தென்னை ஒரு பல்லாண்டுப் பயிராகும். இது, ஒருமுறை பூத்துக் காய்க்கத் தொடங்கி விட்டால், அதன் வாழ்நாள் முழுவதும் மகசூலைத் தந்து கொண்டே இருக்கும். மரத்தின் ஒவ்வொரு ஓலைக்கும் ஒரு தேங்காய்க் குலை வீதம் இருக்கும்.
ஒரே சமயத்தில் மரத்தில் எல்லா வளர் நிலையிலும் காய்கள் இருக்கும். எனவே, மரம் மண்ணில் உள்ள சத்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருக்கும். ஆகவே, தென்னையில் உர நிர்வாகம் மிக முக்கியம்.
உரமிடல்
ஐந்தாம் ஆண்டு முதல் மரத்துக்கு 50 கிலோ வீதம் தொழுவுரம் இட வேண்டும். மேலும், தென்னை மரத்தைச் சுற்றி, 1.8 மீட்டர் ஆரத்தில் வட்டப் பாத்தியை அமைக்க வேண்டும்.
அதில், 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், 2 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை இட்டு, உடனே பாசனம் செய்ய வேண்டும். இந்த உரங்களை இரண்டாகப் பிரித்து, ஆறு மாதத்துக்கு ஒருமுறை, அதாவது, ஆடி மற்றும் மார்கழியில் இட வேண்டும்.
நுண்ணுயிர் உரங்கள்
அசோஸ் பைரில்லம் 50 கிராம், பாஸ்போ பாக்டீரியா 50 கிராம் அல்லது 100 கிராம் அசோபாஸ், 50 கிராம் வேர் உட்பூசணம் ஆகியவற்றை, தொழுவுரத்தில் கலந்து, இளம் வேரில் படும்படி ஆறு மாதத்துக்கு ஒருமுறை இட வேண்டும். இந்த உயிர் உரங்களுடன், இரசாயன உரத்தையோ பூச்சிக்கொல்லி மருந்தையோ கலக்கக் கூடாது.
அங்ககக் கழிவுச் சுழற்சி
பசுந்தாள் உரப் பயிர்களான, சணப்பை, அவுரி, கலப்ப கோனியம், தக்கைப் பூண்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயிரிட்டு, பூக்கும் போது அதை மடக்கி உழ வேண்டும்.
சணப்பையை ஒரு வட்டப் பாத்திக்கு 50 கிராம் வீதம் விதைத்து பூக்கும் சமயத்தில் அதைப் பாத்திக்கு உள்ளேயே கொத்தி மண்ணோடு கலந்துவிட வேண்டும். மேலும், தென்னைநார்க் கழிவு அல்லது தென்னை மட்டையில் தயாரித்த மண்புழுவுரம் மற்றும் மட்கிய கழிவை இட்டுச் சுழற்சி செய்யலாம்.
நீர்ச்சத்துப் பற்றாக்குறை
அறிகுறிகள்: முதிர்ந்த ஓலைகள் முற்றிலுமாக மஞ்சள் நிறமாக மாறி விடும். பச்சையம் முழுவதும் குறைந்து விடும். வளர்ச்சிக் குன்றி விடும்.
தீர்வு: ஆண்டுதோறும் ஒரு மரத்துக்கு 1.3 கிலோ யூரியா வீதம் இட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்குப் பத்து கிராம் யூரியா வீதம் கலந்து வைத்துக் கொண்டு, மரத்துக்கு 200 மில்லி வீதம் எடுத்து வேர் மூலம் செலுத்த வேண்டும். இப்படி, ஆறு மாதத்துக்கு ஒருமுறை செலுத்தி வர வேண்டும்.
மணிச்சத்துப் பற்றாக்குறை
அறிகுறிகள்: பல ஆண்டுகளாக மணிச்சத்தை இடாத தென்னை மரங்களில் கூட மகசூல் பாதிப்பது இல்லை. ஏனெனில், ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு 69 கிராம் மணிச்சத்து தான் தேவை. எனவே, தென்னையில் மணிச்சத்துப் பற்றாக்குறை ஏற்படுவது இல்லை,
பற்றாக்குறை இருந்தால், முதிர்ந்த ஓலைகளில் தெரியும். அதாவது, ஓலைகள் சிறியதாக, ஊதா அல்லது வெண்கல நிறத்தில் இருக்கும். ஓலைகள் காய்ந்தும், காய்ந்த பகுதிகள் உதிர்ந்தும் விடும்.
தீர்வு: ஆண்டுதோறும் ஒரு தென்னை மரத்துக்கு 1.5-2.0 கிலோ சூப்பர் பாஸ்பேட் வீதம் எடுத்து நிலத்தில் இட வேண்டும்.
சாம்பல் சத்துப் பற்றாக்குறை
அறிகுறிகள்: ஓலைகளின் ஓரம் மஞ்சள் நிறமாக மாறும் மற்றும் கருகி இருக்கும். ஓலைகளின் அடிப்பாகம் பச்சை நிறத்தில் இருக்கும். வளர்ச்சிக் குறைவாக இருக்கும், பூக்கும் பருவத்தில் ஓலைகள் உதிர்ந்து விடும். சிறிய ஓலைகள் பின்னோக்கிக் காய்ந்து விடும்.
இலை முனை கருகி இருக்கும். ஓலைகளின் மேல் சிறிய பழுப்பு நிறப் பிசின் போன்ற புள்ளிகள் மற்றும் சிறிய சுருக்கக் கோடுள்ள புள்ளிகள் தோன்றும். ஓலைகள் மஞ்சள் மற்றும் வெண்கல நிறத்தில் திருகியும் கருகியும் இருக்கும்.
தீர்வு: ஆண்டுக்கு இருமுறை, மரத்துக்கு இரண்டு கிலோ பொட்டாஷ் வீதம் எடுத்து நிலத்தில் இட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்குப் பத்து கிராம் பொட்டாஷ் வீதம் கலந்து வைத்துக் கொண்டு, மரத்துக்கு 200 மில்லி வீதம் வேர் மூலம் செலுத்த வேண்டும். இப்படி ஆறு மாதத்துக்கு ஒருமுறை செலுத்தி வர வேண்டும்.
மெக்னீசியப் பற்றாக்குறை
அறிகுறிகள்: ஓலைகளின் நடுநரம்பின் இரு பக்கமும் மஞ்சள் நிறமாக மாறி விடும். ஓலை நுனியில் இருந்து மஞ்சள் நிறம் தோன்றும். அடிப்பகுதி ஓலைகள் பச்சையாக இருக்கும்.
தீர்வு: ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் மெக்னீசிய சல்பேட் வீதம் கலந்து வைத்துக் கொண்டு, மரத்துக்கு 200 மில்லி வீதம் எடுத்து வேர் மூலம் செலுத்த வேண்டும். இப்படி, ஆறு மாதத்துக்கு ஒருமுறை செலுத்தி வர வேண்டும்.
போரான் பற்றாக்குறை
அறிகுறிகள்: இளம் ஓலைகள் மற்றும் புதிதாக வளரும் ஓலைகளில் உருச்சிதைவு ஏற்படும். இதுவே சிறிய நிலை எனப்படும். ஓலைகள் தனித் தனியாகப் பிரியாமல் இயல்பு நிலை மாறியிருக்கும்.
நுனித் தண்டுகள் கறுப்பாகி இறக்க நேரிடும். இனப்பெருக்கப் பருவத்தில் உருவ மாற்றம் மற்றும் காய்ப்புத் தன்மை குறைந்து விடும். காய்கள் சிறுத்தும், இயல்பு நிலையில் மாறியும் காணப்படும்.
தீர்வு: ஆண்டுதோறும் மரத்துக்கு 200-500 கிராம் போராக்ஸ் வீதம் எடுத்து நிலத்தில் இட வேண்டும். 0.2 சத போராக்ஸ் கரைசலை ஓலைகளில் தெளிக்கலாம்.
தென்னை டானிக்
சத்துகள் பற்றாக் குறையைத் தீர்ப்பதற்கு, தனித்தனியாக உரமிட வேண்டும். இதற்கு மாற்றாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் தயாரிக்கும், தென்னை டானிக்கை, காய்க்கும் மரங்களுக்கு வேர் மூலம் செலுத்தலாம். அதாவது, மரத்துக்கு 200 மில்லி வீதம் செலுத்த வேண்டும். இப்படி ஆறு மாதத்துக்கு ஒருமுறை செலுத்தி வர வேண்டும்.
முனைவர் அனுராதா, முனைவர் மு.இராமசுப்ரமணியன், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர் – 614 404.