பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

பருத்தி Cotton

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018

வெள்ளைத் தங்கம் எனப்படும் பருத்தியைப் பல்வேறு பூச்சிகள்  தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. உலகளவில் 1,326 வகையான பூச்சியினங்கள் பருத்தியைத் தாக்கி, சுமார் 60% மகசூலைக் குறைக்கின்றன. இந்தியாவில் மட்டும் 162 பூச்சி இனங்கள் பருத்தியைத் தாக்கி 10-50% சேதத்தை ஏற்படுத்துகின்றன.

தண்டுக் கூன்வண்டு 

புழுக்கள் தண்டின் உட்புறத்தைக் குழல் வடிவில் துளைத்து உண்பதால், சத்துப் பொருள்களைக் கடத்தக்கூடிய வாஸ்குலார் திசுக்கள் சேதமடைகின்றன. 15-25 நாட்கள் வயதுள்ள செடிகளைத் தாக்குவதால், செடிகள் முழுவதுமாக வாடி விடுகின்றன. நன்கு வளர்ந்த செடிகளின் தண்டுகளில் (தரைக்கு அருகில்) இந்தப் பூச்சிகளின் தாக்குதலால் வீக்கம் ஏற்படுகிறது. இந்த வீக்கமுள்ள பகுதி பலவீனமாக இருப்பதால் எளிதில் முறிந்து விடும்.

சாற்றை உறிஞ்சும் பூச்சிகள்

பருத்தியைத் தாக்கும் பூச்சிகளுள் சாற்றை உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, இலைப்பேன், தத்துப்பூச்சி, வெள்ளை ஈ ஆகியவை மிகவும் முக்கியமானவை. இவை பருத்தியின் இளம் பருவத்தில் தோன்றி, பருத்தி அறுவடை வரையில் சேதத்தை ஏற்படுத்துகின்றன.

அசுவினி

அசுவினி, இலைகளின் அடியில் மஞ்சள் நிறத்தில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். இலைச்சாற்றை உறிஞ்சுவதால் இலையின் ஓரங்கள் கீழ்நோக்கிச் சுருண்டு கீழ்நோக்கிய கிண்ணம் போலக் காணப்படும். அசுவினியால் தாக்கப்படும் பருத்திப் பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்து விடும். மேலும், தேன் போன்ற திரவத்தைக் கழிவுப் பொருளாக அசுவினி வெளியேற்றும். இந்தத் திரவத்தின் மீது வளரும் கரும்பூசணம் ஒளிச் சேர்க்கையைப் பாதிப்பதால் செடிகளின் வளர்ச்சியானது தடைபடும்.

இலைப்பேன்

இலைப்பேன், பருத்தியின் இளம் பருவத்தில் இலைகளின் அடியில் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதன் தாக்குதலால் நுண்ணிய வெண்புள்ளிகள் தோன்றும். மேலும், இலைகள் மேல்நோக்கி வளைந்து மேல்நோக்கிய கிண்ணம் போலக் காணப்படும். சேதம் அதிகமானால், இலைகள் மொரமொரப்பாக, வெளிர் பச்சையாக மாறும்.

வெள்ளை ஈ

வெள்ளை ஈக்கள், இலைகளின் அடியில் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால், இலைகள் வெளிர் பச்சையாகவும், பின்பு பழுப்பாகவும் மாறிக் காய்ந்து உதிர்ந்து விடும். மேலும், தேனைப் போன்ற கழிவுப் பொருளை இப்பூச்சிகள் வெளியேற்றும். இதில், கரும்பூசணம் வளர்வதால் ஒளிச்சேர்க்கை பாதிக்கும். இந்தக் கழிவு படிந்த பருத்தியின் நிறம் மாறுவதால், பஞ்சின் தரம் குறைந்து விடும்.

நாவாய்ப்பூச்சி

சிவப்பு நாவாய்ப் பூச்சி, பருத்திக்காய் வெடித்ததும் சாற்றை உறிஞ்சுவதால் பஞ்சின் நிறம் மாறிவிடும். மேலும், பூச்சிகள் தாக்கிய காய்களைப் பூசணங்களும் தாக்கிப் பஞ்சின் தரத்தைக் கெடுக்கின்றன.

மாவுப்பூச்சி

பஞ்சைப் போல் படர்ந்த முட்டைகளுடன் கூடிய இப்பூச்சிக் கூட்டங்கள், இலைகள், கிளைகள், இளந் தண்டுகள், பூ மொட்டுகள் மற்றும் இளம் காய்களில் பரவியிருக்கும். இலை மற்றும் தண்டின் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் சிறுத்து மடங்கி மஞ்சளாகி உதிர்ந்து விடும். தாக்கப்பட்ட செடியானது வளர்ச்சியின்றிக் குட்டையாகக் காணப்படும். இப்பூச்சிகள் வெளியேற்றும் தேன் போன்ற திரவத்தை உண்பதற்காகச் செடியின் மேல் எறும்புகள் ஊர்ந்து கொண்டிருக்கும். இந்த எறும்புகள், அடுத்தடுத்த இடங்களுக்கு மாவுப்பூச்சிகள் பரவுவதற்குப் பயன்படுவதோடு, அவற்றை ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகளிடம் இருந்தும் காக்கின்றன. மேலும், கேப்னோடியம் என்னும் பூசணம், இலையின் மேற்பரப்பில் படர்வதால், ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து விடும்.

காய்ப்புழு

புள்ளிக் காய்ப்புழு: இப்புழு இளம் செடிகளை, அதாவது, விதைத்த 35ஆம் நாளிலிருந்து தாக்கும். தாக்கப்பட்ட செடியின் குருத்துகள் வாடிவிடும். பூக்கள், சப்பைகள் உதிரும். காய்ப் பருவத்தில் தாக்குதல் இருந்தால் காய்கள் வெடிக்காது. அமெரிக்கன் காய்ப்புழு: விதைத்த 60ஆம் நாளிலிருந்து இப்புழு பருத்தியைத் தாக்கும். இதனால், பூமொட்டுகள், சப்பைகள், காய்கள் உதிர்ந்து விடும்.

இளஞ்சிவப்புக் காய்ப்புழு: இப்புழுவானது பருத்தியின் பின்பருவ இளம்  பூக்கள், சப்பைகள் மற்றும் காய்களைத் தாக்கும். பூக்களின் இதழ்கள் விரியாமல் ரோசாப்பூவைப் போலக் காணப்படும். பூக்களைப் பிரித்துப் பார்த்தால், மகரந்தம், சூல் பை போன்றவை தாக்கப்பட்டிருக்கும். காய்களில் தாக்குதலின் அறிகுறி தெரியாது. தாக்கப்பட்ட காய்களில் விதைகள் சேதமாகியிருக்கும். இப்புழு பல மாதங்கள் வரை உறங்கும்.

மேலாண்மை முறைகள்

உழவியல் முறைகள்: கோடையுழவு செய்வதால் கோடை மழையின் பயன் மண்ணுக்குக் கிடைக்கும்; களைகளும் பெருமளவில் கட்டுப்படும். மேலும், மண்ணுக்குள் இருக்கும் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகள், புழுக்கள், கூட்டுப்புழுக்கள் மற்றும் நூற்புழுக்கள் வெளியே கொணரப்பட்டு, சூரிய வெப்பத்தாலும், பறவைகளால் கொத்தித் தின்பதாலும் அழிக்கப்படும்.

இயற்கை உரமிடுதல்: தொழுவுரம், கம்போஸ்ட் போன்ற அங்கக எருக்களை அதிகமாக இட்டால், மண் மூலம் பரவும் வேர்ப்புழு, நூற்புழு மற்றும் நோய்களின் தாக்குதலைக் குறைக்கலாம்.

ஒருமித்த சாகுபடி: ஒரு கிராமம் அல்லது ஒரே தட்பவெப்பம் நிலவும் பகுதிகளில் இயன்ற வரையில், ஒரே வயதுள்ள இரகங்களைத் தேர்ந்தெடுத்து, அனைவரும் குறுகிய கால (10-15 நாட்கள்) இடைவெளியில் விதைத்துவிட வேண்டும். அமிலம் கொண்டு பஞ்சு நீக்கிய விதைகள் மற்றும் சான்று பெற்ற விதைகளை விதைப்பது மிகவும் நல்லது.

