உயிரினங்களைக் காக்கும் கடவுள்கள் மரங்கள் தான்!

செய்தி வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014

ன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்னும் வள்ளுவப் பொதுமறைக்கு ஏற்ப, பெற்ற தாய் மட்டுமல்ல, உயிர்களுக்கெல்லாம் அன்னையாம் பூமித்தாயும் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கும் அளவுக்குச் சுற்றுச்சூழல் மேலாண்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார், காஞ்சிபுர மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கத்துக்கு அருகிலுள்ள கைத்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி, சுற்றுச்சூழல் ஆர்வலர், மரங்களின் தோழர் என்றெல்லாம் போற்றத்தக்க, எழில்சோலை அறக்கட்டளை நிறுவனர் பா.ச.மாசிலாமணி. இந்த மண்ணுக்கும் மன்னுயிர்க்கும் தான் ஆற்றி வரும் பணிகளைப் பற்றி அவர் கூறியதாவது:

“தனக்கு மட்டுமே சொந்தம் என நினைக்கும் மனித சமுதாயத்தின் பேராசையினாலும் சுய நலத்தினாலும் புவிக்கோளமாம் இந்த உயிர்க்கோளம், உயிரினங்கள் வாழ ஒவ்வாததாக மாறிக்கொண்டே இருக்கிறது. அறிவியலும் மக்கள் தொகைப் பெருக்கமும் இந்த மண்ணின் இயல்பு நிலையை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. நீர்வளம் குறைகிறது, நிலவளம் குறைகிறது. விண்ணும் காற்றும் மாசடைந்து வருகின்றன. இந்த மனிதனின் செயல்கள் அனைத்தும் இயற்கைக்கு எதிரானவையாகவே இருக்கின்றன. ஆக, ஒட்டுமொத்தத்தில் இயற்கைச் சமன்பாடற்ற நிலையை நோக்கி இந்த பூமி நகர்ந்து கொண்டே இருக்கிறது.

நம் முன்னோர்கள் இயற்கை வளங்களோடு இணைந்து நலமாக வாழ்ந்தார்கள். நாம் இயற்கை வளங்களை அழித்தபடி, மழையில்லையே… வெய்யிலடிக்கிறதே என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம். இதே நிலையைத் தொடர விட்டால் நம் பிள்ளைகளின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஊருக்கு நான்கு வீடுகளைக் கட்டி வைத்துப் பயனில்லை; ஊரிலிருக்கும் நிலத்தையெல்லாம் வளைத்துப் போட்டுப் பயனில்லை; வங்கியிலும் பெட்டகங்களிலும் பொன்னையும் பொருளையும் கொட்டி வைத்துப் பயனில்லை. இவற்றையெல்லாம் பிள்ளைகள் அனுபவித்து மகிழ வேண்டுமானால், மாசடைந்து வரும் இந்த பூமித்தாயை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.

அதற்கு நீர்வளத்தைக் காக்க வேண்டும், நிலவளத்தைப் பேண வேண்டும், காற்று மாசை அகற்ற வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழலை எப்படிப் பாதுகாப்பது? இதற்காக, வியர்வை சிந்தப் பாடுபட வேண்டாம்; உடம்பு நோக உழைக்க வேண்டாம். அவரவர் நிலத்தில் மரங்களை வளர்க்க வேண்டும். நிலமில்லாதவர்கள் வீட்டுக்கு முன்னும் வீட்டுக் கொல்லையிலும் மரங்களை வளர்க்கலாம்; பொது இடங்களில் வளர்க்கலாம்.

