற மாட்டுப் பாலில் இத்தகைய திறன் குறைவாக இருப்பதால், அவற்றில் கால்சியத்தின் அளவு மிகக் குறைவாக இருக்கும். இதை வைத்துப் பார்க்கும் போது, நாட்டு மாட்டுப் பாலில் தான் அதிகளவில் கால்சியச்சத்து உள்ளது. அதாவது, 38.3 மில்லி கிராம்/டெசி லிட்டர் என்னும் அளவில் கால்சியம் அடங்கியுள்ளது.

உயிர்ச் சத்துகளான ஏ, டி, பி மற்றும் பாஸ்பரஸ், அயோடின் போன்ற நுண் சத்துகளும் அதிகமாக உள்ளன. அயலின மாட்டுப் பாலில் 3-4% கொழுப்புச் சத்து உள்ளது. ஆனால், நாட்டு மாட்டுப் பாலில் 4-5% காணப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாட்டு மாட்டுப் பாலைக் குழந்தைகளுக்கு உணவாகக் கொடுக்கின்றனர். நாட்டு மாடுகள் தரும் பாலில் ஏ2 வகை புரதம் உள்ளது. இவ்வகை ஏ2 புரதமானது, தாய்ப்பாலில் உள்ள புரதத்தை ஒத்ததாகும். மேலும், குழந்தைகளுக்கு எந்தவிதச் செரிமானச் சிக்கலையும் ஏற்படுத்துவதில்லை.

மற்ற பால் பொருள்களைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது ஏற்படும் வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவற்றில் இருந்து குழந்தைகளைப் பேணிப் பாதுகாத்துக் குழந்தைகளின் உடல் நலத்துக்கு உறுதுணையாக இருக்கிறது. மேலும், இப்புரதம் குழந்தைகளின் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தி, அவர்களை நோய்கள் தாக்கா வண்ணம் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, குழந்தைகளின் மூளை வளர்ச்சியைக் கூட்டி, அவர்களின் சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்கிறது.
நாட்டு மாட்டுப் பாலிலுள்ள சத்துப் பொருள்கள்

சிந்தி பசும்பாலில் 86.07% நீர், 4.90% கொழுப்பு,3.42% புரதம், 4.91% சர்க்கரை, 0.70% சாம்பல் சத்து ஆகியன அடங்கியுள்ளன.

கிர் பசும்பாலில் 86.44% நீர், 4.73% கொழுப்பு, 3.32% புரதம், 4.85% சர்க்கரை, 0.66% சாம்பல் சத்து ஆகியன அடங்கியுள்ளன.

தார்பார்க்கர் பசும்பாலில் 86.58% நீர், 4.55% கொழுப்பு, 3.36% புரதம், 4.83% சர்க்கரை, 0.68% சாம்பல் சத்து ஆகியன உள்ளன.

சாகிவால் பசும்பாலில் 86.42% நீர், 4.55% கொழுப்பு, 3.88% புரதம், 5.04% சர்க்கரை, 0.66% சாம்பல் சத்து ஆகியன உள்ளன.

பொதுவாக, நாட்டு மாடுகள் இந்தியாவில் நிலவும் தட்பவெப்பச் சூழ்நிலைகளுக்கு ஏற்றதாகவும், நோயெதிர்ப்புத் திறன் மிக்கதாகவும், பராமரிப்பதற்கு எளிதாகவும் உள்ளன. எனவே, நம் உடல் நலத்துக்கு உகந்த பாலைக் கொடுக்கும், நமது நாட்டினப் பசுக்களைப் பேணிக் காப்போம், நோய் நொடியின்றி வாழ்வோம்.


மரு.மு.மலர்மதி, த.முத்துராமலிங்கம், து.ம.அ.செந்தில்குமார், சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading