இட்டேரி என்னும் காட்டுப் பாதை!

சுமார் நாற்து ஆண்டுகளுக்கு முன், இட்டேரிகளால் கிராமங்கள் இணைக்கப்பட்டு இருந்தன. இட்டேரி என்பது கொங்குச் சொல்லாகும்.

இருபுறமும் அடர்ந்த வேலி, நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டு வண்டிப் பாதை. இதுவே இட்டேரி.

இன்று விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வருவதால், இந்த வேலிகள் அழிந்து விட்டன.

வண்டித் தடங்கள் அனைத்தும் தார்ச் சாலைகளாக மாறி விட்டதால் இட்டேரிகள் மறைந்து விட்டன.

கொஞ்ச நஞ்சம் மிஞ்சியுள்ள விவசாய நிலங்களுக்கு, காக்கா, குருவிகள் கூடக் கூடு கட்ட முடியாத கம்பி வேலிகளை அமைக்கிறோம்.

எனவே, எண்ணற்ற உயிரினங்கள் வாழ இடமில்லாமல் போய் விட்டது.

இந்த இட்டேரி என்பது தனி உலகம். கள்ளி வகைகள், முள் செடிகளுக்கு இடையில், வேம்பு, மஞ்சக் கடம்பு, நுணா, புரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரை போன்ற செடி வகைகள்,

பிரண்டை, கோவை போன்ற கொடி வகைகள் மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புல் பூண்டுகள் நிறைந்திருக்கும்.

இந்தத் தாவரங்கள் உயிர் வேலியாய் இருந்து, விவசாய நிலங்களைக் காக்கும். இங்கே எண்ணற்ற உயிர்கள் வாழும். கரையான் புற்றுகள், எலி வளைகள் நிறைய இருக்கும்.

நிழலும் ஈரமும், இலைக் குப்பைகளும் எப்போதும் இருப்பதால், எண்ணற்ற பூச்சியினங்களும் இருக்கும்.

இவற்றை உணவாக்கிக் கொள்ள, வண்டுகள், நண்டுகள், பாம்புகள், பாப்பிராண்டிகள், உடும்புகள், ஓணான்கள்,

கோழிகள், குருவிகள், அலுங்குகள், ஆமைகள், பருந்துகள், நரிகள் போன்றவை இங்கே திரியும்.

மக்களுக்கு, கோவைப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப் பழம் போன்ற சுவையான கனிகளும்,

கோவைக்காய், களாக்காய், பிரண்டை என்று சமையலுக்கு உதவும் பொருள்களும், மூலிகைகளும் இங்கே இருக்கும்.

இன்று பணமழையைப் பொழியும் கண்வலிப் பூக்கள் மற்றும் காய்களை இந்த வேலியில் பார்க்கலாம்.

இந்த வேலியில் வாழ்ந்த குருவிகள், ஓணான்கள், தவளைகள், பயிர்களைச் சேதப்படுத்தும் பூச்சிகளை அழிக்கும்.

பாம்பு, ஆந்தை, பருந்துகளால், எலிகள், பறவைகள் பெருக்கம் கட்டுப்படும்.

பாம்புகளைப் பெருக விடாமல் மயில்கள் கட்டுப்படுத்தும்.

மயில்கள் பெருக்கத்தை, நரிகளும், காட்டுப் பூனைகளும் கட்டுப்படுத்தும்.

குள்ள நரிகள், மயில்களின் முட்டைகளை, குஞ்சுகளை உணவாகக் கொள்ளும்.

ஆனால், இப்போது குள்ள நரிகள் மிகவும் குறைந்து விட்டன. இதனால், மயில்கள் பெருகி விட்டன.

எனவே, பல்லுயிர்ப் பெருக்கம் சீராக இருக்க வேண்டுமெனில், இட்டேரிகள் எனப்படும் இயற்கை வேலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும்.


தொகுப்பு: பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!