மரங்களை வளர்த்தால் மழை வரும், மண்ணில் வளமான நிலை வரும்! மரமே மழைக்கு உறவாம், அந்த மரமிருந்தால் தான் மழை வருமாம்! நீடித்த வேளாண்மை, நிலைத்த வேளாண்மை, மாசகற்றும் வேளாண்மை, அது மரப்பயிர் வேளாண்மை என்னும் பசுமை மொழிகள் சொல்வது போல, மரங்களை வளர்த்து விட்டால், மழை, மகிழ்ச்சியுடன் மண்ணுக்கு வரும். ஏரி, குளங்கள் நிறையும். நிலத்தடி நீரும் அதிகரிக்கும். செடிகொடிகள், பயிர் பச்சைகள் தழைக்கும். உயிரினங்களும் மகிழும். உயிரினங்களும் இந்த மண்ணில் வாழ்ந்தால் தான் மனிதனும் இங்கே வாழ முடியும்.

நீர்வளத்தைக் காப்பது போல நிலவளத்தைக் காக்கும் தன்மையும் மரங்களுக்கு உண்டு. இலைகளை உதிர்த்து மண்ணை வளப்படுத்தும். காற்றினாலும் நீரினாலும் ஏற்படும் மண்ணரிப்பைத் தடுக்கும். மழைநீரைத் தங்களின் வேர்க்கால்கள் வழியாக மண்ணுக்குள் இறக்கும். அதனால், மழைநீரை நிலத்தடி நீராக மாற்றுவதில் மரங்களுக்குப் பெரிய பங்கு இருக்கிறது. புயல், பெருமழை, சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தணித்து உயிரினங்களைக் காக்கும் கடவுள்கள் இந்த மரங்கள் தான்.

அதைப்போல, கரியமில வாயு, வாகனப்புகை, தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை, குளிர்சாதனக் கருவிகளால் வெளியாகும் நச்சுக்காற்று, இந்த உலகத்தையே தன்வயப் படுத்தியிருக்கும் நெகிழிக் குப்பைகள் எரிக்கப்படுவதால் வெளியாகும் புகை, வேதிப் பொருள்களில் இருந்து வரும் நச்சுவாயு போன்றவற்றால், காற்று மண்டலம் முழுவதும் அசுத்தமாகி வருகிறது. இதன் விளைவு தான் உலகம் வெப்பமயமாகி வருதல்.

இந்த வெப்பமயமாதலைத் தடுத்து மண்ணைக் காப்பதில் மரங்களின் பங்கு முதன்மையானது. அதனால், உயிரினங்கள் இயல்பாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டுமானால், இந்த மண்ணை, மரங்களும் மற்ற செடிகொடிகள் போன்ற தாவரங்களும் நிறைந்த பச்சைப் போர்வையால் போர்த்த வேண்டும். இதில், எல்லோரும் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும்.

அந்த அடிப்படையில் தான் என்னுடைய ஐந்து ஏக்கர் நிலத்தில் 2006 ஆம் ஆண்டில் மரக்கன்றுகளை வளர்க்கத் தொடங்கினேன். வன்னி, கருங்காலி, மகிளம், செண்பகம், உத்திராட்சம், திருவோடு, நாகலிங்கம், காசிலிங்கம், வில்வம், மகா வில்வம், சிகைக்காய், மாவிளங்கம், செர்ரி, ஆப்பிள், நீர் ஆப்பிள், வேங்கை, சில்வர் ஓக், சந்தனம், சிவப்புச் சந்தனம், தேக்கு, குமிழ் தேக்கு, பலா, கறிப்பலா, புதுவைப் பலா, நோனி, திருவாத்தி, மகாகனி, தென்னை, செவ்வாழை, அத்தி, ஆப்கான் அத்தி, வேம்பு, மலைவேம்பு, ஆல், அரசு, பூவரசு, போதிமரம்,அகத்தி, சீமையகத்தி, மூங்கில், முள்ளில்லா மூங்கில், பாதாம், தோதகத்தி, சிசு, கறிவேப்பிலை, பிரிஞ்சி, கருமருது, நீர்மருது,

மந்தாரை, அசோக மரம், அகர் மரம், புளிச்சங்காய் மரம், பதிமுகம், ஏழு வகை மாமரங்கள், கொய்யா, கடுக்காய், தான்றிக்காய், சாதிக்காய், நெல்லி, புரசு, பாக்கு, மாதுளை, வெண்ணெய்ப்பழ மரம் என 370 வகையான மரங்கள் என் நிலத்தில் பிள்ளைகளைப் போல வளர்ந்து வருகின்றன. காய்கனி மரங்கள் பலனைத் தந்து கொண்டுள்ளன. மற்ற மரங்கள் வானத்தை நோக்கி வளர்ந்து நிற்கின்றன.

இந்த மரங்கள் மட்டும் வளர்ந்து கொண்டிருக்கவில்லை; ஆயிரமாயிரப் பறவைகளுக்கும் பூச்சிகளுக்குமான வாழ்விடங்களை இந்த மரங்கள் தந்து கொண்டிருக்கின்றன. சாதாரண வயல்வெளியாய்க் கிடந்த நிலத்தில் நூறு வகைப் பட்டாம்பூச்சிகள் வண்ண வண்ணமாய்ப் பறந்து திரிகின்றன. சிட்டுக் குருவியினம் அழிவின் விளிம்பில் இருக்கிறது, கிருஷ்ணப் பருந்தைப் பார்க்க முடியவில்லை.

இப்படிப் பறவையினங்கள் அழிந்து வரும் நிலையில், எழில் சோலையில் காணப்படும் குருவிக் கூடுகளும் காக்கைக் கூடுகளும், இது பறவைகளின் தேசம் என்பதைக் கட்டியங் கூறுகின்றன. உயிர்ப் பன்மயம் இங்கே தூளியும் தொட்டிலும் கட்டி ஆடிக் கொண்டிருக்கிறது. இந்தப் பறவைகளின், பூச்சிகளின் ஓசைகளைக் கேட்டுக்கேட்டுப் பழகிப் போகிறவர்கள் இன்னிசையை விரும்ப மாட்டார்கள்.

இப்போது இந்த எழில் சோலை, சுற்றுச்சூழல் மேலாண்மையின் அவசியத்தைப் படம் பிடித்துக் காட்டும் விழிப்புணர்வு மையமாகத் திகழ்ந்து வருகிறது. கடந்தாண்டில் முப்பது பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு வந்து பார்வையிட்டுச் சென்றார்கள். இந்த ஆண்டில் இதுவரை இருபது பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு வந்து சூழல் விழிப்புணர்வைப் பெற்றுச் சென்றிருக்கிறார்கள். மாணவர்கள் மட்டுமல்ல, இயற்கை ஆர்வலர்கள், பொதுநல அமைப்பைச் சேர்ந்தவர்களும் வாரத்தில் நான்கைந்து நாட்கள் வந்து விடுகிறார்கள்.

இந்த எழில் சோலை மரங்களுக்கு இடையில் ஊடுபயிர்களாகச் சோளம், கம்பு, கேழ்வரகு, வேர்க்கடலை, உளுந்து, கொள்ளு போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த உணவுப் பொருள்கள், எங்கள் எழில் சோலை இயற்கை அங்காடி மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. எழில் சோலை இருப்பதால், கைத்தண்டலம் என்னும் இந்தக் குக்கிராமத்துக்கு இப்போது நிறைய வண்டிகள் வந்து செல்கின்றன.

எங்களின் எழில் சோலை அறக்கட்டளையின் சார்பில் கோயில் காடுகள் என்னும் திட்டத்தை 2012 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தி வருகிறோம். ஆண்டுக்கு நூறு கோயில்களில் அந்தந்தக் கோயிலுக்கு ஏற்ற தல விருட்சத்தையும் நட்சத்திர மரங்களையும் பறவைகளுக்கு உணவைத் தரும் ஆல், அரசு, அத்தி, இலுப்பை, வில்வம், விளாம்பழ மரங்களையும் நட்டுக் கொடுக்கிறோம். அவற்றைப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பு, கோயில் நிர்வாகங்களைச் சார்ந்ததாகும். அந்த வகையில் இதுவரை சுமார் 250 கோயில்களில் மரக்கன்றுகளை நட்டு நந்தவனங்களை உருவாக்கியிருக்கிறோம். கோயில்களுக்கும் பள்ளிகளுக்கும் மரக்கன்றுகளை இலவசமாகக் கொடுத்து வருகிறோம்.

நான் காஞ்சிபுர மாவட்ட மரம் வளர்ப்போர் சங்கத் தலைவராகவும் இருப்பதால், நிறைய விவசாயிகளிடம் மர வளர்ப்பின் அவசியத்தை எடுத்துச் சொல்ல முடிகிறது. எங்கள் சங்கம் செங்கல்பட்டிலுள்ள தமிழ்நாடு வன விரிவாக்க மையத்தின் ஆதரவில் இயங்கி வருவதால் மர வளர்ப்பு விவசாயிகளுக்கான அரசின் உதவிகளைப் பெற்றுத்தர முடிகிறது. இதனால், எங்கள் சங்கத்திலுள்ள 110 உறுப்பினர்கள் விவசாயத்தைப் பாதிக்காத வகையில் மண்ணுக்கேற்ற மர வகைகளைத் தேர்ந்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

திருமண நிகழ்ச்சியில், மா, மகிள மரக்கன்றுகளை மணமக்களுக்குக் கொடுத்து மணமகன் மாமனார் வீட்டிலும், மணமகள் கணவர் வீட்டிலும் கன்றுகளை நட வைத்து, மர வளர்ப்பைத் தொடக்கி வைக்கிறோம். திருமணம், காதணிவிழா, மஞ்சள் நீராட்டுவிழா போன்ற நல்ல நிகழ்ச்சிகளில் வரிசைக்குப் பதிலாக, மரக்கன்றுகளை வழங்கும்படி வலியுறுத்தி வருகிறோம். விருப்பப்படும் பள்ளியில் இருந்து ஆர்வமுள்ள ஐந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயிற்சியையும் விதைகளையும் இலவசமாகக் கொடுத்து, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விலைக்கு வாங்கிக் கொள்கிறோம்.

இப்படி, என்னுடைய சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளை உற்றுக் கவனித்த தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம், 2013 ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் புரவலர் விருதை எனக்கு வழங்கி என் பணிகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த விருது மேலும் என்னை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த விருதைப் பெரிய கெளரவமாகக் கருதுகிறேன். இந்த விருது, நான் வளர்க்கும் மரங்களால் கிடைத்த வரம்.

என்னுடைய அப்பா பாலகிருஷ்ணன், அம்மா சரோஜா, என் மனைவி எழிலரசி, என் பிள்ளைகள் இந்துமதி, தமிழ்மதி, சேதுமதி ஆகியோர் கொடுக்கும் தொடர் ஒத்துழைப்பும், அன்பான ஊக்கமும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணியில் என்னை அயராமல் ஈடுபட வைக்கின்றன.

இந்த நேரத்தில் நிறைவாகச் சொல்ல விரும்புவது, இன்றைய வெப்பநிலை, கால நிலை மாற்றங்களுக்கு அறிவியலால் தீர்வு காண முடியாது. பூமியைப் பசுமைப் போர்வையால் போர்த்துவதே தீர்வு. அதற்கு மரங்களே அடிப்படை. மரக்கன்றுகளை நடவு செய்து ஓராண்டுக்கு நீரூற்றிப் பாதுகாத்து விட்டால், இரண்டாம் ஆண்டிலிருந்து அந்தக் கன்றுகளுக்கு மழைநீர் மட்டுமே போதும். மூன்று ஆண்டுகளைக் கடந்து விட்டால் நிழலைத் தரத் தொடங்கி விடும்; பலனைத் தரத் தொடங்கி விடும்; வெப்பத்தைத் தாங்கும்; தணிக்கும்; நம்மையும் காக்கும்” என்றார், அகத்திலும் முகத்திலும் மலர்ச்சிப் பொங்க.

அவருடைய சூழல் மேலாண்மைப் பணிகள் தொடர வேண்டும் அவர் இன்னும் பல விருதுகளைப் பெற வேண்டும் என வாழ்த்தி விடை பெற்றோம்.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!