விளைச்சலைப் பெருக்கும் இலைவழி உரங்கள்!

யிர்களுக்குத் தேவையான சத்துகள் அடங்கிய உரங்களை மண்ணில் இட்டு வேர்கள் மூலமாகக் கிடைக்கச் செய்வதைக் காலங் காலமாகப் பின்பற்றி வருகிறோம்.

ஆனால், இலைகளில் தெளித்தும் கிடைக்கச் செய்யலாம் என்பது அண்மைக் கால நடைமுறை.

இங்கே, இலைவழி உரத்தை ஏற்றுக் கொள்ளும் பயிர்கள் மற்றும் இலைவழி உர நிர்வாகம் குறித்துக் காணலாம்.

டிஏபி கரைசல்

பயறுவகைப் பயிர்களில் மகசூலைப் பெருக்க, டிஏபி கரைசலைத் தெளிக்க வேண்டும்.

ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் நீரில் ஊற வைக்க வேண்டும்.

பிறகு, தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து 200 லிட்டர் நீரில் கலந்து, கைத்தெளிப்பான் மூலம் இலைகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.

பயிர்கள் பூக்கும் காலமான, விதைத்த 25 ஆம் நாளிலும், பதினைந்து நாட்கள் கழித்து, காய்கள் பிடிக்கும் காலமான 40 ஆம் நாளிலும் தெளிக்க வேண்டும்.

இப்படிச் செய்தால், காய்களில் திரட்சியான மணிகள் பிடித்து மகசூல் கூடும்.

கரும்பு வளர்ச்சியூக்கி

சத்துகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த ஊக்கியைக் கரும்பில் தெளிக்கலாம்.

இதனால், கரும்பு விரைவாக வளரும். இடைக் கணுக்களின் நீளம் கூடும். கரும்பின் எடை அதிகமாகும்.

விளைச்சல் 20 சதம் வரை கூடும். சர்க்கரைக் கட்டுமானம் அதிகமாகும். வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகமாகும்.

அதனால், கரும்பை நட்ட, 45, 60, 75 நாட்களில் முறையே, 2, 3, 4 வீதம் கரும்பு வளர்ச்சி ஊக்கியை, 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

தேவையான அளவில் ஒட்டும் திரவத்தைச் சேர்த்துத் தெளிக்க வேண்டும்.

நிலக்கடலை வளர்ச்சியூக்கி

தேவையான சத்துகள், வளர்ச்சி ஊக்கிகள் கலந்த ஊக்கியை நிலக்கடலைச் செடிகளில் தெளிக்கலாம்.

இதனால், பூப்பிடிப்புத் திறன் அதிகமாகும். பொக்குக் கடலைகள் குறையும். மகசூல் 15 சதம் கூடும். வறட்சியைத் தாங்கும் தன்மை கூடும்.

அதனால், ஏக்கருக்கு 2 கிலோ நிலக்கடலை வளர்ச்சியூக்கிப் பொடியை, 200 லிட்டர் நீரில், செடிகள் பூக்கும் போதும், காய்கள் பிடிக்கும் போதும் தெளிக்க வேண்டும்.

தேவையான அளவில் ஒட்டும் திரவத்தைச் சேர்த்துத் தெளிக்க வேண்டும்.

மக்காச்சோள வளர்ச்சியூக்கி

இந்த வளர்ச்சி ஊக்கியை மக்காச் சோளத்தில் தெளித்தால், மணிப்பிடிப்புத் திறன் மிகும்.

விளைச்சல் 20 சதம் வரையில் கூடும். வறட்சியைத் தாங்கும் தன்மை பயிர்களில் அதிகமாகும்.

அதனால், ஏக்கருக்கு 3 கிலோ மக்காச்சோள வளர்ச்சியூக்கிப் பொடியை, 200 லிட்டர் நீரில்,

தேவையான ஒட்டும் திரவத்துடன் கலந்து, ஆண் மஞ்சரிகள் உருவாகும் போது தெளிக்க வேண்டும்.

பருத்தி வளர்ச்சியூக்கி

பருத்திக்குத் தேவையான சத்துகள், வளர்ச்சி ஊக்கிகள் அடங்கிய ஊக்கியைத் தெளிப்பதால், பூக்கள் மற்றும் சப்பைகள் உதிர்வது குறையும்.

காய்கள் முழுமையாக வெடித்துச் சீரான அறுவடைக்கு வரும். விளைச்சல் 18 சதம் வரையில் அதிகமாகும். செடிகளில் வறட்சியைத் தாங்கும் தன்மை கூடும்.

அதனால், ஏக்கருக்கு 2 கிலோ பருத்தி வளர்ச்சியூக்கிப் பொடி வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் கலந்து, செடிகள் பூக்கும் போதும் காய்க்கும் போதும், தேவையான ஒட்டும் திரவத்தைச் சேர்த்துத் தெளிக்க வேண்டும்.

பயறு வளர்ச்சியூக்கி

பயறு வகைகளுக்குத் தேவையான சத்துகள், வளர்ச்சி ஊக்கிகள் கலந்த ஊக்கியைத் தெளிப்பதால், பூக்களும் சப்பைகளும் உதிர்வது குறையும்.

விளைச்சல் 20 சதம் வரையில் கூடும். செடிகளில் வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகமாகும்.

அதனால், ஏக்கருக்கு 2 கிலோ பருத்தி வளர்ச்சி ஊக்கியை, 200 லிட்டர் நீரில் கலந்து, செடிகள் பூக்கும் போது, தேவையான ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.


நா.மாரிக்கண்ணு, பி.கருப்பசாமி, முனைவர் ஜெ.திரவியம், வேளாண் அறிவியல் நிலையம், புழுதேரி, கரூர் – 621 313.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!