கானாடு காத்தானில் உருவாகும் கானகம்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர்.

லகமறிந்த ஊர். திரை கடலோடி, திரவியம் தேடி, சொந்தத் தேவைக்காக எண்ணிச் செலவழித்து, சமூகத் தேவைக்காக எண்ணாமல் செலவழித்த உத்தம மானுடர்கள் பிறந்த ஊர். ஒருநேர இருநேர பசிக்கென்று இல்லாமல், விழுதுகள் தாங்கிய ஆல மரமங்களாய் நிறுவனங்களை உருவாக்கி, ஆயிரமாயிரம் மக்களுக்கும், அவர்களின் உறவுகளுக்கும், வாழ்நாள் முழுதும் அமுதூட்டும் பண்பாளர்கள் வாழ்ந்த ஊர்.

காணிநிலம் வேண்டும் காணிநிலம் வேண்டும் என்று அன்னை பராசக்தியிடம் வரம் கேட்கும் மகாகவி பாரதி, பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திட வேண்டும் என்று, அந்த மகா சக்தியை நோக்கி இறைஞ்சுவான்.

அதைப்போல், காலத்தால் அழியா வண்ணம், விலை நயமும் கலை நயமும் மிக்க அரண்மனைகளை ஒத்த பிரம்மாண்ட வீடுகளை உருவாக்கி, உலக வரைபடத்தில் ஓர் அடையாளத்தை உண்டாக்கி, அவனி மக்களின் பார்வையைத் தங்களின் வாழ்விடம் நோக்கித் திருப்பிய சாதனையாளர்கள் வாழ்ந்த ஊர். இளகிய மனமும் இலக்கிய மனமும் கொண்டவர்கள் கூடி வாழ்ந்த ஊர். அது, கானாடு காத்தான்.

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வூரின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். மழைநீர்ச் சேமிப்பின் தேவையை வலியுறுத்தும் விதமாகத் தமிழ்நாட்டில், 39 ஆயிரத்துச் சொச்சம் ஏரிகளை, குளங்களை, கண்மாய்களை, ஊருணிகளை உருவாக்கி, வரலாறாய், உலகுக்கே எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர்கள் நம் மக்கள். அவர்கள் காட்டிய பாதையை மறந்ததால் நீருக்கு அலைகிறோம்; நீரின்றித் திரிகிறோம்; போர் வருமென்று ஆருடம் கூறுகிறோம்; போக்கிடமின்றித் தவிக்கிறோம்.

ஆனால், இதற்கு விதிவிலக்காய் இன்றும்கூட, கானாடு காத்தான் மக்கள், குளிக்கும் நீரும் குடிக்கும் நீரும் மழைநீரே. ஊரைச் சுற்றி எட்டு ஊருணிகள். குளிக்க நான்கு, குடிக்க நான்கு எனப் பிரித்து வைத்திருக்கிறார்கள். காடுகளில் பெய்யும் மழைநீரை, அவர்கள் குடிநீர் ஊருணியில் சேமிக்கும் பாங்கே ஓர் அறிவியலாக இருக்கிறது.

வாய்க்காலில் வரும் மழைநீர், ஊருணி நுழைவாய் மதகுக்குப் பக்கத்தில் தேங்கி நின்று செல்லும் வகையிலான அமைப்பை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். இங்கே தேங்கி நிற்கும் நேரத்தில், நீருடன் கலந்து வரும் குப்பை, மண்டியெல்லாம் அவ்விடத்தில் தங்கி விட, சுத்தமான நீராக ஊருணிக்குள் செல்கிறது மழைநீர்.

ஊருணிக்கு வெளியிலேயே மண்டியெல்லாம் வடிகட்டப்படுவதால், ஊருணியைத் அடிக்கடி தூர்வார வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. இந்த நீர் குடிப்பதற்கு இளநீரைப் போல இருக்கும் என்கிறார்கள்.

இப்படித் தனி அடையாளங்களுடன் விளங்கும் கானாடு காத்தானின் ஒரு பகுதி பழையூர். இப்பகுதியைச் சேர்ந்தவர் சே.இரவி. தொழிலதிபராக இருந்தாலும், சுற்றுச்சூழல் ஆர்வலர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதில் தான் இவருக்கு விருப்பம் அதிகம். அந்தளவுக்குப் பசுமையின் மீது நாட்டமுள்ளவராக, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு மிக்கவராக இருக்கிறார்.

வியக்கும் வகையில் இவ்வூரில் அமைந்துள்ள பெரிய கோயில் என்னும் சிவன்கோயில் தேருக்கான இரும்புச் சக்கரங்களைப் பல இலட்சங்கள் மதிப்பில் இவர் செய்து கொடுத்திருப்பதில் இருந்து, இவரின் சமூக அக்கறையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்நிலையில், வறட்சியே வாடிக்கையாகிப் போன தங்கள் பகுதியில் செழிப்பை உண்டாக்க வேண்டும் என்னும் தாகத்தில், பழையூர் கானாடு காத்தான் பகுதியில், வெய்யில் படும் இடமெல்லாம் மரங்களை வளர்க்க விரும்பிய இரவி, அவ்வூர் இளைஞர்களிடம் இத்தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

உடனே,“அதற்கென்ன செய்தால் போச்சு, இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?’’ என்னும் உற்சாகத்துடன், பசுமைப்படை ஒன்று தயாராகி இருக்கிறது. அரிவாள், மண்வெட்டியுடன் கிளம்பிய அந்தப் படையினர், ஒரே நாளில் சுமார் 75 மரப்போத்துகளை நட்டு முடிக்கவும், அவற்றுக்கு நீரூற்றும் விதமாக மழை கொட்டித் தீர்க்கவும் சரியாக இருந்திருக்கிறது. இந்தச் செய்தி நம்மைக் கானாடு காத்தானுக்கே அழைத்துச் செல்ல, அங்கே இரவியைச் சந்தித்துப் பேசினோம்.

“கானாடு காத்தானுக்கு முன்பே உருவானது பழையூர். இன்று இந்த இரண்டு ஊர்களும் வித்தியாசம் இல்லாத அளவுக்கு இணைந்து விட்டன. எனக்குப் பூர்விகம் இந்த ஊர்தான் என்றாலும், அப்பா சென்னையில் வேலை பார்த்ததால் நான் படித்தது, வளர்ந்தது, இப்போது தொழில் செய்வது எல்லாமே சென்னை தான் என்றாகி விட்டது. முன்பு, ஆண்டுக்கு ஒன்றிரண்டு தடவை இங்கே வந்து போவோம். ஆனால், என் மனைவி பிறந்தது காரைக்குடி என்பதால், இப்போது அடிக்கடி இங்கே வருகிறோம்.

சென்னையில் வாகன நெரிசலிலும், மூச்சுவிட முடியாத அசுத்தக் காற்றிலும் வாழ்வது பழகி விட்டாலும், சின்ன வயதிலிருந்தே இந்தச் செடிகள் மீது, கொடிகள் மீது, மரங்கள் மீது என்னையறியாத ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது.

இப்போது, எனக்கென்று ஒரு வருமானம் இருப்பதாலும், முடிவெடுக்கும் நிலையில் நான் இருப்பதாலும், இந்த ஈர்ப்பானது செயல் வடிவமாகும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அதனால், இயற்கை சார்ந்த கூட்டம் எங்கு நடந்தாலும் அதில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

இதன் மூலம் கிடைக்கும் அனுபவ அறிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைத்து, அதை முதலில் நமது ஊரிலிருந்து தொடங்குவோம் என்று முடிவு செய்தேன். இதை இளைஞர்களிடம் சொன்னதும், நான் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவர்கள் ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள். இளைஞர்கள் மட்டுமில்லாமல், இந்தப் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சிதம்பரம், கௌன்சிலர் அழகு உள்ளிட்ட ஊர்ப் பெரியவர்களும் ஆதரவைத் தந்தார்கள்.

குடிநீர் உருணியான செட்டியார் ஊருணிக்கரை, கால்பந்து விளையாட்டுத் திடல், கருப்பசாமி கோயில், இடுகாடு, பெரியகோயில் பகுதிகளில், சுமார் 75 ஆலமர, அரசமர, வேப்பமரப் போத்துகளை நட்டிருக்கிறோம். மரமில்லாத வெற்றிடங்களில் எல்லாம் தொடர்ந்து மரங்களை நடுவதற்கு முடிவு செய்திருக்கிறோம்.

எனக்கு ஆர்வம் இருப்பதால் இந்த வேலையைச் செய்கிறேன் என்பதை விட, இதை நாம் பிறந்த மண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமையாகவே நினைக்கிறேன். மேலும், இந்தக் கடமையை மனதாரச் செய்கிறோம்.

தனியாகச் செய்வதைவிட, ஒரு வேலையைக் கூட்டாகச் சேர்ந்து செய்வது மிகுந்த பயனைத் தரும் என்பதால், ஊரிலுள்ள மக்கள் அனைவரும் இணைந்து, மரங்களை வளர்க்கும் வேலையைத் தொடர்ந்து செய்ய இருக்கிறோம். அடுத்தடுத்துச் செய்யும் போது இன்னும் நிறைய மக்கள் எங்களுக்கு ஆதரவைக் கொடுப்பார்கள்.

இந்த மரங்களுக்கு நீரூற்ற வசதியாக, ஆயிரம் லிட்டர் அளவுள்ள நீர்த் தொட்டியுடன் கூடிய சிறிய டிராக்டரை வாங்கியுள்ளோம். நல்ல காற்றும், குளிர்ச்சியான சூழலும் இருந்தால் தான் மழை வரும். அதை நாம் உருவாக்க வேண்டும். இது நம்மால் முடியும்.

ஊர்கூடி இழுத்தால், தேர் நிலையை அடைவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. அதைப்போல, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மிக முக்கியக் காரணமாக இருக்கும் மரங்களை, ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் வளர்த்தால் வெற்றி இலக்கை எட்ட முடியும். இந்த வெற்றி என்பது, நமக்குப் பின்னால் நமது அடுத்த தலைமுறை மக்கள் இந்த மண்ணில் நிம்மதியாக வாழ்வதற்கான வழி. அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் செய்கிறோம்.

எங்கள் ஊருக்கென்று சில பெருமைகள் இருக்கின்றன. இந்தச் சமூகத்துக்கான நன்மைகளைச் செய்த நல்ல மனிதர்கள் பலர் இந்த ஊரில் பிறந்திருக்கிறார்கள் என்பதும், இங்கு அவர்கள் கட்டியுள்ள வீடுகள் அழகானவை, பார்த்துப் பார்த்து வியக்கும் தன்மை வாய்ந்தவை என்பதும், எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், வெளியே தெரியாத இயற்கை சார்ந்த செய்திகளும் உள்ளன. மேற்கில் இருந்து கிழக்கை நோக்கித் தான் பெரும்பாலும் தண்ணீர் ஓடும். ஆனால், எங்கள் ஊரில் கிழக்கில் இருந்து மேற்கை நோக்கித் தான் நீரோட்டம் இருக்கும்.

மேலும், இப்படி ஓடும் நீர் எங்கள் ஊரைச் சுற்றியுள்ள எட்டுக் குளங்களிலும் நிறைந்த பிறகு தான் அடுத்த ஊர்க் கண்மாய்க்குச் செல்ல முடியும். இதுவும்கூட மிகச்சிறந்த மழைநீர்ச் சேமிப்பு உத்தி தான். இதை, அந்தக் காலத்திலேயே எங்கள் ஊர்ப் பெரியவர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது, மிகவும் பெருமையாக இருக்கிறது’’ என்றார்.

அடுத்து, கானாடு காத்தான் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் த.சிதம்பரத்தைச் சந்தித்தோம். வெள்ளந்தியான மனிதர். உள்ளுக்குள் ஒன்றை வைத்து வெளியில் ஒன்றைப் பேசும் அரசியல் தெரியாத இவர் நம்மிடம் கூறியதாவது:

“அம்மா ஆட்சியில் ஐந்தாண்டுக் காலம் கானாடு காத்தான் பேரூராட்சித் தலைவராக இருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தக் காலத்தில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை எந்தக் குறையும் இல்லாமல் என்னால் முடிந்த வரையில் செய்து கொடுத்திருக்கிறேன்.

அடுத்து, இயற்கை வளம் நன்றாக இருந்தால் தான் மழை சீராகப் பெய்யும். இதைக் கருத்தில் கொண்டு தான் அம்மா அவர்கள், தனது பிறந்தநாளில், தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நடச்சொல்லி, அவரே மரக்கன்றை நட்டுத் தொடக்கி வைப்பார்.

அந்த வகையில், கானாடு காத்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட, பேரூராட்சிப் பூங்கா, மருத்துவமனை போன்ற பகுதிகளில் குறைந்தது ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்திருப்போம். பேரூராட்சியின் உரக்கிடங்கு அமைந்துள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை வளமீட்புப் பூங்காவாக மாற்றியிருக்கிறோம்.

இங்கே, வேம்பு, புங்கன், இலுப்பை, தென்னை மரங்கள் நூற்றுக்கணக்கில் வளர்ந்து வருகின்றன. இப்போது வளமீட்புப் பூங்கா, ஒரு சோலையைப் போலக் காட்சியளிக்கிறது.

இங்கு, எங்கள் பேரூராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், மட்கும் குப்பை, மட்கா குப்பை எனப் பிரிக்கப்படுகின்றன. மட்கும் குப்பை மண்புழு உரமாகத் தயாரிக்கப்படுகிறது. மட்கா குப்பை தனியே சேமிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக அனுப்பப்படுகிறது. சாலையை விரிவாக்கம் செய்வதற்காக வெட்டப்பட இருந்த ஆலமரத்தை, எங்களின் புல்டோசரைப் பயன்படுத்தி வேருடன் தோண்டி விளையாட்டுக்குத் திடலுக்குப் பக்கத்தில் நட்டிருக்கிறோம்.

சமீபத்தில் தம்பி இரவி, இளைஞர்களின் ஒத்துழைப்புடன் போத்து மரங்களை நட்டபோது, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இன்னும் காலியாக இருக்கும் இடங்களிலெல்லாம் மரங்களை வளர்க்க வேண்டும். அதற்கு நான் எப்போதும் ஆதரவாக இருப்பேன்.

மக்கள் பணியில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும் என்பதை, ஏற்கெனவே இங்கே வாழ்ந்து மறைந்த பெரியவர்கள் எங்களுக்குப் பாடமாக வாழ்ந்து காட்டிச் சென்றுள்ளார்கள். அவர்கள் காட்டியுள்ள நல்ல பாதையில் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம்’’ என்றார்.

அடுத்து, கானாடு காத்தான் பேரூராட்சி கௌன்சிலர் அழகு என்னும் சோ.கிருஷ்ணனைச் சந்தித்தோம். சின்ன வயதிலேயே சென்னைக்கு வந்து, குடும்பம், பிள்ளைகள் என வளர்ந்த பின், மீண்டும் கானாடு காத்தானுக்கே சென்று கடந்த இருபது ஆண்டுகளாக அங்கே வசித்து வருகிறார்.

எல்லோரிடமும் எளிமையாகப் பழகும் பண்பால், தான் போட்டியிட்ட வார்டில் எதிர்த்துப் போட்டியிட யாரும் இல்லாததால் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதனால், இவர் தனிக்காட்டு இராஜா. இவர் நம்மிடம் கூறியதாவது:

“இப்போது மரங்களை வளர்க்கும் வேலையைத் தான் செய்து வருகிறேன். இந்த இடத்தில் மரத்தை வைத்தால் நல்லது என்று நினைத்து விட்டால், அடுத்த நாளே அங்கே ஒரு மரக்கன்றை நட்டு, வேலியமைத்துப் பாதுகாப்பாக வளர்க்கத் தொடங்கி விடுவேன்.

தினமும் காலையில் எனது வண்டியில் இரண்டு குடங்களை எடுத்துக்கொண்டு மரக்கன்றுகளுக்கு நீரையூற்றக் கிளம்பி விடுவேன். இதுதான் என் காலை நேர வேலை. இப்படி நான் நடவு செய்த 150 கன்றுகள், இப்போது இளம் மரங்களாக உள்ளன.

இப்போது இந்த மரங்களை வளர்க்கும் ஆர்வம் நிறையப் பேருக்கு வந்துள்ளது. சமீபத்தில் தம்பி இரவியின் ஏற்பாட்டில் இளைஞர்களும் ஆர்வமுடன் பங்கேற்க, சுமார் எழுபது மரப் போத்துகளை நட்டோம். இது எனக்குச் சந்தோசமாக உள்ளது. நன்றாக மழை பெய்ய வேண்டுமென்றால் நிறையளவில் மரங்களை வளர்க்க வேண்டும். அதை எல்லோரும் சேர்ந்து செய்து வருவது மனதுக்கு நிறைவாக உள்ளது’’ என்றார்.

ஆளுயரத்தில் வெட்டி நடப்படும் ஆல், அரசு, வேம்பு போன்ற போத்துகள், ஒரு மாதத்தில் துளிர்த்து, கிளைத்து விரைவிலேயே மரங்களாக வளர்ந்து நிழலைக் கொடுக்கத் தொடங்கி விடுகின்றன. எனவே, ஏற்கெனவே வளர்ந்து வரும் மரங்களுடன் இந்தப் போத்துகளும் சேர்ந்து வளர, செல்வச் செழிப்புள்ள கானாடு காத்தான், பசுமைச் செழிப்புள்ள கானகமாகவும் மாறும் என்பதில் ஐயமில்லை.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!