மாடுகளில் குருதி மாற்ற சிகிச்சை!

குருதி மாற்ற அல்லது குருதியேற்ற சிகிச்சை என்பது, பலநூறு ஆண்டுகளாக, மனிதன் மற்றும் கால்நடைகளின் வாழ்வில், அவசர மற்றும் ஆபத்துக் காலங்களில் பின்பற்றக் கூடியதாகும்.

இந்த சிகிச்சையை, முதன் முறையாக ரிச்சர்டு லோவர் என்பவர் 1665 ஆம் ஆண்டு, நாய்களில் தொடங்கினார். கால்நடை சிகிச்சைத் துறையில் குருதியேற்ற சிகிச்சை, 1950 களில் இருந்து மேம்படுத்தப்பட்ட உத்திகள் மற்றும் கருவிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்போது, குருதியேற்ற சிகிச்சை முறை அதிக முன்னேற்றத்தை அடைந்து உள்ளது. குருதிக் கொடையளிக்கும் மாடுகளைத் தேர்ந்தெடுப்பதில், அவற்றின் இரத்த வகை மற்றும் இரத்தம் தேவைப்படும் விலங்கின் ஒவ்வாத் தன்மையை அளவிடுதல் போன்ற வழிமுறைகள், குருதியேற்ற சிகிச்சை முறையை, சற்றுச் சிக்கலான முறையாக மாற்றுகிறது.

இக்கட்டுரையில், கால்நடைகளில் குருதியேற்ற சிகிச்சை, குறிப்பாக மாடுகளில் சாத்தியமாதல் மற்றும் அதன் நன்மைகளைப் பற்றிக் காண்போம்.

இரத்தமாற்று சிகிச்சைக்கான அவசியம்

துரித அல்லது நாள்பட்ட இரத்தச்சோகை, இரத்த ஒட்டுண்ணிகளின் தாக்கம், துரித இரத்தக்கசிவு அல்லது இரத்தப்போக்கு, விபத்தால் அதிக இரத்த இழப்பு ஏற்படுதல், இரத்த உறையாத் தன்மையுள்ள நோய்கள்,

கன்றை ஈன்ற பிறகு அதிக இரத்தப்போக்கு ஏற்படுதல், அறுவை சிகிச்சையின் போது இரத்தக் குறைபாடு ஏற்படுதல் போன்ற சூழல்களில், இரத்தமேற்றுதல் அல்லது இரத்த மாற்றுதல் சிகிச்சையைப் பின்பற்றலாம்.

மனிதர்களில் பின்பற்றப்படும் இரத்தத்தில் உள்ள மொத்தப் பகுதிகளையும் குருதியேற்றம் செய்வதைக் காட்டிலும், நோய் அல்லது தேவைக்கு ஏற்றாற் போல், ஒருசில சார்புகளை மட்டும்,

அதாவது, குறிப்பிட்ட அடர் இரத்தச் சிவப்பணுக்களை மட்டும் பிரித்தெடுத்து சிகிச்சையாக அளிக்கலாம். ஒரு மாட்டுக்குக் குருதியேற்றம் செய்யலாம் என்பதை இரத்தச் சோகையால் ஏற்படும் அறிகுறிகளே தீர்மானிக்கும்.

மாடுகளில் இரத்தச்சோகை அறிகுறிகள்

மாடு சோர்வாக இருத்தல். இதயத் துடிப்பு மிகுதியாக இருத்தல். மூச்சிரைப்பு கூடுதலாக இருத்தல். கண்ணிமை மற்றும் பிறப்புறுப்பின் உட்பகுதி வெளிரி இருத்தல். உடல் மெலிந்து காணப்படுதல்.

குருதியேற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள்

குருதியேற்றத்தால், இரத்த நாளங்களில் இரத்தம் கரைதல் தீவிரமாக இருக்கும். நோய்த்தொற்று ஏற்படலாம்.

இரத்தத்தைச் சேகரிக்கும் போது, இரத்தத்தை உறையாமல் பாதுகாக்கும் சிட்ரேட் என்னும் உபபொருள் அதிகரித்தால் கால்சியக் குறைபாடு ஏற்படலாம்.

இதய நோயுள்ள மாடுகளில் இரத்தமிகுதி ஏற்படலாம். உடல் வெப்பம் கூடுதல், ஒவ்வாமையால் தோல் தடிப்பு உண்டாதல் ஆகியன அரிதாக நிகழலாம்.

இரத்ததானம் கொடுக்கும் மாடுகளில் இரத்த ஒட்டுண்ணிகளின் தாக்கம் இருப்பின், இரத்தம் ஏற்றப்படும் மாடுகளில் இந்த நோய்த்தொற்று ஏற்படலாம். மேலும், இரத்தம் ஏற்றப்பட்ட மாடுகளில், மற்ற நுண்ணுயிரிகளால் நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

எனவே, கால்நடை மருத்துவரை அணுகி, இரத்தச் சோகைக்கான காரணங்களை அறிந்து, தேவையான மாடுகளுக்குக் குருதி மாற்றம் செய்தால், இரத்தச் சோகையில் இருந்து மாடுகளைக் காப்பாற்றலாம்.


PB_VENKATESAN

மரு.மா.வெங்கடேசன், முனைவர் சிவராமன், முனைவர் தே.சுமதி, கால்நடை சிகிச்சைத்துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!