தொழில் வாய்ப்பைத் தரும் அசில் கோழி!

அசில் கோழி சேவல்

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன்.

ம் நாட்டுக் கோழிகளில் பெரும்பாலானவை கிராமங்களில் வளர்க்கப்படுகின்றன. இவை நல்ல உற்பத்தித் திறன் பெற்றவை. மேலும், நாட்டுக்கோழி வளர்ப்புக்குத் தேவையான முதலீடு மிகவும் குறைவு. பொதுவாக நம் நாட்டில் லெகார்ன் மற்றும் பிளேமாத்ராக் போன்ற இனங்கள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.

இந்தியாவில் பல கோழி இனங்கள் உள்ளன. அவற்றில் அசில் முக்கியமான நம் நாட்டுக் கோழி இனமாகும். இந்திய வரலாற்றில் சிறப்பு இடம் பெற்ற அசில் அமெரிக்கன் பவுல்ட்ரி அசோசியேசனால் 1981 இல் அங்கிகரிக்கப்பட்ட கோழியினம் என்னும் பெருமைக்கு உரியது.

அசிலின் பூர்விகம் பஞ்சாப் மற்றும் சிந்து மாநிலமாகும். இந்தக் கோழி இந்தியா முழுவதும் பரவலாக வளர்க்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இது, சண்டைக்கோழி, கட்டுச்சேவல், வால்சேவல் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டுச் சேவலை வளர்ப்பதில் மக்களிடம் பெருத்த ஆர்வமும் வரவேற்பும் உள்ளன. மேலும், இக்கோழியைப் பலர் செல்லப் பிராணியாகவும் வளர்க்கின்றனர்.

முதலில் கட்டுச்சேவல் சண்டைக் கோழியாக மட்டுமே வளர்க்கப்பட்டது. இது, மெதுவாக வளரக் கூடியதாக இருந்தாலும், அதிகச் சதைப்பற்றுடன் கூடிய மார்பையும் அதிக எடையையும் தரக்கூடியதாகும்.

மனிதர்களிடம் நட்புடன் இருக்கக்கூடிய இந்த அசில் இனத்தில் உள்ள பெட்டைக் கோழிகள் அதிகத் தாய்மைக் குணமுடையவை, இயற்கையாக அடை காப்பதில் வல்லமை மிக்கவை. அதாவது, சிறப்பாகக் குஞ்சுகளைப் பொரிக்கும் திறன் மிக்கவை.

எனவே, அடை காக்கும் பழக்கம் இல்லாத மற்ற கோழிகளின் முட்டைகளை கூட, இக்கோழிகளைக் கொண்டு அடை காத்து குஞ்சு பொரிக்கலாம்.

கம்பீரமான தோற்றம் கொண்ட அசில், இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது. இரண்டு ஆண்டு வளர்ந்த ஒரு அசில் சேவலின் உடல் எடை 5-8 கிலோவும், பெட்டைக் கோழியின் எடை 3-5 கிலோவும் இருக்கும். பெட்டைக்கோழி ஆண்டுக்கு 30-35 முட்டைகளை இடும்.

அசில், அதிகளவில் முட்டைகளை இடாது. பெட்டைக் கோழிகள் பருவமடைந்து முட்டையிட 5-6 மாதங்களாகும். ஓராண்டில் 12-15 முட்டைகள் வீதம் 2-3 தவணைகளில் முட்டைகளை இடும்.

புறக்கடையில் வளர்க்கப்படும் இக்கோழியினம் பெரும்பாலும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குஞ்சு பொரிக்கும். பொரிக்கப்பட்ட குஞ்சுகளில் இருந்து வளரும் கோழிகளில் 60 முதல் 70 சதம் விற்கப்படும். 10 முதல் 15 சதம் எதிர்கால இனப் பெருக்கத்திற்கும் 15 முதல் 20 சதம் உணவாகவும் பயன்படும்.

அசில், நன்கறிந்த இறைச்சிக்கோழி என்பதால், இன்றைய பண்ணைகளில் உள்ள இறைச்சிக்கோழி இனமான வெள்ளை கார்நீஸ்க்கும், பீலேமாத்ராக்குக்கும் அசில் மூலமாக விளங்குகிறது. அசிலைக் கொண்டே இந்தக் கறிக்கோழி இனங்கள் உருவாக்கப்பட்டன என்பது பெருமைக்கு உரியது.

அசில் கோழிகளுக்குக் கொண்டை சிறியதாகத் தலையுடன் நன்கு அமைந்திருக்கும். கோழித்தாடி, காதுகள், நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். பொலிவான கண், நீண்ட சதையற்ற கழுத்து, உருண்டை உடல், அகன்ற மார்பு மற்றும் வலுவான இறக்கைகளைக் கொண்டிருக்கும். நீண்ட வாலும், நேரான காலும் அமைந்திருக்கும்.

இந்தியாவில் இசட்நாகலில் உள்ள மத்திய கோழியின ஆராய்ச்சி நிலையம், அசிலை, மரபியல் ரீதியில் தரம் உயர்த்தி, கேரி-நீர்பிக்கி மற்றும் கேரி-சயாமா என்னும் பெயரில் உயர்ந்த அசிலினங்களாக உருவாக்கியுள்ளது.

இந்த வகைகளைச் சேர்ந்த அசில்கள், ஆண்டுக்கு 92 முட்டைகளை இடும். ஒரு முட்டையின் எடை 52 கிராம் இருக்கும். அசில் கோழி வளர்ப்புக்கான முதலீடு மிகவும் குறைவு. எனவே, குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் பெற அசில் கோழிகளைப் புறக்கடையில் வளர்ப்பதில் கிராமப் பெண்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.

புறக்கடைக் கோழி வளர்ப்பு இந்தியாவில் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிலும், இந்திய முட்டை உற்பத்தியில் 40 சத முட்டைகள் புறக்கடைக் கோழிகளில் இருந்து கிடைக்கின்றன.

புறக்கடையில் வளர்க்கப்படும் அசில் கோழிக்கு, உலர்கோழித் தீவனம் அல்லது சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, தானியங்கள், அரிசிக் குருணை, தவிடு, அசோலா போன்றவற்றை இரையாகத் தரலாம்.

அசில் கோழிகள் நோயெதிர்ப்பு சக்தி மிக்கவை. மேலும், நம் நாட்டின் தட்பவெப்ப நிலையைத் தாங்கக் கூடியவை. இருந்தாலும் இந்தக் கோழிகளை நோயிலிருந்து காக்க, தடுப்பூசிகளைப் பயன்படுத்தலாம்.

முதல் நாள் குஞ்சுக்குத் தோலின் கீழே மேரக்ஸ் நோய்த் தடுப்பூசியைப் போட வேண்டும். ஐந்தாம் நாள் ராணிக்கெட் நோயைத் தடுக்க, கண்ணில் சொட்டு மருந்தாக இட வேண்டும்.

14 ஆம் நாள் ஐ.பி.டி. நோய்த் தடுக்க, வாயில் சொட்டு மருந்தாக இட வேண்டும். 21 ஆம் நாள் அம்மை நோயைத் தடுக்க, தசை அல்லது தோலின் கீழ் தடுப்பூசியைப் போட வேண்டும்.

அடுத்து, 28 ஆம் நாள் ராணிக்கெட் நோயைத் தடுக்க, கண்ணில் சொட்டு மருந்தாக இட வேண்டும். 9 ஆம் வாரம், ராணிக்கெட் நோயைத் தடுக்க, தோலுக்குக் கீழ் தடுப்பூசியைப் போட வேண்டும். 12 ஆம் வாரம் அம்மை நோயைத் தடுக்க, தோலின் கீழ் தடுப்பூசியைப் போட வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை தொடர்ந்து போட வேண்டும்.

புறக்கடைக் கோழிகளுக்கு ராணிக்கெட் மற்றும் அம்மைத் தடுப்பூசி மிகவும் அவசியம். குடற்புழு நீக்கம் செய்தல் முக்கியமாகும், குடற் புழுக்கள் இருந்தால் கோழிகள் மெலிந்தும் பொலிவிழந்தும் எடை குறைந்தும் காணப்படும்.

எனவே, 18 வாரத்திலிருந்து ஒவ்வொரு இரண்டு மாதத்துக்கு ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்வது அவசியமாகும். மேலும், அதிகக் குஞ்சுகளைப் பெற, நன்கு கருவுற்ற முட்டைகள் தேவை. அதற்கு 5-10 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் வீதம் வளர்க்க வேண்டும்.


அசில் கோழி Malarmathy

மு.மலர்மதி, வ.செ.வடிவு, அ.யசோதா, சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading