உலகில் அதிகளவில் மீன் உற்பத்தி செய்யும் நாடுகளில், இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
1960 இல் 1.6 மில்லியன் டன்னாக இருந்த மீன் உற்பத்தி 2014 இல் 73.8 மில்லியன் டன்னாக உயர்ந்து உள்ளது.
இதற்குக் காரணம், தொடர் முயற்சி, நவீன உத்திகள் பயன்பாடு என்று சொல்லலாம். மேலும், மீன்களை விரைவாக வளரச் செய்யும் மீன் உணவுக்கும் முக்கிய இடமுண்டு.
மீன் உற்பத்திச் செலவில் 60 சதம் உணவுக்காகத் தேவைப்படுகிறது. மீன் தூளில் உள்ள அதிகப் புரதம், சிறந்த அமினோ அமிலங்கள்,
நன்கு செரிக்கும் தன்மை ஆகியவற்றால், இப்போது வரை மீன் தூளே அனைத்து மீன் உணவுகளிலும் பயன்படுகிறது.
ஆனால், இப்போது கடலில் மீன் பிடிப்புக் குறைந்து வருவதால் மீன் தூளின் உற்பத்தியும் குறைந்து வருகிறது. இதனால், சந்தையில் மீன் தூளின் விலை அதிகரித்து வருகிறது.
எனவே, மீன் உணவுகளில், மீன் தூளுக்கு மாற்றாக, தாவரம் அல்லது விலங்கு சார்ந்த புரத ஆதாரங்களைப் பயன்படுத்தினால், மீன் உற்பத்திச் செலவைக் குறைக்கலாம்.
மீன் தூளுக்கு மாற்றாகப் பயன்படும் விலங்கினப் புரதங்களில், கறுப்புப் படைப் பூச்சித் தூள் சிறந்தது.
புரத ஆதாரமாக விளங்கும் பூச்சி
உலகில் மொத்தம் 80 மில்லியன் பூச்சியினங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றில் ஒரு மில்லியன் பூச்சியினங்கள் மட்டுமே இதுவரை அறியப்பட்டு உள்ளன.
இந்நிலையில், இப்போது மேலை நாடுகள், கால்நடை வளர்ப்பில் பூச்சித்தூள் உணவை, புதிய புரத ஆதாரமாகப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளன.
இவ்வகையில், பூச்சித்தூளை மீன்களுக்கு உணவாக அளிக்கும் போது, மீன்களின் உணவுப் பழக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பூச்சிகள் பெரும்பாலும் வீட்டுக் கழிவுகள், குப்பைகள், கால்நடை எரு ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன.
பூச்சிகள் உண்ணும் பொருளுக்கு ஏற்ப, அதன் புரத அளவும் மாறுபடுகிறது. பூச்சிகளை உற்பத்தி செய்வதற்குப் பெரிய இடம் தேவையில்லை.
சிறிய இடமும், உகந்த திடக்கழிவுகளும் இருந்தாலே பூச்சிகளை வளர்க்க முடியும்.
மீன் வளர்ப்பில் இந்தப் பூச்சித்தூள் உணவைப் புரத ஆதாரமாகப் பயன்படுத்தலாம். ஆனால், அனைத்துப் பூச்சி இனங்களும் மீன் உணவுக்குத் தகுதியாகாது.
புரத அளவு, அமினோ அமிலங்கள், கொழுப்பு, வைட்டமின், தாதுகள் மற்றும் மூலப் பொருள்கள் கிடைப்பதைக் கணக்கில் கொள்ளும் போது, சில பூச்சியினங்கள் மீன் உணவுக்கு ஏற்றதாக உள்ளன.
அவற்றில் சில: கறுப்புப்படைப் பூச்சி (Black Soldier Fly – Hermetia illucens), வீட்டுப்பூச்சி (Housefly – Musca domestica), மஞ்சள் உணவுப்புழு (Yellow Mealworm – Tenebrio molitor), பட்டுப்புழுத் தூள் (Silkworm pupae meal – Bombyx mori).
இவற்றில் கறுப்புப்படைப் பூச்சி சிறந்த புரத ஆதாரமாகத் திகழ்கிறது.
கறுப்புப்படைப் பூச்சி
இதன் தாயகம், அமெரிக்க வெப்ப மண்டலப் பகுதியாகும். ஆனால், இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.
முதிர்ந்த கறுப்புப்படைப் பூச்சி, 16 மி.மீ. நீளம் வரை வளரும். உடல் கறுப்பாக, நெஞ்சு நீலம் அல்லது பச்சையாக, அடிவயிறு இளஞ் சிவப்பாக இருக்கும்.
அகண்ட தலையும், கண்களும் கொண்ட இந்தப் பூச்சியின் உணர் கொம்புகள், தலையை விட இரு மடங்கு நீளமாக இருக்கும்.
வாழ்க்கைச் சுழற்சி: நன்கு முதிர்ந்த பெண் பூச்சி, 206-639 முட்டைகளை இடும். பெரும்பாலும் இந்த முட்டைகளை, குறுகிய பிளவுகளில், அழுகும் குப்பையின் அருகில் இடும்.
முட்டைகள் 3-4 நாட்களில் பொரிந்து, 1 மி.மீ. நீளம், 0.1 கிராம் எடையுள்ள இலார்வாக்கள் வெளிவரும். இவை, 18-36 நாட்களில் 25 மி.மீ. நீளம், 0.22 கிராம் எடையை அடையும்.
மேலும், புழுவாக 7 நாட்களும், கூட்டுப் புழுவாக 1-2 வாரமும் இருக்கும். நல்ல முதிர்ந்த கறுப்புப்படைப் பூச்சிகள் 47-73 நாட்கள் உயிர் வாழும். இலார்வாக்களின் உணவாகக் காய்கறிக் கழிவுகளைத் தரலாம்.
கறுப்புப்படைப் பூச்சித்தூளில் உள்ள சத்துகள்
கறுப்புப்படைப் பூச்சி இலார்வாக்களில் 42.1 சதம் புரதமும், கொழுப்பற்ற இலார்வாக்களில் 56.9 சதம் புரதமும் இருக்கும்.
இது, மீன் தூளில் உள்ள 65 சதப் புரதத்தைக் காட்டிலும் சற்றுக் குறைவு. மேலும், இதில், 3.4-38.6 சதம் கொழுப்பு இருக்கும்.
இவற்றின் அமினோ அமிலத்தின் அளவு, சோயா மாவைக் காட்டிலும் அதிகம்.
அதைப் போல, மீன் தூளின் அமினோ அமிலத்தின் அளவும் இதன் அளவும் ஏறத்தாழ ஒன்றாகும்.
புரதம், கொழுப்பு மட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுகள் இதில் அதிகமாகும்.
இதை, 28-30 டிகிரி செல்சியசில் பதப்படுத்தினால், பல வாரங்களுக்குப் பயன்படுத்தாலாம்.
மீன் உணவாகக் கறுப்புப்படைப் பூச்சிகள்
கோழி, பன்றி மற்றும் மீனுக்கு, கறுப்புப்படைப் பூச்சித் தூளை உணவாகத் தரலாம்.
குறிப்பாக, மீன் உணவில் மீன் தூளுக்கு மாற்றாக, கறுப்புப்படைப் பூச்சி இலார்வாத் தூளைச் சேர்க்கலாம்.
நன்னீர் ஜியான் கெண்டை மீன் உணவில், மீன் தூளுக்கு மாற்றாக இந்த இலார்வாத் தூளை 50 சத அளவில் கொடுத்தால், மீன்களின் வளர்ச்சி மற்றும் செரிமானம் அதிகமாகும்.
அதைப்போல, இந்த இலார்வாத் தூளை உண்ணும், திலேப்பியா, ட்ரௌவுட் போன்ற மீன்களும் அதிக வளர்ச்சியை அடையும்.
அலங்கார மீன்களாகிய, கொய் கெண்டை மீன், கப்பி மீன், பொன் மீன் போன்றவையும், இதை உண்ணும் போது, நல்ல வளர்ச்சி மற்றும் அழகான நிறத்தை அடையும்.
நன்னீர் மீன்கள் மட்டுமின்றி, அட்லாண்டிக் சால்மன், கொடுவா போன்ற கடல் மீன்களும் இந்த இலார்வாத் தூளை உண்ணும் போது, நல்ல வளர்ச்சி மற்றும் எதிர்ப்பு சக்தியைப் பெறும்.
கடல் இறால் வனாமி இனங்களுக்கும் இதை உணவாக இடலாம். இதனால், அவற்றின் நீளமும் எடையும் கூடும்.
ஸ்ரீ.ஜெயப்பிரகாஷ்சபரி, முனைவர் சா.ஆனந்த், வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், பவானிசாகர் – 638 451.