மேம்பட்ட உத்திகள் மூலம் உவர்நீர் மீன் வளர்ப்பு!

மீன் வளர்ப்பு என்பது இப்போது வளர்ந்து வரும் துறையாக விளங்குகிறது. மீன் வளர்ப்பின் சிறந்த நடைமுறைக்கு உற்பத்தி முறைகள் பற்றிய அடிப்படைப் புரிதல் அவசியம்.

பலவகையான மேம்பட்ட வளர்ப்பு முறைகள் வளர்ந்து வருகின்றன. அவற்றில், மறுசுழற்சி மீன் வளர்ப்பு (RAS), தொடர் நீர்ச்சுழற்சி வளர்ப்பு (Raceway), கூண்டில் மீன் வளர்ப்பு, மீன் வளர்ப்புடன் கூடிய தாவர வளர்ப்பு, வெவ்வேறு நீர் மட்டங்களில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு, உவர்நீர் மீன் வளர்ப்பு போன்றவை இப்போது நடைமுறையில் உள்ளன.

மறுசுழற்சி மீன் வளர்ப்பு

இம்முறையில், மீன் வளர்ப்புத் தொட்டியில் உள்ள நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பல்வேறு மீனினங்களை வளர்க்கலாம். இயந்திர மற்றும் உயிரியல் வடிகட்டுதல் முறைகளில் கழிவுகளை நீக்கி, சுத்தம் செய்த நீரில், கொடுவா, செங்கனி, பாறை, கறிமீன், பால் கெண்டை போன்ற உவர்நீர் மீன்களை வளர்க்கலாம்.

மறுசுழற்சி மீன் வளர்ப்பு முறையானது, மற்ற மீன் வளர்ப்பு முறைகளைப் போலில்லாமல், மீன்களை அதிகமாக இருப்பு வைத்து வளர்ப்பது ஆகும். குறைந்தளவு நிலம், நீர்நிலைப் பற்றாக்குறை உள்ள இடங்களில் மறுசுழற்சி மீன் வளர்ப்பு என்பது, மீன் வளர்ப்போருக்கு அருமையான வாய்ப்பாகும்.

மறுசுழற்சி மீன் வளர்ப்பில் மீனினங்களுக்கு ஏற்ப, புரதம், அவசியத் தாதுகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவை வழங்க வேண்டும். மீன்களின் உடல் எடையில் 3-5 சத அளவிலான உணவை, சரியான உணவு இடைவெளியில் அளித்தால், இந்த முறையில் சிறந்த வளர்ச்சியைப் பெறலாம். இம்முறையில், ஆவியாதல் போன்ற காரணங்களை முன்னிட்டு, தினமும் 10 சத நீரை மட்டும் மாற்ற வேண்டும்.

நன்மைகள்: குறைந்த நீரில், குறைந்த நிலத்தில் மீன் வளர்ப்பு. நீரின் தர அளவுகளைப் பராமரிப்பது எளிது. மீன்களை அதிகமாக இருப்பு வைத்து வளர்க்கலாம். நோயெதிர்ப்பு மற்றும் பூச்சிக் கொல்லிகளின் தேவை குறையும். நிலையான உற்பத்தி. மீன்களின் உடல் நலம், செயல் திறன் மேம்படும்.

தொடர் நீரோட்ட முறை மீன் வளர்ப்பு

தொடர் நீரோட்ட முறை மீன் வளர்ப்பு என்பது, ஓடும் நீரில் மீன்களை வளர்ப்பது ஆகும். இம்முறையில், அருகருகே தொட்டிகளை அமைத்து அவற்றுள் தொடர்ந்து நீர் செல்லும் வழியை ஏற்படுத்தி, மீன்களை அதிகமாக இருப்பு வைத்து வளர்ப்பதன் மூலம் கூடுதல் உற்பத்தியைப் பெறலாம்.

இவ்வகையில், திலேப்பியா, கொடுவா, செங்கனி, பாறை போன்ற மீன்களை வளர்க்கலாம். மேலும், கெளுத்தி- திலேப்பியா, கெளுத்தி- கறிமீன் எனக் கூட்டாக வளர்க்கலாம்.

நீரோடும் தொட்டியில் ஒரு m3 அளவுள்ள இடத்தில், 9 முதல் 15 மீன்கள் வரை இருப்பு வைக்கலாம். இம்முறையில், உணவு மற்றும் உணவிடுதல் முக்கியப் பங்காக இருக்கிறது.

ஏனெனில், இம்முறையில் கட்டுப்பாடான சூழலில் வளர்ப்பதால், மீன்கள் முற்றிலும் செயற்கை உணவையே சார்ந்திருக்கும். எனவே, அந்த உணவானது, மீன்களுக்கு ஏற்ற புரதம், கொழுப்பு, தாதுகள் என அனைத்துச் சத்துகளையும் கொண்டதாக இருக்க வேண்டும்.

நன்மைகள்: வளர்ச்சி அதிகமாக இருப்பதால் கூடுதல் மகசூல் கிடைக்கும். நோய்ப் பிரச்சனைகளைக் கண்டறிதல் எளிதாக இருக்கும். தீவனப் பயன்பாடு சிறப்பாக இருக்கும் மற்றும் தீவனச் செலவு குறையும்.

நோய்த் தாக்கம் மற்றும் இறப்பு வாய்ப்புக் குறைவாக இருக்கும். நீர்நிலை தரமாக இருக்கும் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக் குறைவாக இருக்கும். குளத்து நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவதால், நீரின் தேவை குறையும்.

வலை வேலியில் மீன் வளர்ப்பு (Pen culture)

உவர்நீர்க் குளம் அல்லது குட்டையில் செவ்வக வடிவில் வலை வேலியை அமைத்து, மீன்களை அதிகமாக இருப்பு வைத்து வளர்க்கலாம். இந்த நிலை, மீன்களுக்கு இயற்கைச் சூழலைத் தருவதுடன், இயற்கை உணவுகளை உண்டு வளரும் தன்மையை உருவாக்கும். வலை வேலியில், புல் கெண்டை, பால் கெண்டை, விரால் மீன், திலேப்பியா போன்ற மீன்களை வளர்க்கலாம்.

ஒரு எக்டர் குளத்தைச் சுற்றி வலை வேலியை அமைத்து, 5 கிராம் எடையுள்ள விரலிகளை 8,000 முதல் 10,000 வரை இருப்பு வைத்து வளர்க்கலாம். அவற்றின் மொத்த உடல் எடையில் 3-5 சத அளவில் உணவைத் தர வேண்டும். பிறகு, 400-500 கிராம் அளவுள்ள மீன்களை, மற்ற மீனினங்கள் மற்றும் இறால் வகைகளுடன் சேர்த்து வளர்த்து அதிக இலாபம் பெறலாம்.

நன்மைகள்: கிடைக்கும் இடத்தில் தேவையான அளவைப் பயன்படுத்தலாம். வேட்டை மீன்களிடமிருந்து பாதுகாக்கலாம். பல்வேறு மீன் வகைகளை வளர்க்கலாம். எளிதாக அறுவடை செய்யலாம். இயற்கை உணவு கிடைப்பதும், வீணாகும் கழிவுப் பொருள்களின் பரிமாற்றமும் எளிதாகும்.

கூண்டுகளில் மீன் வளர்ப்பு (Cage culture)

இம்முறையில், உவர்நீர் நிலைகளான, ஏரி, கடற்கரை ஓரங்களில், மீன்களை வளர்த்து உற்பத்தியைப் பெருக்கலாம். இரும்பு, பைபர், கண்ணாடி இழை போன்றவற்றால் ஆன கூண்டுகள் பல வடிவங்களில் கிடைக்கும்.

இவற்றில் வளர்ப்பதற்கு ஏற்ற வகையில், இளம் மீன் குஞ்சுகளின் அளவைப் பொறுத்து, 1-2.5 செ.மீ. கண்ணுள்ள, நைலான், பாலித்தின் வலைகள் 10 முதல் 50 ச.மீ. அளவுகளில் தயார் செய்யப்படுகின்றன.

இம்முறையில், நைல் திலேப்பியா, பால் கெண்டை, கறிமீன், கயல், கொடுவா, சில்வர் பம்பனோ போன்ற மீன்களை வளர்க்கலாம். ஒரு ச.மீ. பரப்பில், 80-100 கிராம் எடையுள்ள 50 மீன்களை இருப்பு வைக்கலாம். இந்த மீன்கள் 200-250 கிராம் எடைக்கு வந்ததும், ஒரு ச.மீ. பரப்பில் 5 மீன்களை மட்டும் இருப்பு வைக்க வேண்டும்.

