கூண்டு முறையில் இறைச்சிக்காடை வளர்ப்பு!

காடை வளர்ப்பு வணிக நோக்கில் முக்கியத் தொழிலாக வளர்ந்து வருகிறது. இறைச்சிக்கு, முட்டைக்கு என, காடைகள் வளர்க்கப்படுகின்றன.

இறைச்சிக் காடைகளைக் குறைந்த முதலீட்டில் தொடங்கி, குறுகிய காலத்தில் வருவாயை ஈட்டலாம்.

காடை வளர்ப்புக்குக் குறைந்தளவில் இடவசதி இருந்தால் போதும். ஒவ்வொரு காடையும் 4-5 வாரத்தில் 180-210 கிராம் எடையை அடையும்.

ஆண் காடையை விடப் பெண் காடையின் எடை அதிகமாக இருக்கும். இறைச்சி உற்பத்தி 70-74 சதம் ஆகும்.

காடை இறைச்சி மற்ற இறைச்சி வகைகளை விட மென்மையாக, சுவையாக, கொழுப்புக் குறைந்ததாக இருக்கும்.

இறைச்சிக் காடைகளை, ஒருநாள் குஞ்சு முதல் விற்பனை வயது வரையில் கூண்டு முறையில் எளிதாக வளர்க்கலாம்.

தீவனக்கலன், குடிநீர்த் தொட்டி போன்ற பொருள்கள் தனியாகத் தேவையில்லை.

காடை இரகங்கள்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் அங்கமான சென்னையிலுள்ள கோழியின ஆராய்ச்சி நிலையம், நந்தனம்-1 நந்தனம்-2 என்னும் காடையினங்களை உருவாக்கி உள்ளது.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின் கோழியின அறிவியல் துறை, குறைந்த காலத்தில் அதிக எடையை அடையும் நாமக்கல்-1 என்னும் இறைச்சிக் காடையை உருவாக்கி உள்ளது.

நாமக்கல்-1 காடை நான்கு வாரத்தில், 500 கிராம் தீவனத்தை உண்டு, 210 கிராம் எடையை அடையும்.

மேலும், மற்ற காடை இனங்களை விட நோயெதிர்ப்பு சக்தி மிகுந்தது.

கூண்டு முறையில் வளர்க்கும் காடைகளில் நோய்க் கிருமிகளின் தாக்கம் குறைவாக இருக்கும். இவற்றைக் கையாள்வதும் எளிதாகும்.

எனவே, ஆழ்கூள முறையில் வளர்ப்பதை விட, கூண்டு முறையில் வளர்ப்பதே சிறந்தது.

ஆனால், கூண்டுகளில் வளர்ப்பதற்கு, தொடக்க முதலீடு அதிகமாகத் தேவைப்படும்.

ஒருநாள் காடைக் குஞ்சுகளை வாங்கி வளர்க்க வேண்டும். தொடக்கத்தில், காடைத் தீவனத்தைக் கடைகளில் இருந்து வாங்கிக் கொடுக்கலாம்.

ஆனால், அனுபவம் ஆக ஆக, இனப்பெருக்கக் காடைகள் மற்றும் குஞ்சுப் பொரிப்பானைச் சொந்தமாக உருவாக்கிக் கொள்ளலாம்.

தீவனத்தையும் சொந்தமாகத் தயாரிப்பது சாலச் சிறந்ததாகும்.

காடைகளின் வளர் பருவங்கள்

வயது அடிப்படையில் இறைச்சிக் காடைகளை இரு பருவங்களாகப் பிரிக்கலாம்.

அதாவது, இரண்டு வாரம் வரையில் குஞ்சுப் பருவமாகும். 3-5 வாரம் வரையில் வளர் பருவமாகும்.

கூண்டு முறையின் நன்மைகள்

குறைந்தளவு இடமே போதும். தீவன விரயம் குறைவாக இருக்கும். தீவன மாற்றுத் திறன் அதிகமாக இருக்கும்.

அக ஒட்டுண்ணி மற்றும் ஈரமான ஆழ்கூளத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாப்புக் கிடைக்கும்.

உற்பத்திப் பண்புகள்

காடை முட்டையின் எடை: 8-14 கிராம்.

காடைக் குஞ்சின் எடை: 7-11 கிராம்.

விற்பனை வயது எடை: 180-210 கிராம்.

விற்பனைக் காலம் : 4-5 வாரம்.

உண்ணும் தீவனம்: 500 கிராம்

காடைக் குஞ்சுகள் பராமரிப்பு

ஒவ்வொரு கூண்டும் 5-6 அடுக்குகளை உடையதாக இருக்க வேண்டும். 160 செ.மீ. நீளம், 80 செ.மீ அகலம், 25 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு அடுக்கின் கீழும் எச்சத் தட்டு இருக்க வேண்டும். கூண்டின் அடிப்பகுதியில் செய்தித்தாள் அல்லது காகித அட்டைகளைப் பரப்பி விட வேண்டும்.

ஒவ்வொரு அடுக்கிலும் 250 காடைக் குஞ்சுகளை வளர்க்கலாம்.

கூண்டின் நீளவாட்டப் பகுதியில், வெளிப்புறமாகத் திறக்கும் வகையில், கம்பிக் கதவை அமைக்க வேண்டும்.

சுமார் 500 மி.லி. நீருள்ள இரண்டு குடிநீர்க் கலன்கள், 30 செ.மீ. விட்டமுள்ள தட்டில் வைக்கப்படும் தீவனம், நூறு குஞ்சுகளுக்குப் போதும்.

நூறு குஞ்சுகளுக்கு 100 வாட் மின் விளக்கு வீதம் வைத்து, வெப்பமளிக்க வேண்டும்.

வளர் காடைகள் பராமரிப்பு

இரண்டு வாரங்களுக்குப் பிறகு இவற்றை, வளர் காடை கூண்டுகளுக்கு மாற்ற வேண்டும்.

இங்கே காடைகள் விற்பனையாகும் வரை (5 வாரம்) 125-150 செ.மீ. வீதம் இடவசதி அளிக்க வேண்டும்.

அதாவது, ஒரு சதுரடியில் 6-8 காடைகளை வளர்க்கலாம். ஒவ்வொரு கூண்டையும் 5-6 அடுக்குகளாக அமைக்கலாம்.

ஒவ்வொன்றையும் இரண்டு அறைகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு அறையும் 90 செ.மீ. நீளம், 60 செ.மீ. அகலம், 25 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும். இந்த அறையில் 40 காடைகளை வளர்க்கலாம்.

மூன்றாம் வாரம் முதல் விற்பனை வரையில், ஒவ்வொரு காடைக்கும், குடிநீர்த் தொட்டியில் 0.6 செ.மீ. இடம், தீவனத் தொட்டியில் 1.5 செ.மீ. இடம் அளிக்க வேண்டும்.

சுமார் 45 செ.மீ. நீளம், 2.5 செ.மீ. உயரம், 10 செ.மீ. அகலமுள்ள தீவனத் தொட்டி இருந்தால் போதும்.

ஆறு அங்குல விட்டமுள்ள தட்டு, 750 மி.லி. நீர் கொள்ளும் கிண்ணமும் கூடிய குடிநீர்த் தொட்டி, 50 காடைகளுக்குப் போதுமானது. அதன் பக்கவாட்டு உயரம் 2-3 செ.மீ. இருக்கலாம்.

தீவனப் பராமரிப்பு

காடைத் தீவனம் கிடைக்காத நிலையில், இறைச்சிக் கோழிகளுக்குத் தரப்படும் ஆரம்பக் காலத் தீவனத்தை நான்கு வாரங்களுக்கும் தரலாம்.

ஒரு காடை 210 கிராம் எடையை அடைய, சுமார் 500 கிராம் தீவனத்தை உண்ணும்.

காடை வளர்ப்பில் தீவனச் செலவு 70 சதத்துக்கும் மேல் இருப்பதால், தீவனச் செலவைக் குறைக்க வேண்டும்.

சொந்தமாகத் தீவனத் தயாரிப்பில் ஈடுபட்டால் இது சாத்தியமாகும்.

அதே சமயம், குறைந்தளவில் காடைகளை வளர்க்கும் போது குறைந்தளவு தீவனமே தேவைப்படும்.

இந்நிலையில், சொந்தமாகத் தீவனத்தைத் தயாரிக்க ஆகும் செலவு அதிகமாக இருக்கும்.

எனவே, சிறிய பண்ணையாளர்கள், சொந்தமாகத் தீவனத் தயாரிப்பில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.

வாரத்துக்கு ஆயிரம் காடைகளுக்கு மேல் வளர்ப்போர், சொந்தமாகத் தீவனத்தைத் தயாரிக்கலாம்.

பேட்டரி கூண்டு

பேட்டரி காடைக்குஞ்சுக் கூண்டு: கலிபோர்னியன் வகையில், 2.5 அடி நீளம், 1.5 அடி அகலத்தில் அமைக்கப்பட்ட கூண்டில் 40 காடைக் குஞ்சுகளை வளர்க்கலாம்.

பேட்டரி வளர்காடைக் கூண்டு: கலிபோர்னியன் வகையில், 2.5 அடி நீளம், 1.5 அடி அகலத்தில் அமைக்கப்பட்ட கூண்டில் 25 வளர் காடைகளை வளர்க்கலாம்.

தீவனத் தயாரிப்பு மாதிரி

மக்காச்சோளம்: குஞ்சுக்கு, 52.22 சதம், வளர் காடைக்கு 58.37 சதம்.

எண்ணெய்யற்ற தவிடு: குஞ்சுக்கு மட்டும், 3.1 சதம்.

தவிட்டு எண்ணெய்: குஞ்சுக்கு 2.5 சதம், வளர் காடைக்கு 2.7 சதம்.

எண்ணெய்யற்ற சோயா: குஞ்சுக்கு, 39.7 சதம், வளர் காடைக்கு, 34.5 சதம்.

உப்பு: குஞ்சுக்கு, 0.44 சதம், வளர் காடைக்கு 0.45 சதம்.

கால்சைட்: குஞ்சுக்கு, 1.5 சதம், வளர் காடைக்கு 1.42 சதம்.

டைகால்சியம் பாஸ்பேட்: குஞ்சுக்கு, 1.5 சதம், வளர் காடைக்கு 1.7 சதம்.

தாதுப்பு: குஞ்சுக்கு, 0.18 சதம், வளர் காடைக்கு 0.2 சதம்.

லைசின்: குஞ்சுக்கு, 0.248 சதம், வளர் காடைக்கு 0.181 சதம்.

மெத்தியோனின்: குஞ்சுக்கு, 0.373 சதம், வளர் காடைக்கு 0.218 சதம்.

டி வைட்டமின்: குஞ்சுக்கு 0.025 சதம், வளர் காடைக்கு 0.025 சதம்.

ஒட்டுவான்: குஞ்சுக்கு, 0.1 சதம், வளர் காடைக்கு 0.1 சதம்.

கோலின் குளோரைடு: குஞ்சுக்கு, 0.093 சதம், வளர் காடைக்கு 0.115 சதம்.

குடிநீர்

காடைத் தீவனமும் குடிநீரும் சுத்தமாக இருந்தால், பெரும்பாலான நோய்களில் இருந்து காடைகளைக் காக்கலாம்.

நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரே மிகச் சிறந்த குடிநீராகும்.

எனவே, முதல் இரண்டு வாரக் காடைக் குஞ்சுகளுக்கு, இத்தகைய நீரைக் குடிநீராக அளிப்பது நல்லது.

பிறகு, காடைகள் அருந்தும் குடிநீரின் அளவு மிகுவதால், நீரைக் கொதிக்க வைத்து ஆற வைத்துத் தருவது சிரமமாகும். இந்நிலையில், சரியான கிருமி நாசினியைக் கலந்து தரலாம்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு மிகக் குறைந்த விலையில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் கிருமிநாசினி.

இதை, 10 லிட்டர் நீருக்கு 1 மி.லி. வீதம் கலந்து காடைகளுக்குத் தரலாம். அல்லது, கால்நடை மருத்துவர் மூலம் சிறந்த கிருமி நாசினியை அறிந்து, அதைக் கலந்து தரலாம்.

நோய்களும் தடுப்பு முறைகளும்

தீவனமும் குடிநீரும் சுத்தமின்றி இருந்தால் அல்லது சிறந்த பராமரிப்பு முறைகளைக் கையாளாமல் இருந்தால், காடைகளுக்கு நோய்கள் வரலாம்.

அப்படி ஏதேனும் நோய்த் தாக்கம் இருந்தால், அதற்கான காரணத்தைக் கால்நடை மருத்துவர் மூலம் அறிந்து சரியான மருந்துகளை அளிக்கலாம்.

காடைகளைக் கூண்டு முறையில் வளர்க்கும் போது, இரத்தக் கழிச்சல் நோய் பெரும்பாலும் வருவதில்லை.

ஜப்பானிய காடைகளை, கோலிபா சில்லோசிஸ், அல்ஸரேட்டிவ் என்டிரைட்டிஸ் என்னும் நுண்ணுயிர் நோயும்,

அஸ்பர் ஜில்லோஸிஸ் என்னும் பூசண நோயும், அப்ளாடக்ஸி கோஸிஸ் என்னும் பூசண நச்சு நோயும்,

காக்ஸிடி யோஸிஸ் என்னும் ஒட்டுண்ணி நோயும் தாக்கலாம்.

ஆனால், கோழிகளை விடக் காடைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகம்.

எனவே, முறையான தடுப்பூசி மருந்தைச் செலுத்த வேண்டிய தேவை இதுவரை ஏற்படவில்லை.

விற்பனை வாய்ப்புகள்

இறைச்சிக் காடை வளர்ப்பில், காடைக் குஞ்சின் விலை ரூ.6, ஒரு காடை உண்ணும் அரைக் கிலோ தீவனம் ரூ.16,

தடுப்பூசி மற்றும் மருந்துக்கான செலவு, இதர செலவுகள் ரூ.1 உட்பட, ஓர் இறைச்சிக் காடையை வளர்க்க 23-25 ரூபாய் செலவாகும்.

இப்போது தமிழகத்தில் ஒரு காடை ரூ.35 க்குக் குறையாமல் விலை போவதால், காடை வளர்ப்பாளர்,

ஓர் இறைச்சிக்காடை மூலம் 10 ரூபாய் இலாபம் பெறலாம்.

ஒருநாள் வயதுள்ள காடைக் குஞ்சுகளைத் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் இருந்து பெறலாம்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும்,

காட்டுப்பாக்கம் கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம்,

சென்னை மாதவரம் கோழியின ஆராய்ச்சி நிலையம், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாட்டிலுள்ள,

கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் ஒருநாள் காடைக்குஞ்சுள் கிடைக்கும்.

எனவே, கூண்டு முறையில் இறைச்சிக் காடைக் குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பம்,

குளிர்ந்த காற்றிலிருந்து பாதுகாப்பு, முறையான கிருமி நீக்கம், சுத்தமான குடிநீர் மற்றும் தரமான கலப்புத் தீவனத்தை அளித்து,

இறப்பு விகிதத்தைக் குறைத்து, நோயின்றிப் பாதுகாத்தால், அதிக இலாபம் கிடைக்கும்.


முனைவர் க.பிரேமவல்லி, இணைப் பேராசிரியர், கோழி இனவிருத்திப் பிரிவு, கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks