கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020
அதிநவீன உத்திகளான தொலையுணர்வும் புவியியல் தகவல் அமைப்பும் இன்றைய வேளாண்மையில் பெரும்பங்கு வகிக்கின்றன. தொலையுணர்வு உத்தி என்பது, செயற்கைக்கோள், வான்வெளிப் படக்கருவி, ட்ரோன்ஸ் போன்றவற்றின் மூலம், பயிர்களைக் கண்காணித்தல் மற்றும் மேலாண்மை செய்யும் முறையாகும். புவியியல் தகவல் அமைப்பு என்பது, பயிர் விவரம், மண்வளம் போன்றவற்றை, வெளிசார்ந்த வரைபடமிடல் மற்றும் திட்டமிடலாகும்.
இயல்பாக்கப்பட்ட தாவர வேறுபாடு குறியீடு என்பது, அகச்சிவப்பு மற்றும் சிவப்புப் பட்டைகளின் வேறுபாட்டுக்கும் கூட்டுத் தொகைக்கும் இடையிலான விகிதமாகும். சரி செய்யப்பட்ட மண்-தாவர வேறுபாடு குறியீடு என்பது, இயல்பாக்கப்பட்ட தாவர வேறுபாடு குறியீட்டில், மண்ணின் ஒளித் தன்மையைச் சரி செய்யும் வகையில் அமையும். இலைப்பரப்புக் குறியீடு என்பது, பயிரின் இலைப்பரப்பின் விகிதமாகும். இது, பயிரின் வளர்ச்சி நிலை, மண்ணின் ஈரப்பதம் மற்றும் பயிரின் சத்துக்குத் தகுந்தாற் போல் வேறுபடும்.
LANDSAT 8/ MODIS போன்ற செயற்கைக்கோள்களில் இருந்து பெறப்பட்ட படத்திலிருந்து, இயல்பாக்கப்பட்ட தாவர வேறுபாடு குறியீடு, சரி செய்யப்பட்ட மண்-தாவர வேறுபாடு குறியீடு, இலைப்பரப்புக் குறியீடு ஆகியவற்றைக் கணக்கிடலாம். மேலும், பயிர்களின் நிலை மற்றும் நிலத்தின் பயன்களைக் கண்டறியலாம். சத்துக்குறை உள்ள பகுதிகளில் இயல்பாக்கப்பட்ட தாவர வேறுபாடு குறியீடு குறைவாக இருக்கும். நீர்வளப் பகுதிகள், குடியேற்றங்கள், பயிரிடப்பட்ட நிலங்கள், பயிரின் நிலை ஆகியவற்றைத் துல்லியமாக அறிவதில் தாவர வேறுபாடு குறியீடு முக்கியப் பங்கு வகிக்கிறது.
மேற்பரப்பு எதிரொளித் திறன் முக்கியமான காலநிலை மாறியாகும். இது புவியின் மேற்பரப்பில் இருந்து பிரதிபலிக்கும் சூரிய ஆற்றலின் விகிதமாகும். மேற்பரப்பு எதிரொளித்திறனும், இயல்பாக்கப்பட்ட தாவர வேறுபாடு குறியீடும், வெவ்வேறு நிலப் பயன்பாட்டைத் துல்லியமாகக் குறிப்பிட உதவுகின்றன.
உலகில் உணவு மற்றும் நார்ச்சத்து உற்பத்தியில் பாசனமுறை விவசாயம் பெரும்பங்கு வகிக்கிறது. வெளிசார்ந்த வழிமுறை மூலம், பயிர்களின் நீர்த் தேவையைப் படமிடல், பாசனத்தைத் திட்டமிடுவோர் மற்றும் நீர் மேலாளர்களுக்கு மிக முக்கியம். நிலத்தின் மேற்பரப்பு ஆற்றல் சமநிலை வழிமுறையைப் பயன்படுத்தி, வெளிசார்ந்த பயிர்நீர் ஆவியாதல் வரைபடங்களைப் பெறலாம். இ்தனால், பயிரின் குணகத்தைக் கண்டறியலாம். இந்தக் குணகம் மூலம் ஒரு பயிருக்கான மொத்த நீர்த்தேவையை, பகுதிக்கு ஏற்பக் கணக்கிடலாம்.
மண் மாதிரிகளின் புலத்திறன், தளர்வுறு திறன், மண்ணின் நீர் கொள்திறன் ஆகிய காரணிகளின் வெளிசார்ந்த வரைபடமிடல், மண் மற்றும் நீர் மேலாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. புவியியல் தகவல் அமைப்பின் முக்கியக் கூறான கிரிக்கிங் முறை, வெளிசார்ந்த வரைபடமிட உதவுகிறது. இதன் மூலம் பெறப்பட்ட மண்ணின் நீர் கொள்திறன் வரைபடத்தைக் கொண்டு, நெல், கரும்பு மற்றும் வாழைக்குத் தேவையான நீர் மற்றும் பாசன இடைவெளியை அறியலாம்.
தற்போது அதிகமாகப் பேசப்படும் காலநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளால், விவசாயமும் விவசாய நிலங்களும் தான் பாதிக்கப்படுகின்றன. புவியியல் தகவல் அமைப்பு, தொலையுணர்வு மற்றும் உலகளாவிய பொருத்துதல் அமைப்பின் (குளோபல் பொஷிஷனிங் சிஸ்டம்ஸ்) அதிநவீன உத்திகள் மூலம், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எளிதாக அறியலாம்.
காலநிலை மாற்றத்தின் முக்கிய விளைவாகிய கடல் நீர் உயர்வால் வேளாண்மையில் ஏற்படும் தாக்கங்களை அறிவதில், தொலையுணர்வு மற்றும் புவியியல் தகவல் அமைப்பின் பங்கு அவசியம். கடலோரங்களுக்குச் சென்று கடல் நீர் உயர்வை ஆய்வு செய்தல் கடினமானது. எனினும், கடல் நீர் உயர்வால் விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது முக்கியம். ஆகவே, இதற்குத் தொலையுணர்வு மற்றும் புவியியல் தகவல் அமைப்பு உதவுகிறது.
முனைவர் ஜெ.இராமச்சந்திரன்,
நம்மாழ்வார் வேளாண்மைக் கல்லூரி,
பேரையூர், இராமநாதபுரம்-623708.