செய்தி வெளியான இதழ்: 2014 மே.
நாயுருவி எல்லா வகையான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இதன் இலைகள் முட்டை வடிவத்திலும் எதிரடுக்கிலும் அமைந்திருக்கும். தண்டுகள் பட்டையாக இருக்கும். மலர்க் கொத்துகள் நீண்டிருக்கும். நுனியில் அல்லது கிளைகளில் காணப்படும் மலர்கள் சிறிய அளவில் இருக்கும். விதைகள், அவற்றைச் சூழ்ந்துள்ள சிறு முட்களுடன் ஒட்டிக் கொண்டு பரவும் தன்மையைக் கொண்டிருக்கும்.
தமிழ்நாட்டில் இது சாலையோரம், தரிசு நிலம் மற்றும் ஈரப்பாங்கான பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு, அபமார்க்கி, காஞ்சரி, சரமஞ்சரி, சேகரீகம், நாயரஞ்சி, மாமுனி ஆகிய பெயர்களும் உண்டு. நாயுருவியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுகின்றன.
நாயுருவியை எரித்தால் கிடைக்கும் சாம்பலில் பொட்டாஷ் அதிகமாக உள்ளது. மலைப் பகுதிகளில் வளரும் நாயுருவி, சிவந்த தண்டு மற்றும் சிவந்த இலைகளுடன் காணப்படும். இது, செந்நாயுருவி என்றும் படருருக்கி என்றும் அழைக்கப்படுகிறது.
நாயுருவி, கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவையைக் கொண்டிருக்கும். வெப்பத் தன்மை மிகுந்திருக்கும். இது, பிரசவமான தாய்மார்களின் வயிற்று அழுக்கை வெளியேற்றப் பயன்படுகிறது. நாயுருவியின் இலை மற்றும் வேர்களுக்கு என, தனித்த மருத்துவக் குணங்கள் உள்ளன.
இலைகள், நரம்புகளை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கச் செய்யும். நலம் தரும். முறைக் காய்ச்சலைத் தடுக்கும். கழிச்சல், வெள்ளைப்படுதல், அதிக வியர்வை போன்றவற்றைக் குணப்படுத்தும். நாயுருவி வேர், கருப்பையைச் சுருக்கும். கருவைக் கலைக்கும். வாந்தியை உண்டாக்கும். முகப்பொலிவைக் கூட்டும்.
நாயுருவி வேரை நீரில் கழுவிச் சுத்தம் செய்து, வெய்யிலில் காய வைத்துத் தூள் செய்து பல் துலக்கலாம். பச்சை வேரைக் கொண்டும் பல் துலக்கலாம். இப்படிச் செய்வதால் பற்கள் உறுதியடையும்.
நாயுருவி வேரையும் தண்டையும் நிழலில் காய வைத்து இடித்துத் தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை அவ்வப்போது தேவையான அளவு எடுத்து வெந்நீரில் கலக்கிப் பசையாக்கி முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவடையும். பத்து கிராம் நாயுருவி இலைகளை அரைத்துப் பசையாக்கி, அதைப் பத்து மில்லி நல்லெண்ணெய்யில் கலந்து காலை மாலை என இருவேளையும் பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் இரத்த மூலம் குணமாகும்.
நாயுருவி வேர்த் தூளை அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் வலுவாகும். நாயுருவி வேரை அல்லது இலைகளைப் பசையாக்கி உடம்பில் பூசினால் கொப்புளங்களும் சிரங்கும் குணமாகும்.
-இந்திய மருத்துவ முறைகள் என்ற நூலிலிருந்து.