கால்நடைகளைத் தாக்கும் தோல் கழலை நோயை, கட்டித்தோல் நோயென்றும், மாட்டில் பெரியம்மை என்றும் கூறுவர். இந்நோய், தோல் கழலை நச்சுயுரியால் ஏற்படுகிறது. இந்நோய், அம்மை வகையைச் சார்ந்தது. இப்பிரிவில், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டில் அம்மையை ஏற்படுத்தும் நச்சுயிரிகளும் அடங்கும்.
தோல் கழலை நோய், குறிப்பிட்ட சில ஊட்டுயிரிகளில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, பசுக்கள் மற்றும் எருமைகளில் நோய்ப் பாதிப்பை உண்டாக்கும். மேலும், நாட்டினப் பசுக்களை விட, வெளிநாட்டுக் கலப்பினப் பசுக்கள் மற்றும் ஹோல்ஸ்டியன், ப்ரீசியன் பசுக்களில் இதன் தாக்கம் அதிகமாகும். இது, விலங்குகளில் இருந்து மக்களுக்குப் பரவுவதில்லை.
இந்நோய் பரவுவதற்கான முக்கியக் காரணிகளாகக் கணுக்காலிப் பூச்சிகள் உள்ளன. அவையாவன: 1. கியூலக்ஸ் மற்றும் ஏடிஸ் வகை கொசுக்கள். 2. ஸ்டோமக்ஸில் மற்றும் பயோமியா ஈக்கள் என்னும் கடிக்கும் ஈக்கள். 3. ரிபிசெபாலஸ் மற்றும் ஆம்பைலோமா என்னும் இரத்தம் உறிஞ்சும் உண்ணிகள். இந்தப் பூச்சிகள், இந்நச்சுயிரிகளைக் கறவை மாடுகளுக்குப் பரப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
நோயுற்ற பசுவின் உமிழ்நீர் வழியே இந்நச்சுயிரி, தீவனத்தொட்டி, நீர்த்தொட்டி, உபகரணங்கள், காளை மாடுகளின் விந்து மூலம் மற்ற கால்நடைகளுக்குப் பரவும். நோயுற்ற கால்நடைகளில் ஏற்படும் தோல் முடிச்சுகள், கட்டிகள் மற்றும் சிரங்குகளில் தோல் கழலை நோய் நச்சுயிரிகள் அதிகளவில் இருக்கும்.
வளரும் கன்றுகள், கறவையில் உள்ள பசுக்கள், நோயெதிர்ப்பு சக்திக் குறைந்த பசுக்கள் மற்றும் சத்துப் பற்றாக்குறை உள்ள மாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்நோயின் இறப்பு 1-5 சதம் எனக் குறைவாக இருந்தாலும், இதனால் உருவாகும் பொருளாதார இழப்புச் சற்று அதிகமாகும்.
பாதிக்கப்பட்ட மாடுகள் மூலமும், தீவனத்தொட்டி, நீர்த்தொட்டி, கால்நடைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், மாடுகளைப் பராமரிக்கும் ஆட்களின் உடைகள் மற்றும் மாடுகளின் சிறுநீர், சாணம், உமிழ்நீர், விந்து போன்றவற்றின் மூலமும் இந்நோய் பரவும். சில நேரங்களில், மாடுகளில் இருந்து மற்ற மாடுகளுக்கு நேரடியாகப் பரவும்.
இந்நோய் முதன் முதலில் 1929 ஆம் ஆண்டில் ஜாம்பியா நாட்டில் கண்டறியப்பட்டது. பிறகு, பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பரவியது. 2019 ஆம் ஆண்டிலிருந்து சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவியுள்ளது. 2021 ஆம் ஆண்டு, வியட்நாம், தாய்லாந்து மற்றும் மலேசியாவில் உறுதி செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டு, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூரில் பரவியது.
இந்நோய்க் கிருமி, கால்நடைகளின் நிணநீர்க் கணுக்களை முதலில் தாக்கும். இதனால், கணுக்கள் பெரிதாகி, தோலில் கட்டிகளைப் போலத் தோன்றி, 0.5-5 செ.மீ. விட்டமுள்ள தோல் முடிச்சுகளாக; தலை, கழுத்து, கால்கள், பால்மடி, பிறப்புறுப்பு, வயிற்றின் அடிப்பகுதி மற்றும் மற்ற தோல் பகுதிகளில் தோன்றும். இந்த முடிச்சுகள், உறுதியான, வட்டமான, உயர்த்தப்பட்ட தோல் திசுக்களை, உப தோலிலும், தசைகளிலும் ஏற்படுத்தும். இதனால், தோலில் சிரங்குகள் உருவாகும். இவை, சில மாதங்களில் வடுக்களாக மாறி விடும்.
இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில், 41 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள கடும் காய்ச்சல் இருக்கும். கண்களிலும் மூக்கிலும் இருந்து நீரும், வாயிலிருந்து உமிழ்நீரும் வெளியேறும். பசியின்மை ஏற்படும். சோர்வு இருக்கும். தோல் சேதமாகி இருக்கும். உடல் மெலிவும் பலவீனமும் ஏற்படும்.
சினை மாடுகளில் கருச்சிதைவும், காளைகளில் மலட்டுத் தன்மையும் ஏற்படும். பால் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்படும். இந்நோய்த் தாக்கி, 4-28 நாட்கள் கழித்தே இதன் அறிகுறிகள் தென்படும்.
ஈக்கள், தோலிலுள்ள புண்களில் முட்டைகளையிட்டு அவற்றை ஈப்புண்களாக மாற்றுவதால், பாதிப்பு அதிகமாக இருக்கும். வாயின் உட்புறமுள்ள மெல்லிய சவ்வுப் படலம், சுவாசப்பாதை, மூச்சுக்குழாய், நுரையீரல் ஆகிய பகுதிகளில் கொப்புளங்கள், அரிப்புகள், புண்கள் ஏற்படும்.
தடுப்பும் கட்டுப்பாடும்
தோல் கழலை பரவியுள்ள பகுதிகளில், கால்நடைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், வெளியேற்ற வேண்டும். நோயுற்ற கால்நடைகளில் தடுப்பூசியைப் போட்டு, மேலும் நோய்ப் பரவாமல் தடுக்க வேண்டும். இறந்த கால்நடைகளை முறையாக அகற்ற வேண்டும்.
கால்நடை வளாகம் மற்றும் கருவிகளைச் சுத்தம் செய்யவும், கிருமி நீக்கம் செய்யவும் வேண்டும். நோய்க் காரணிகளான கொசுக்கள், ஈக்கள் மற்றும் உண்ணிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்நோய்க்கு, வாய்வழி மற்றும் மேற்பூச்சு மூலம் சிகிச்சை செய்யலாம்.
மூலிகை மருத்துவ முதலுதவி
வாய்வழி மருத்துவம்: முதல் மூன்று நாட்களுக்கு, 10 வெற்றிலை, 10 மிளகு, 10 கிராம் கல்லுப்பு, தேவையான அளவு வெல்லம் ஆகியவற்றை அரைத்து, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை என, மூன்று நாட்களுக்கு வாய் வழியாகத் தொடர்ந்து அளிக்க வேண்டும்.
மூன்று முதல் பதினான்கு நாட்களுக்கு, 2 பெருவகை வெள்ளைப்பூண்டு. 15 கிராம் கொத்தமல்லித் தழை, 15 கிராம் சீரகம், கைப்பிடி துளசியிலை, 15 கிராம் கிராம்பு, 15 கிராம் மிளகு, 5 வெற்றிலை, 2 சின்ன வெங்காயம், 10 கிராம் மஞ்சள் தூள், கைப்பிடி வேப்பிலை, தேவையான அளவு வெல்லம் ஆகியவற்றை அரைத்து, ஒரு நாளைக்கு மூன்று முறை வாய் வழியே கொடுக்க வேண்டும்.
புண்களுக்கு: கைப்பிடி குப்பைமேனி இலை, 10 வெள்ளைப் பூண்டுப் பற்கள், கைப்பிடி வேப்பிலை, கைப்பிடி துளசியிலை, 10 கிராம் மஞ்சள் தூள், கைப்பிடி மருதாணி இலை ஆகியவற்றை அரைத்து, 500 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் நன்கு காய்ச்சி ஆற வைத்து, புண்ணைச் சுத்தம் செய்து அதன் மீது தடவி விட வேண்டும்.
ஈப்புழுக்களை அழிக்க, சீத்தாப்பழ இலைகளை அரைத்துப் புண்ணில் தடவலாம். அல்லது கற்பூரம் கலந்து காய்ச்சிய தேங்காய் எண்ணெய்யைத் தடவி விடலாம்.
லம்பி- பரோவாக்கின்ட் என்னும் தடுப்பூசியை, இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையம், குதிரைகள் தேசிய ஆராய்ச்சி மையம் ஆகியன உருவாக்கியுள்ளன. 2022 ஆம் ஆண்டு, இந்தத் தடுப்பூசியைப் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் செலுத்தியதில், ஊக்கமளிக்கும் முடிவுகள் கிடைத்துள்ளன.
இந்தத் தடுப்பூசியைப் போடும் போது, கால்நடைகளுக்கு நோயெதிர்ப்பு சக்திக் கிடைக்கிறது. தற்போது, செம்மறி ஆட்டம்மை, வெள்ளாட்டம்மை நோய்த் தடுப்பூசிகள் மட்டுமே இந்த நோய்க்கான தடுப்பூசியாகப் பயன்பாட்டில் உள்ளன.
மரு.சி.இராமகிருஷ்ணன், மரு.பா.பாலமுருகன், தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், திருவண்ணாமலை.