கூண்டுகளை இயற்கை நீரோட்டமுள்ள பகுதிகளில் அமைப்பதால், மீன்களுக்குத் தேவையான மூச்சுக்காற்று நன்கு கிடைக்கும். மோசமான வானிலை, கடல் சீற்றம், புயல் போன்ற காலங்களில், கூண்டுகளைச் சரியான முறையில் பாதுகாப்பது அவசியம்.

நன்மைகள்: பலவகையான நீர் நிலைகளில் கூண்டு மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம். குறைவான முதலீடு இதற்குப் போதுமானது. மீன்களைக் கண்காணிப்பது, மாதிரிகள் எடுப்பது மற்றும் அறுவடை செய்வது எளிது.

குறைவான மனிதவளமே தேவைப்படும். வேலையற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்குச் சிறந்த வேலை வாய்ப்பாக அமையும். மீனவர்கள், மீன்பிடி தடைக் காலத்தில் கூண்டுமீன் வளர்ப்பு மூலம் வருமானம் ஈட்டலாம்.

மீன் வளர்ப்புடன் கூடிய தாவர வளர்ப்பு (Aquaponics)

இம்முறை, மீன் வளர்ப்புடன் தோட்டக்கலைத் தாவர வளர்ப்பைக் கொண்டது. இதற்கு, மரபணு முறையில் உருவாக்கப்பட்ட திலேப்பியா மீன் மிகவும் பொருத்தமானது. இம்முறையில், m2 பரப்பில் 80-150 மீன்களை இருப்பு வைக்கலாம்.

இம்முறையில் வளர்க்க, பல தாவரங்கள் ஏற்றவை. ஆயினும், அவை குறிப்பிட்ட அமைப்புக்கு வேலை செய்வது, மீன்களின் முதிர்ச்சி மற்றும் இருப்பு அடர்த்தியைப் பொறுத்தது.

இந்தக் காரணிகள், மீன்களில் இருந்து வெளியேறும் சத்துகளின் செறிவைப் பாதிக்கச் செய்யும். மேலும், அந்தச் சத்துகள், பாக்டீரியா வழியாகத் தாவர வேர்களுக்குக் கிடைக்கும்.

குறைந்த மற்றும் நடுத்தரச் சத்துத் தேவைகளைக் கொண்ட பச்சையிலைக் காய்கறிகள், தக்காளி, கீரை, முட்டைக்கோசு, துளசி, கொத்தமல்லி போன்ற தாவரங்களை இம்முறையில் வளர்க்கலாம். இது, அடிப்படையில் மறுசுழற்சி முறை அமைப்பாகும்.

மீன்களின் தீவனமும், மீன்களின் கழிவுகளும் தொட்டிகளில் செலுத்தப்படும். நீரின் ஓட்ட விகிதம் டைமர் உதவியுடன் சரி செய்யப்படும். அறுபது டன் அளவுள்ள அமைப்பில், 500 மீ2 தாவரப் பரப்பை ஆதரிக்க முடியும். இதில், ஆண்டுக்கு 30-40 டன் தாவர மகசூலும், 3-4 டன் திலேப்பியா மீன்களும் கிடைக்கும்.

நன்மைகள்: நீரின் பயன்பாடு குறைவாக இருக்கும். செயற்கை உரம் தேவையில்லை. வளமான மண்ணுள்ள விளை நிலங்கள் தேவையில்லை. இயற்கையாகவே கரிம உரங்களைக் கொண்டிருக்கும். பூச்சி மற்றும் நோய்ப் பாதிப்புகள் குறைவாக இருக்கும். களையெடுக்கும் வேலை இல்லை மற்றும் தாவரங்கள் வேகமாக வளரும்.

பல்வேறு நீர் மட்டங்களில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு(IMTA)

இது, பல உயிரினங்களை, ஒரே நேரத்தில் ஒரே அமைப்பில், வெவ்வேறு நிலைகள் அல்லது சத்து நிலைகள் அல்லது வேறுபட்ட வெப்ப நிலையில் வளர்க்கும் முறையாகும்.

இம்முறையில், ஓர் உயிரினம் உண்ணாத தீவனம், அதன் கழிவுகள், சத்துகள் மற்றும் துணைப் பொருள்களை மீட்டெடுத்து, மற்ற பயிர்களுக்கான உரம், தீவனம் மற்றும் ஆற்றலாகப் பயன்படுத்த முடியும். இம்முறையில், பால் கெண்டை, கறிமீன், கயல் போன்ற மீன்களை வளர்க்கலாம்.

நன்மைகள்: உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்புக்கான மிகப்பெரிய திறனை வழங்குகிறது. கழிவுகள் மற்றும் உண்ணப்படாத ஊட்டங்களை மாற்றுவதன் மூலம், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழலின் நிலையான தன்மையை ஊக்குவிக்கிறது.

சத்து அதிகமாகத் தேங்குவதைக் குறைக்கிறது. பல வகைகளில் பொருளாதார மேம்பாடு கிடைக்கிறது. சுற்றுச்சூழலுக்கு எதிரான தாக்கங்களைக் குறைக்கிறது. அனைத்து நீர்நிலை மட்டங்களின் திறமையான பயன்பாடுகளை அடைய முடிகிறது.

உயிர்க்கூழ்மத் திரள் முறையில் மீன் வளர்ப்பு (Biofloc Technology)

இது, புதுமையான, மதிப்புமிக்க, ஆற்றல் வாய்ந்த தொழில் நுட்பமாகும். இத்தொழில் நுட்பம் மூலம், மீன்களின் நச்சுத்தன்மை வாய்ந்த நைட்ரேட், நைட்ரைட், அம்மோனியா ஆகியவற்றை, புரதத் தன்மையுள்ள உணவுப் பொருள்களாக மாற்றலாம். மேலும் இது, கட்டுப்பாடான சூழலில், பூஜ்ஜிய நீர்ப் பரிமாற்றத்துடன் விளங்கும் தொழில் நுட்பமாகும்.

இம்முறையில், அதிகளவில் கார்பன் நைட்ரஜன் விகிதத்தைப் பராமரிப்பதால், ஹெட்டிரோடிராபிக் நுண்ணுயிர் வளர்ச்சி அதிகமாகத் தூண்டப்படுகிறது. மேலும், நீரின் தரம் மேம்படுவதால், நீர்வாழ் உயிரிகளின் எதிர்ப்புத் திறன் அதிகமாகிறது.

இம்முறையில், நீர்ப் பரிமாற்றம் குறைவாகவே இருக்கும். இது, மீன்களின் உயிர் வாழ்வு விகிதத்தை மேம்படுத்தி அதன் உற்பத்தியை அதிகரிக்கிறது.

மேலும், உயிர்க் கூழ்மத் திரளைப் பயன்படுத்துவதால், புரதங்கள் நிறைந்த ஊட்டத்தைக் குறைவாகப் பயன்படுத்தலாம். எனவே, தீவனச் செலவு குறையும். ஒரு எக்டர் பரப்பில் 22 மெட்ரிக் டன் அளவு உயிர்க் கூழ்மத் திரளை உற்பத்தி செய்யலாம்.

நன்மைகள்: மீன்களுக்கு உணவாக அமைகிறது. நச்சு அம்மோனியா குறைவதால், நீரானது தரமாக இருக்கும். குறைந்தளவு அல்லது பூஜ்ஜிய அளவு நீர்ப் பரிமாற்றம். குறைந்த தீவன மாற்று விகிதம் மற்றும் குறைந்த தீவனச் செலவு. சத்துகளைத் தொடர்ந்து மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம். நோய்க் கிருமிகள் கட்டுப்படும்.

இந்த மேம்பட்ட மீன் வளர்ப்பு முறைகள், மீன் வளர்ப்பில் சிறந்த உற்பத்தி, குறைந்த முதலீடு மற்றும் எளிதான சந்தை ஆகியவற்றில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

மீன் வளர்ப்பில், நல்ல நிலையில் வேகமாக வளரும் மீனினங்களை உற்பத்தி செய்து, அதிக உற்பத்தியை விரைவான காலத்தில் பெறலாம்.

எனினும், இந்த வளர்ச்சி மென்மேலும் உயர்வதற்கு, தொழில் நுட்பத் திறனையும், உள் கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும்.


வெ.எழில் அரசி. நா.இரம்யா, செரில் ஆண்டனி, டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!