பயிர்ச் சுழற்சி

உழவியல் முறைகளில் ஒன்றான பயிர்ச் சுழற்சி, மண்ணின் வளத்தைக் காக்கும்; பூச்சிகளின் தோற்றம் மற்றும் பெருக்கத்தைப் பெருமளவில் தடுக்கும். எனவே, ஆண்டுக்கு இருமுறை பருத்தியைப் பயிரிடுதல், மறுதாம்பு விடுவதைத் தவிர்க்க வேண்டும். பருத்திக்கு அடுத்து, மக்காச்சோளம் அல்லது சோளத்தை விதைத்தால், வெள்ளை ஈ, காய்ப்புழு, மண்வழி பரவும் பூச்சிகள், நூற்புழுக்கள் மட்டுப்படும்.

சாம்பல் வண்டின் தாக்குதலைக் குறைக்கவும், நூற்புழுப் பாதிப்பைத் தவிர்க்கவும் பயிர்ச் சுழற்சி அவசியம். குறிப்பாகக் கத்தரியைப் பயிரிட்ட நிலத்தில் பருத்தியைத் தவிர்த்து விட்டால், வேர்ப்புழுத் தாக்குதலைக் குறைக்கலாம்.

தகுந்த இடைவெளி விடுதல்

நெருக்கமாகச் செடிகள் இருந்தால், காய்ப்புழுக்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே, செடிகளுக்கிடையே தகுந்த இடைவெளியைப் பராமரிக்க வேண்டும்.

பொறிப்பயிர் அல்லது கவர்ச்சிப் பயிர்

பருத்தி நிலத்தில் நடப்படும் ஆமணக்கால் ஈர்க்கப்படும் புரொட்டீனியா புழுக்களின் அந்துப் பூச்சிகள், அந்த ஆமணக்கு இலைகளில் முட்டைகளை இடும். அதனால், இவற்றை எளிதில் அடையாளம் கண்டு அழித்து விடலாம். பருத்திக்கு இடையில் துவரையைப் பயிரிட்டால், பச்சைக் காய்ப்புழுவின் அந்துப் பூச்சிகள் பருத்தியில் முட்டைகளை இடுவது குறையும். வரப்புகளில் தட்டைப் பயற்றை ஓரப்பயிராகப் பயிரிட்டால், நன்மை செய்யும் இரை விழுங்கிகளான பொறிவண்டு, கிரைசோபிட் மற்றும் சிர்பிட் பூச்சிகள் அதிகமாகி, சாற்றை உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்.

வெண்டை, துவரை, சம்பங்கி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பொறிப் பயிராக வளர்த்தால், பச்சைப் புழுவின் அந்துப் பூச்சிகள் பருத்தியில் அதிகளவில் முட்டையிடுவதைத் தவிர்க்கலாம். மேலும், பொறிப்பயிர்களில் காணப்படும் முட்டை மற்றும் புழுக்களை எளிதில் கவனித்து அழித்து விடலாம். உளுந்து மற்றும் மிளகாயை ஊடுபயிராக நட்டால், பருத்திக்காய்ப் புழுக்களின் தாக்குதலைக் குறைக்கலாம்.

பருத்தி நிலத்தைச் சுற்றி நடப்படும் மக்காச்சோளம், காய்ப்புழுக்களின் ஒட்டுண்ணிகளுக்கு விருந்தாக அமைந்து காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், சாற்றை உறிஞ்சும் பூச்சிகளுக்குத் தடுப்புப் பயிராகவும் அமையும்.

தூய்மையான சாகுபடி

பலவகையான களைகள், பருத்திப் பூச்சிகளுக்கு மாற்று உணவுச் செடிகளாக இருப்பதால், காலத்தே களையெடுத்து, தோட்டம் மற்றும் வரப்புகளைச் சுத்தமாக வைக்க வேண்டும். பருத்தி இனத்தைச் சார்ந்த வெண்டை, புளிச்சை போன்ற பயிர்களும், துத்தி, கண்டங்கத்தரி போன்ற களைச் செடிகளும் பருத்திக்கு அருகில் இருக்கக் கூடாது. தக்க தருணத்தில் களையெடுத்து, செடிகளைச் சுற்றி மண்ணை அணைக்க வேண்டும். இதனால், தண்டுக் கூன்வண்டின் சேதத்தை ஓரளவு தவிர்க்கலாம். சரியான நேரத்தில் அறுவடை செய்தல் மற்றும் பருத்திச் செடிகளை அகற்றுதல், இளஞ்சிவப்புக் காய்ப்புழுக்களின் தாக்குதலைக் குறைக்க உதவும்.

கைவினை முறைகள்

நன்கு வளர்ந்த புழுக்களைக் கையால் பொறுக்கி அழித்தால், பூச்சிக் கொல்லியைப் பயன்படுத்துதல் மற்றும் பூச்சிகளுக்கு உண்டாகும் பூச்சிக்கொல்லி எதிர்ப்புத் திறனைக் குறைப்பதோடு, பூச்சிகளின் பெருக்கத்தையும் வெகுவாகக் குறைக்கலாம். மேலும், உதிர்ந்த சப்பைகள், பூக்கள், காய்கள் மற்றும் அந்துப்பூச்சி முட்டைகளைப் பொறுக்கி அழிப்பதன் மூலமும், பூச்சிகளின் பெருக்கத்தைக் குறைக்க முடியும். தண்டுக் கூன்வண்டு மற்றும் வேர்ப்புழுவால் தாக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கி அழிக்க வேண்டும். 80-90 நாட்கள் வளர்ந்த பருத்திச் செடிகளின் நுனிகளைக் கிள்ளி விட்டால், பச்சைக் காய்ப்புழு முட்டையிடுதல் வெகுவாகக் குறையும்; பக்கக் கிளைகள் நீண்டு, பூக்கள் மற்றும் காய்கள் அதிகமாகி மகசூல் கூடும்.

குணாதிசய முறைகளில் பூச்சி மேலாண்மை

விளக்குப்பொறி: பூச்சிகளின் நடமாட்டத்தைக் கவனித்து, அவற்றின் தாக்குதலையும் பெருக்கத்தையும் அறிந்து, அவற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு விளக்குப்பொறி உதவுகிறது.

இனக்கவர்ச்சிப் பொறி: இயற்கையில் பெண் அந்துப்பூச்சிகள் ஒருவித இரசாயனப் பொருளைச் சுரந்து அதைக் காற்றுடன் கலக்கவிட்டு, ஆண் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து இனச்சேர்க்கை புரியும். இந்த இரசாயனப் பொருள் செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு, சிமிழ் போன்ற குப்பிகளில் அடைத்து வைக்கப்படுகிறது.

இந்த இனக்கவர்ச்சிப் பொறியைக் கொண்டு, பருத்தியைத் தாக்கும், பச்சைக் காய்ப்புழு, இளஞ்சிவப்புக் காய்ப்புழு, புள்ளிக் காய்ப்புழு ஆகியவற்றின் தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கவனிக்கவும், ஆண் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழித்து இவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் முடியும். ஒவ்வொரு பூச்சிக்கும் உரிய இனக்கவர்ச்சிப் பொறிகளை ஏக்கருக்கு ஐந்து என்னுமளவில் வைக்க வேண்டும்.

மஞ்சள் ஒட்டுப்பொறி

மஞ்சள் வண்ணம் பூசப்பட்ட தகர டப்பாவின் மேல் ஆமணக்கு எண்ணெய் அல்லது கிரீஸைத் தடவி, ஏக்கருக்கு 10 என்னுமளவில் வைத்து, வெள்ளை ஈ மற்றும் தத்துப் பூச்சியின் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

உயிரியல் முறை பூச்சி மேலாண்மை

டிரைக்கோகிரம்மா என்னும் முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு ஒரு இலட்சம்  என்னுமளவில் வெளியிட்டு, காய்ப்புழுக்களின் தாக்குதலைக் குறைக்கலாம்.  கிரைசோபா என்னும் ஒட்டுண்ணியைச் செடிக்கு 1-2 என்னுமளவில் விட்டால், அசுவினி மற்றும் தத்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, பச்சைக் காய்ப்புழுக்களையும் மட்டுப்படுத்தலாம். பச்சைக் காய்ப்புழுக்களை இளம் பருவத்திலேயே அழிக்க, என்.பி.வி. நச்சுயிரியை ஒரு ஏக்கருக்கு 200 புழுச் சமன் என்னுமளவில், சர்க்கரைக் கரைசலில் கலந்து நான்கு முறை, 5-10 நாட்கள் இடைவெளியில் மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

புரொட்டீனியா புழுக்களைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு என்.பி.வி. 100 புழுச் சமன் கலவையைத் தெளிக்க வேண்டும். பறவைகள் அமர்ந்து புழுக்களைப் பிடித்துத் தின்பதற்கு வசதியாக ஆங்காங்கே பறவை இருக்கைகளை நட்டு வைக்க வேண்டும். மாவுப்பூச்சிகளை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த, அசிரோபேகஸ் பப்பாயே என்னும் ஒட்டுண்ணியை, கிராமத்திற்கு 100 பூச்சிகள் என்னுமளவில் விடவேண்டும்.

ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கையைப் பெருக்கவும், மாவுப்பூச்சியின் தாக்குதல் தீவிரமாகாமல் தடுக்கவும், இரசாயனப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கிரிப்டோலேமஸ் பொறிவண்டுப் புழுக்கள், மாவுப்பூச்சிகளை உண்டு அழிக்கின்றன. இந்த இரை விழுங்கியைப் பயன்படுத்தி மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

தாவரப் பூச்சிக் கொல்லிகள்

வேப்பம் புண்ணாக்கை அடியுரமாக, கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்கு 100 கிலோ இட்டால் நூற்புழுக்கள், தண்டுக் கூன்வண்டு மற்றும் மண்ணிலுள்ள மற்ற பூச்சிகளின் தாக்கத்தைக் குறைக்கலாம். மேலும், 2% வேப்ப எண்ணெய்க் கரைசலை 20 மற்றும் 40 நாளில் செடிகளின் தூர்ப் பகுதியில் ஊற்றினால், தண்டுக் கூன்வண்டின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

வேப்ப எண்ணெய் 0.5% கரைசல் அல்லது வேப்பம் பருப்புச்சாறு 3-5% அளவில் தெளித்தால், வெள்ளை ஈக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். வேப்ப எண்ணெய்யைத் தெளித்தால் 40-50% வெள்ளை ஈக்களின் முட்டைகள் அழிக்கப்படும். புரொட்டீனியாப் பூச்சியின் புழுப்பருவம், வேப்பெண்ணெய் மற்றும் வேப்பம் பருப்புச்சாற்றைத் தெளித்தால் கட்டுப்படும். அமெரிக்கன் காய்ப்புழுவின் அந்துப்பூச்சி முட்டையிடுவதைத் தவிர்க்க, வேப்பங்கொட்டைச் சாறு 5% அல்லது வேப்பெண்ணெய் 0.5% அல்லது புங்க எண்ணெய் 0.2% கரைசலைப் பயன்படுத்த வேண்டும்.

மாவுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, 2% வேப்பெண்ணெய்க் கரைசல் அல்லது 5% வேப்பங்கொட்டைக் கரைசல் அல்லது மீன் எண்ணெய் சோப் ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் என்னுமளவில் கலந்து 15-20 நாட்களுக்கு ஒருமுறை தாக்குதலின் அளவைப் பொறுத்துத் தெளிக்க வேண்டும்.


பருத்தி RAJA RAMESH N

முனைவர் இராஜா.ரமேஷ்,

உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம்,

நீடாமங்கலம்-614404, திருவாரூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading