கடந்த நாற்பது ஆண்டுகளாக நமது தேசிய விவசாயக் கொள்கைகள், உத்திகள், செயல்கள் மற்றும் திட்டங்கள் ஆகியன, உணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கியே இருந்து வருகின்றன.
இதில் நாம் வெற்றி பெற்றிருந்தாலும், இயற்கைச் சீர்கேடு, மக்கள் பெருக்கம், அதற்கேற்ற உணவு உற்பத்தி, வறுமை ஒழிப்பு போன்றவை, நமக்குப் பெரும் சவால்களாக உள்ளன.
எனவே, நமது விவசாய உத்திகள், செயல்கள் மற்றும் திட்டங்களை, புதிய திசையை நோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதாவது, அறுபதுகளில் நாம் செயல்படுத்திய பசுமைப் புரட்சி உத்திகளைப் போலின்றி, புதிய கோணத்தில் நமது விவசாயத்தைச் செயல்படுத்த வேண்டும்.
நமக்கு முன்னே முக்கியமான இரண்டு சிக்கல்கள் உள்ளன. அதாவது, உணவு உற்பத்தியை மும்மடங்காகப் பெருக்குவது
மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்து, நீடித்த நிலையான விவசாயத்துக்கு வழி வகுப்பது. இவற்றுக்குத் தீர்வு காண, அங்கக வேளாண்மை அவசியம்.
அங்கக வேளாண்மை மூலம் மண்வளத்தைக் காக்கலாம்.
மேலும், குறைந்த வேலையாட்கள், குறைந்த செலவினம் மூலம் நிறைந்த விளைச்சல் மற்றும் குறைந்த பசுமைக் குடில் வாயு வெளியேற்றம் ஆகியவற்றை அடையலாம்.
இந்நிலை, பருவநிலை மாற்றத்துக்கு மருந்தாக அமையும். இயற்கை விவசாயத்தில் மூன்று கோட்பாடுகளைக் கையாள வேண்டும்.
அவையாவன: குறைந்த உழவு. பயிர்த் தாள்கள் மற்றும் கழிவுகளை நிலத்தில் நிரந்தர மூடாக்காக அமைத்தல், பயறுவகைப் பயிர்களைச் சுழற்சி முறையில் சாகுபடி செய்தல்.
குறைந்த உழவு
இதன் மூலம் மேல்மண் மற்றும் அடிமண் இறுக்கம் மாறி, மண்ணின் கட்டமைப்பு மேம்படும்.
மண்ணின் அங்ககப் பொருள்களில் எரியூட்டும் தன்மை பெருமளவு குறையும்.
நீர்ப்பிடிப்பு மற்றும் நீரைத் தேக்கி வைக்கும் தன்மை மிகுந்து, மண்ணின் ஈரப்பதம் காக்கப்படும்.
நிலத்தில் உறங்கும் களை விதைகளின் முளைப்புத் திறனும், களைகளின் தாக்கமும் வெகுவாகக் குறையும்.
குறைந்த உழவு முறையைச் செயல்படுத்தினால், கோரை மற்றும் புற்களைக் கட்டுப்படுத்த, இரசாயனக் களைக் கொல்லிகள் தேவைப்படும்.
எனவே, தரமான களைக் கொல்லிகளைச் சரியான அளவில், சரியான நேரத்தில், போதிய ஈரப்பதம் இருக்கும் போது இட்டால், மண்வளம் காத்து, களைகளைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தலாம்.
ஆழச்சால் அகலப்பாத்தி: இயந்திரம் மூலம் ஆழச்சால் அகலப் பாத்திகளை, ஒரு மீட்டர் இடைவெளியில் அமைத்து, படுக்கையில் பயிர்களை நடவு செய்யும் முறை தற்போது வளர்ந்து வருகிறது.
குறைந்த ஆட்கள் மூலம் மேட்டுப்பாத்தி மற்றும் வாய்க்கால்களை அமைக்கலாம்.
படுக்கை நடவு மற்றும் விதைப்புக்கு மிகக் குறைந்தளவில் நாற்றுகள் மற்றும் விதைகள் இருந்தால் போதும்.
படுக்கை நடவில் களைக் கொல்லியின் திறன் கூடுவதுடன், கருவிகள் மூலம் களைகளைச் சிறப்பாகக் கட்டுப்படுத்த முடியும்.
கடும் வறட்சியில் பயிர்களைக் காப்பதுடன், மழைக் காலத்தில் கூடுதலாக உள்ள நீரை வெளியேற்ற முடியும்.
அடியுரம் மற்றும் மேலுரத்தைச் சரியான அளவில், சரியான இடத்தில் இட ஏதுவாகும்.
சூரியவொளி நன்கு கிடைத்து, பயிர்கள் திரட்சியாக வளரும். பயிர்களின் வேர்ப் பிடிப்புக் கூடி, மழைக் காலத்தில் பயிர்கள் சாயாமல் இருக்கும்.
மண் மூடாக்கு
இப்போது நிலவி வரும் குறைந்த மகசூலுக்கு, நிலத்தில் குறைந்து வரும் அங்ககப் பொருள்கள், மண்வளம் மற்றும் மண்ணிலுள்ள சத்துகளே காரணங்களாக உள்ளன.
இவற்றை மேம்படுத்த, இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், கால்நடைகள் குறைந்து வருவதால், இயற்கை உரங்கள் போதியளவில் கிடைப்பதில்லை.
மேலும், பயிர்க் கழிவையும் முறையாக நிர்வாகம் செய்வதில்லை. இச்சூழலில், சத்துகள் மிக்க பயிர்க் கழிவுகளைப் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
பொதுவாக விவசாயிகள், தீவனமாக, கால்நடை மற்றும் கோழியினப் படுக்கையாக, காளான் உற்பத்திக்கு, சாண எரிவாயு உற்பத்திக்கு, பயிர்க் கழிவுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
வயல் வரப்புகளில் அப்படியே குவித்தும், மண்ணில் மடக்கி உழுதும், வயலிலேயே எரித்தும், மட்கிய எருவாக மாற்றியும் பயிர்க் கழிவுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், பயிர்க் கழிவுகளை நிலத்தில் மூடாக்காக இட்டால், பல்வேறு பயன்களை அடையலாம்.
மண்ணின் ஈரத்தைக் காக்கலாம்; மண்ணரிப்பைத் தடுக்கலாம்; இதனால், மண்வளம் மற்றும் சத்துகள் வீணாகாமல் தடுக்கலாம்.
மண்ணில் உள்ள சத்துகள் எளிதாக, சீராகப் பயிர்களுக்குக் கிடைக்கும். மண்ணில் பல்லுயிர்ப் பெருக்கச் சூழல் உருவாகி மண்வளம் பெருகும்.
மழை மற்றும் வெய்யில் காலத்தில் மண்வளத்தைக் காக்கலாம். அகன்ற இலை மற்றும் புல்வகைக் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
பயறு வகைகள் சாகுபடி
பொதுவாக விவசாயிகள் சம்பா நெல் அறுவடைக்குப் பிறகு கோடையிலும் நெல்லையே பயிரிடுகின்றனர்.
சில விவசாயிகள் குறைந்த வயதுள்ள காய்கறிகள், மக்காச்சோளம், எள், நிலக்கடலை மற்றும் உளுந்தைப் பயிரிடுகின்றனர்.
ஆனால், சம்பா நெல்லுக்குப் பிறகு, குறைந்த வயதுள்ள பயறு வகைகளான, உளுந்து, பச்சைப்பயறு, துவரை, தட்டைப்பயறு, கடலை, பசுந்தாள் உரப் பயிர்கள், சோயா ஆகியவற்றைப் பயிரிட வேண்டும்.
இதனால், மண்வளம், அங்ககப் பொருள்களின் அளவு மற்றும் சத்துகள் மேம்படும்; களைகள் வெகுவாகக் குறையும்.
கோடைக்குப் பிறகு நிலத்திலுள்ள பயிர்களில் பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் குறைந்து நல்ல விளைச்சல் கிடைக்கும்.
முனைவர் பெ.கதிர்வேலன், முனைவர் எஸ்.ஆர்.வெங்கடாசலம், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர், சேலம் – 636 119.