கால்நடைகளைத் தாக்கும் புருசெல்லோசிஸ்!

brucellosis

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020

புருசெல்லோசிஸ் என்பது புருசெல்லா என்னும் நுண்ணுயிரியால் உருவாகி, ஆடு, மாடு மற்றும் பன்றிகளைத் தாக்கும் முக்கிய நோயாகும்.

நோய்ப் பாதிப்பு

இந்நோய் தாக்கினால், கால்நடைகளில் பாலுற்பத்திக் குறைவு, கன்று வீச்சு, நஞ்சுக்கொடி தங்குதல், சினைப் பிடிக்காமை போன்ற சிக்கல்கள் ஏற்படும். எனவே, மிகுந்த பொருளாதார இழப்பு உண்டாகும். இந்நோய் வேகமாகப் பரவுவதாலும், மனிதர்களையும் பாதிப்பதாலும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

நோய் அறிகுறிகள்

கறவை மாடுகளில், கருத்தரித்த 5-8 மாதக் காலத்தில் கன்று வீச்சு ஏற்படும். கன்று வீச்சு ஏற்பட்ட மாடுகளில் நஞ்சுக்கொடி கருப்பையில் தங்கும். மாடுகளின் கருப்பையிலிருந்து சீழ் வடியும். கருச்சிதைவுற்ற கால்நடைகள் சினைக்கு வரக் காலதாமதம் ஆகும். கால் மூட்டுகளில் வீக்கம் காணப்படும்.

புருசெல்லோ நோய் தாக்கிய மாடுகளில் பொதுவாக ஒருமுறை மட்டுமே கருச்சிதைவு ஏற்படும். அடுத்துப் பிறக்கும் கன்றுகள் மிகவும் நலிந்தும் நலங் குன்றியும் பிறக்கும். பாதிக்கப்பட்ட மாடுகளில் பிறந்த கன்றுகள் நலமாக இருப்பதைப் போலத் தெரிந்தாலும், இவற்றில் புருசெல்லோ நோய்த் தொற்றுகள் மறைந்திருக்கும். இக்கன்றுகள் சினையாகும் போது, புருசெல்லோ நோய் வெளிப்பட்டால் கருக்கலைப்பு ஏற்படலாம்.  

பாதிக்கப்பட்ட கால்நடைகள் வெளிப்பார்வைக்கு நன்றாக இருந்தாலும், இவை, புருசெல்லாக் கிருமிகளை, பால், கருச்சிதைவுற்ற கன்றுகள், கருப்பை உறை, பிறப்புறுப்பில் இருந்து வடியும் நீர் மூலம், நோய்க் கிருமிகளைத் தொடர்ந்து வெளியேற்றிக் கொண்டிருக்கும்.

நோயின் அடைக்காலம்

அடைக்காலம் என்பது, கால்நடைகளில் நோய்க்காரணி நுழைவதற்கும், நோய் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதற்கும் இடையிலுள்ள காலமாகும். புருசெல்லோ நோயின் அடைக்காலம் இரண்டு வாரத்தில் தொடங்கி ஓராண்டு வரை இருக்கக் கூடும். கருச்சிதைவு ஏற்பட்ட கால்நடைகளில் இந்த அடைக்காலம் குறைந்தது முப்பது நாட்களாகும்.

நோய்த்தடுப்பு முறைகள்

பண்ணையில் சுகாதார நிர்வாகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆண்டுக்கு இருமுறை கால்நடைகளில் இரத்தச் சோதனையைச் செய்ய வேண்டும். நோயுற்ற மாடுகளைப் பண்ணையிலிருந்து நீக்கிவிட வேண்டும். புருசெல்லோ சோதனையைச் செய்து, நோயில்லை என்பதை உறுதி செய்த பிறகே புதிய கால்நடைகளைப் பண்ணையில் சேர்க்க வேண்டும். 4-8 மாதக் கன்றுகளுக்கு, புருசெல்லோ நோய்த் தடுப்பூசியைப் போட வேண்டும்.

நோயுற்ற கால்நடைகளைத் தனிமைப்படுத்த வேண்டும். நோயற்ற இடத்துக்கு மாற்றக் கூடாது. கருச்சிதைவுற்ற கன்று மற்றும் நஞ்சுக்கொடியை எரிக்க வேண்டும் அல்லது புதைக்க வேண்டும். கொட்டகையில் கிருமி நாசினியைத் தெளிக்க வேண்டும். நோயுற்ற கால்நடைகளை இனவிருத்திக்குப் பயன்படுத்தக் கூடாது.

விவசாயிகள் இந்நோய் தொடர்பான அறிகுறிகளை அறிந்து, நோய் தாக்கும் சமயத்தில் உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி, தகுந்த சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகளைக் கையாள வேண்டும்.


முனைவர் வி.செ.வடிவு,

முனைவர் ஆ.கிருபாகரன், முனைவர் இரா.யசோதை, கால்நடை மருத்துவப்

பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும்  ஆராய்ச்சி மையம், ஈரோடு-638004.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading