நாவல் பழம் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இது, நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. நாவல், உள்நாட்டில் வர்த்தக மதிப்புமிக்க பழமாகும். இது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கறுப்பு பிளம்ஸ், இந்திய கறுப்புச் செர்ரி, இராம் நாவல் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. நாவல் மரங்கள் சாலையோரங்களில் நிழலுக்காகவும், காற்றுத் தடுப்புக்காகவும், வளர்க்கப் படுகின்றன.
நாவல் மரத்தின் தாயகம் இந்தியா அல்லது கிழக்கிந்திய தீவுகளாகும். இது, கங்கைச் சமவெளியிலிருந்து தென் தமிழ்நாடு வரை பரவலாக வளர்க்கப்படுகிறது. நாவல் மரத்தின் தாவரவியல் பெயர், சைஜிஜியம் கியும்நி ஆகும். இது, மிர்டேசியே குடும்பத்தைச் சார்ந்த பழ மரமாகும்.
மண் மற்றும் காலநிலை
நாவல் மரம் அனைத்து மண்ணிலும் வளரும். எனினும், அதிக உற்பத்தித் திறன் மற்றும் தரமான வளர்ச்சிக்கு, களிமண் அல்லது நன்கு வடிகால் வசதியுள்ள மண் தேவை. ஆயினும், அடர்ந்த அல்லது இலகுவான மணற்பரப்பில் நாவல் மர வளர்ப்பு இலாபமாக இருக்காது. வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலக் கால நிலையில் நன்கு வளரும். பூக்களும் காய்களும் உருவாகும் பருவத்தில், நாவலுக்கு வறண்ட வானிலை தேவை.
வகைகள்
பொதுவாக, வட இந்தியாவில் இராம் நாவல் வகை வளர்க்கப்படுகிறது. இதன் பழங்கள் பெரியதாக, நீள்சதுர வடிவிலும், முற்றிலும் பழுத்த நிலையில் அடர் ஊதா அல்லது நீலக்கறுப்பு நிறத்திலும் இருக்கும். பழக்கூழ் ஊதா நிறத்தில் இருக்கும். பழம், அதிகச் சாறுடன் இனிப்பாக இருக்கும். பழக்கொட்டை சிறியதாக இருக்கும். இந்த வகை, ஜூன்-ஜூலை மாதங்களில் பழுக்கும்.
மற்றொரு வகையின் பழம், சிறியதாகவும், சற்று உருண்டை வடிவிலும் இருக்கும். பழுத்த பழங்கள் அடர் ஊதா நிறத்தில் அல்லது கறுப்பு நிறத்தில் இருக்கும். சதை, ஊதா நிறத்தில் இருக்கும். இப்பழத்தில் சாறு குறைவாகக் கிடைக்கும். மேலும், எடையும் சதையின் இனிப்புத் தன்மையும் இராம் நாவலை விடக் குறைவாகவே இருக்கும். பழக்கொட்டை பெரியதாக இருக்கும். இவ்வகைப் பழங்கள் ஆகஸ்ட் மாதத்தில் பழுக்கும்.
இனப்பெருக்கம்
விதை மற்றும் நாற்று முறையில் நாவல் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பல கருவாக்கம் இருப்பதால், இது, மூல விதை மூலம் உருவாகிறது. புதிய விதைகளை விதைக்க வேண்டும். விதைத்து 10-15 நாட்களில் விதைகள் முளைக்கும். வசந்த காலமான பிப்ரவரி, மார்ச் அல்லது மழைக்காலமான ஆகஸ்ட், செப்டம்பரில் நாற்றுகளை நடலாம்.
ஒட்டுக் கட்டுதல்: நாவலை எளிதாக இனப்பெருக்கம் செய்யலாம். அதாவது, 10-14 மி.மீ. தடிமனுள்ள வயதான நாற்றுகளில் ஒட்டுக்கட்ட வேண்டும்.
நடவு மற்றும் இடைவெளி
நாவல் இலை உதிரா மரமாகும். பிப்ரவரி, மார்ச் மற்றும் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரண்டு பருவங்களில் நடவு செய்யலாம். பிந்தைய பருவத்தில் நடவு செய்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது. நாற்றுகளை நடுவதற்குப் பத்து மீட்டர் இடைவெளியில், ஒரு மீட்டர் நீள, அகல, ஆழமுள்ள குழிகளை எடுக்க வேண்டும். இந்தக் குழிகளில் 75 சதம் மணல், 25 சதம் தொழுவுரம் அல்லது மட்கிய உரத்தைக் கலந்து நிரப்பி, குழியின் நடுவில் கன்றுகளை நட வேண்டும்.
உரமிடுதல் மற்றும் பாசனம்
பொதுவாக, நாவலுக்கு உரமிடுவதில்லை. ஆண்டுக்கு 19 கிலோ தொழுவுரத்தை இட வேண்டும். மரம் நன்கு வளரும் நிலையில், இந்த உரத்தை 75 கிலோவாக உயர்த்த வேண்டும். ஆரம்பக் காலத்தில் தொடர்ச்சியாக நீர்ப் பாய்ச்ச வேண்டும். மரமாக வளர்ந்த பிறகு, பாசன இடைவெளியை குறைக்க வேண்டும். இளம் மரங்களுக்கு ஓராண்டில் 8 முதல் 10 முறை பாசனம் தேவைப்படும்.
ஊடுபயிர் மற்றும் கவாத்து
நடவு செய்த தொடக்க ஆண்டுகளில், தோட்டத்தில் அதிக இடைவெளி இருக்கும் போது, மழைக்காலத்தில், பயறு வகைகள் மற்றும் காய்கறிப் பயிர்களை ஊடுபயிராக இடலாம். பொதுவாக, நாவலுக்குக் கவாத்து செய்யத் தேவையில்லை. உலர்ந்த மற்றும் குறுக்குக் கிளைகளை நீக்கினால் போதும். தரை மட்டத்திலிருந்து 60-100 செ.மீ. உயரத்துக்கு மேல், மரக்கிளைகளை வளர விட வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு
பூச்சிகள்: வெள்ளை ஈ (டையலியுரொடெஸ் யுஜினியே): இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நாவல் மரங்களில் வெள்ளை ஈக்களின் தாக்கம் இருக்கிறது. இந்த ஈக்களால் பாதிக்கப்பட்ட பழங்களின் மேற்பரப்பு வெம்பிக் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த, நிலத்தில் மரத்தைச் சுற்றிக் குழியைத் தோண்ட வேண்டும். இப்படிச் செய்தால், பாதிக்கப்பட்ட பழங்களில் உள்ள புழுக்களின் முட்டைகள் மற்றும் பூச்சிக் கூடுகள் மண்ணில் விழுந்து அழிந்து விடும்.
இலைகளைத் தின்னும் புழு (கேரிய சப்டில்லிஸ்): இது, கோவைப் பகுதியில் மட்டும் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தப் புழுக்களால் தாக்கப்படும் இலைகள் உதிர்ந்து விடும். இவற்றைக் கட்டுப்படுத்த, ரோகர் 30 இ.சி. அல்லது ஒரு சத மாலத்தியானைத் தெளிக்கலாம்.
நோய்கள்: பழ அழுகல் நோய்: பூஞ்சையால், இலைப்புள்ளி நோய் ஏற்படும் போது, அதனுடன் சேர்ந்து பழமும் அழுகும். பாதிக்கப்பட்ட இலைகளில் சிறிய சிதறிய புள்ளிகள், பழுப்பு மற்றும் செம்பழுப்பு நிறத்தில் காணப்படும். இறுதியில் பழங்கள் அழுகிச் சுருங்கி விடும். இதைக் கட்டுப்படுத்த, டைத்தேன் Z-78 @ 0.2% அல்லது 4:4:50 போர்டாக் கலவையைத் தெளிக்கலாம்.
பூத்தல் மற்றும் காய்த்தல்
சிறு கிளைகளின் கணு இடுக்குகளில் பூக்கள் தோன்றும். வட இந்திய சூழலில், மார்ச் மாதம் முதல் ஏப்ரல் இறுதி வரையில் பூக்கும் பருவம் தொடரும். நாவல், அயல் மகரந்தச் சேர்க்கைப் பயிராகும். இந்த மகரந்தச் சேர்க்கை, தேனீக்கள், ஈக்கள் மற்றும் காற்று மூலம் நடைபெறும். பூக்கள் மலர்ந்த பிறகு, ஜிஏ3 @ 60 பி.பி.எம். (GA3 60 p.p.m.) ஒரு முறையும், அடுத்து, 15 நாட்கள் கழித்து, காய்கள் பிடித்த பிறகு ஒரு முறையும் தெளித்து, காய்கள் உதிர்வதைக் குறைக்கலாம்.
அறுவடை மற்றும் மகசூல்
சாதாரண நாவல் கன்று மரமாகிப் பலன் கொடுக்க 8-10 ஆண்டுகள் ஆகும். ஆனால், ஒட்டுச்செடி 6-7 ஆண்டுகளிலேயே பலன் கொடுக்கும். எனினும், முழு மகசூல் 8-10 ஆண்டுகளில் தான் கிடைக்கும். இதைத் தொடர்ந்து, 50-60 வயது வரை பலன் கிடைக்கும். ஜூன், ஜூலை மாதங்களில் பழங்கள் கிடைக்கும். முற்றிலும் பழுத்த பழங்கள், அடர் பழுப்பு மற்றும் கறுப்பு நிறத்தில் காணப்படும்.
இந்தப் பழங்களை, தோளில் பைகளைத் தொங்கவிட்டபடி மரத்தில் ஏறி ஒவ்வொன்றாகப் பறிக்க வேண்டும். சாதாரண நாற்று நடவில் வளர்ந்த மரத்திலிருந்து, ஆண்டுக்கு 80-100 கிலோ பழங்கள் கிடைக்கும். ஒட்டுச்செடி மரத்திலிருந்து ஆண்டுக்கு 60-70 கிலோ பழங்கள் கிடைக்கும்.
சேமிப்பு மற்றும் விற்பனை
சாதாரண வெப்ப நிலையில் 3-4 நாட்களுக்கு மேல் பழங்களைச் சேமிக்க முடியாது. எனினும், நெகிழிப் பைகளில் பழங்களை வைத்து, 8-10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 85-90 சத ஈரப்பதத்தில், மூன்று வாரங்கள் வரை சேமிக்கலாம்.
நன்கு பழுத்த, தரமான பழங்களை மட்டும் விற்பனைக்கு அனுப்ப வேண்டும். சேதமடைந்த, நோயுற்ற மற்றும் சரியாகப் பழுக்காத பழங்களை நீக்கிவிட வேண்டும். நாவல் பழங்களை மரக் கூடைகளில் கவனமாக அடுக்கி, சந்தைக்கு அனுப்புகின்றனர்.
பயன்கள்
நாவல் பழம் கணிசமான சத்துகளைக் கொண்டுள்ளது. கனிமங்கள், சர்க்கரை மற்றும் புரதங்களைத் தவிர, இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளது. பழமாகச் சாப்பிடுவது மட்டுமின்றி, சுவையான பானங்கள், ஜெல்லி, ஜாம், பழக்கூழ், வினிகர் மற்றும் ஊறுகாயாகத் தயாரித்தும் உண்ணலாம். சிறியளவு பழச்சாறு, வயிற்றுப் போக்கைக் குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுகிறது. நாவல் விதைகள், விரைவாக, நிரந்தரமாக, சிறுநீரிலுள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. படர்தாமரை நோயைக் குணப்படுத்தும் மருந்தைத் தயாரிக்கவும் பயன்படுகிறது.
முனைவர் ம.தமிழ்ச்செல்வன், ச.சித்ரா, இரா.ஆனந்தன், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் – 614 602.