கால்நடைத் தீவனப் பயிர்களில் சோளம் மிக முக்கியப் பயிராக உள்ளது. இவ்வகையில், தமிழ்நாட்டில் கோ.எஃப்.எஸ்.29 என்னும் தீவனச்சோளம் தனிச்சிறப்பு மிக்கது. ஏனெனில், இதை இறவை மற்றும் மானாவாரியில் பயிர் செய்யலாம். இறவையில் 8-10 முறை அறுவடை செய்யும் வகையில் இப்பயிர் தழைத்து வரும். இதன் மூலம் ஏக்கருக்கு 50-60 டன் பசுந்தீவனம் கிடைக்கும். மானாவாரியில், குறைவான மழையில், அதிகச் சத்தும், சுவையும் மிக்க தீவனத்தைத் தரும்.
சாகுபடி
தானியத் தீவனப் பயிரான இது, அனைத்து மண் வகைகளிலும் நன்கு வளரும். இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். மானாவாரியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையின் போது பயிர் செய்யலாம். நிலத்தை, 2-3 முறை உழுது, ஏக்கருக்கு 10 டன் தொழுவுரத்தை அடியுரமாக இட்டு, நன்கு பண்படுத்த வேண்டும்.
பிறகு, 40-50 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைத்து, அவற்றின் இருபுறமும் விதைக்க வேண்டும். அல்லது பாத்திகளை அமைத்து அவற்றில் கோடுகளைக் கிழித்தும் விதைக்கலாம். மானாவாரியில் பரவலாகக் கை விதைப்பாக விதைக்கலாம். ஏக்கருக்கு ஐந்து கிலோ விதைகள் தேவைப்படும்.
விதைத்து 25 நாட்கள் கழித்து, ஏக்கருக்கு 25 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும். அடுத்து, ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் 30 கிலோ வீதம் யூரியாவை இட்டுப் பாசனம் செய்ய வேண்டும். மண்ணின் தன்மையைப் பொறுத்து 8-10 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். மானாவாரியில் 8-10 நாட்கள் இடைவெளியில் 5-6 முறை மழை பெய்தால் போதும்.
அறுவடை
விதைத்து 60-65 நாட்களில் முதல் அறுவடையைச் செய்யலாம். அடுத்தடுத்த அறுவடையை 55-60 நாட்களில் மேற்கொள்ளலாம். முதல் அறுவடையில் 8 டன் பசுந்தீவனம் கிடைக்கும். அடுத்து, 7 டன் வீதம் தீவனம் கிடைக்கும்.
கால்நடைகளுக்குக் கொடுக்கும் முறை
கறவை மாடுகளுக்குத் தினமும் 20 கிலோ வீதம் கொடுக்கலாம். இதன் தண்டு சிறியதாக இருப்பதால் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கும் தினமும் 3-5 கிலோ வீதம் கொடுக்கலாம். இது, இளம் பயிராக இருக்கும் போது, இதில் ஹைட்ரோ சயனிக் ஆசிட் என்னும் நச்சுப்பொருள் இருப்பதால், அப்போது கால்நடைகளுக்குக் கொடுக்கக் கூடாது.
இந்தச் சோளம் பூத்த பிறகு தான் அறுவடை செய்து கால்நடைகளுக்கு வழங்க வேண்டும். இதில் அதிக மகசூலைப் பெற, இறவையில் சாகுபடி செய்வதே நல்லது. இந்தச் சோளப்பயிரைப் பசுந்தீவனமாக மட்டுமின்றி, சைலேஜ் முறையில் பதப்படுத்தி வைத்திருந்தும் தரலாம். கோ.எஃப்.எஸ்.29 சோள விதைகளுக்கு நல்ல விற்பனை வாய்ப்பு இருப்பதால், விதை உற்பத்தி செய்தும் நல்ல வருவாய் ஈட்டலாம்.
மேலும் விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், 16, அன்னமராஜா நகர், இராஜபாளையம் 626 117 என்னும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 04563 220244.
முனைவர் மு.ச.முருகன், முனைவர் வெ.பழனிச்சாமி, கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இராஜபாளையம் – 626 117.