கரும்பை வறட்சியில் இருந்து காப்பது எப்படி?

ரும்பு வறட்சியைத் தாங்கி வளரும் பயிராகும். எனினும், இது நீண்டகாலப் பயிர் என்பதால், வெய்யில் காலத்தில், நீர்ப் பற்றாக்குறை இருந்தால், கரும்பின் வளர்ச்சித் தடைபடும்.

இதனால், மகசூலும் சர்க்கரைக் கட்டுமானமும் பாதிக்கப்படும். ஏறத்தாழ 60 சதவீதக் கரும்பு விவசாயம், வறட்சியால் பாதிப்புக்கு உள்ளாவதாக, ஆய்வுகள் கூறுகின்றன.

கரும்பில் ஏற்படும் வறட்சியால், கரும்பு மகசூலில் 20-40 சதவீதம் வரை, இழப்பு ஏற்படும். வறட்சியின் பாதிப்பு என்பது, அதன் வீரியம் மற்றும் நீடிக்கும் கால அளவைப் பொறுத்தது.

இளம் கரும்பு வளர்ச்சிக் குன்றியும், இலைகள் காய்ந்தும் போவதால், கரும்பின் எண்ணிக்கை குறைந்து விடும். மேலும், சுக்ரோசின் அளவு 5 சதம் வரை குறையக் கூடும்.

கடும் வறட்சி ஏற்பட்டால், பயிர் இழப்பு மற்றும் சுக்ரோசின் அளவு முற்றிலும் பாதிக்கப்படும். மேலும், வறட்சி சூழ்நிலை, பஞ்சு அசுவினிகள் கரும்பைத் தாக்க வழி வகுக்கும்.

தீர்வு

வறட்சியைத் தாங்கி வளரும் கரும்பு இரகங்களைப் பயிரிட வேண்டும். குறிப்பாக, கோ.85019, கோ.05009, கோ.05011, கோ.06022, கோ.09004, கோ.10024, கோ.10026, கோ.10033 ஆகிய இரகங்களைப் பயிரிடலாம்.

கோடையில் மழை பெய்யா விட்டாலும், கிணற்றில் உள்ள நீரை வைத்து, எவ்வளவு பரப்பில் பாசனம் செய்ய முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்ப, சாகுபடி செய்ய வேண்டும்.

விதைக் கரணைகளைத் தெளிந்த சுண்ணாம்பு நீரில் நனைத்து நடவு செய்தால், நல்ல பயன் கிடைக்கும். இதற்கு, 20 கிலோ சுட்ட சுண்ணாம்பை, 100 லிட்டர் நீரில் கரைத்துத் தெளிய வைக்க வேண்டும். அடுத்து, அந்த நீரில் ஒரு மணி நேரம் வரை, கரணைகளை ஊற வைத்து நட வேண்டும். இதனால், ஓரளவு வறட்சியைத் தாங்கும் திறன் கரும்புக்குக் கிடைக்கும். கரணைகளின் முளைப்புத் திறனும் அதிகமாகும்.

வறட்சிப் பகுதிகளில், கிடங்குப் பார்களை அமைத்து நட்டால், இளம் பயிர்கள் அடிமண் ஈரத்தின் மூலம் வளரும். கிடங்குப் பார்களை, 30 செ.மீ. ஆழம், 60 செ.மீ. அகலம், 175 செ.மீ. இடைவெளியில் அமைக்க வேண்டும்.

நடவுக்குப் பிறகு, பார்களில் தோகையைப் பரப்புவது சிறந்த செயல்முறை ஆகும். அதாவது, கரும்புத் தோகைகளைப் பார்களில், 10 செ.மீ. உயரம் பரப்பி விட வேண்டும். இதனால், 5 பாசனம் வரை குறையும். களைகள் கட்டுப்படும். நிலத்தின் ஈரம் காயாமல் இருக்கும்.

வறட்சியில் பாதிக்கப்படும் இளம் பயிரில், 100 லிட்டர் நீரில் 2.5 கிலோ யூரியா, 2.5 கிலோ பொட்டாசைக் கலந்து, 15 நாள் இடைவெளியில், 3-4 முறை தெளிக்கலாம். இதனால், கரும்பில் வறட்சியைத் தாங்கும் திறன் கூடி, வளர்ச்சியும், மகசூலும் அதிகமாகும்.

வறட்சியில் பாதிக்கப்படும் கரும்புக்கு, ஏக்கருக்கு 20 கிலோ பொட்டாஷ் வீதம் கூடுதலாக இட வேண்டும். இதனால், கரும்புக்கு வறட்சியைத் தாங்கும் திறன் கிடைக்கும். மேலும், சர்க்கரைச் சத்தும் குறையாமல் இருக்கும்.

சொட்டுநீர்ப் பாசன அமைப்பின் மூலம் பாசனம் செய்தால், வறட்சியைச் சமாளிக்க முடியும்.


செய்தி: இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!