கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014
இந்த பூமியில் தாவரங்கள், விலங்குகள், மனிதன் என அனைத்து உயிர்களும் ஒரு குழுவாக இயங்குகின்றன. இதைத் தான் இயற்கையின் சமநிலை என்று கூறுகிறோம். இந்த இயற்கைச் சம நிலையில், தங்களின் உணவுத் தேவைக்காக ஜீவராசிகள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்தே இயங்குகின்றன. உதாரணமாக, ஒரு செல் உயிரினமான பாக்டீரியாக்களைச் சிறுசிறு பூச்சிகள் உண்ணுகின்றன. அந்தப் பூச்சிகளைத் தவளை உண்ணுகிறது. அந்தத் தவளைகளைப் பாம்பு உண்ணுகிறது. அந்தப் பாம்பைக் கழுகு உண்ணுகிறது.
அந்தக் கழுகு இறந்து சிதிலமடையும் போது அதை பாக்டீரியாக்கள் உண்ணுகின்றன. அதைப் போலத் தான் மனிதனின் உணவுச் சங்கிலியும் ஒன்றைச் ஒன்று சார்ந்தே இருக்கிறது. மனிதன் பெருமளவு உண்ணுவது உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகளைத் தான். அந்த உணவு தானிய உற்பத்திக்குப் பெருமளவு தேவை தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை. தாவரங்கள் இரு வகையான மகரந்தச் சேர்க்கையைக் கொண்டுள்ளன. அவை, தன் மகரந்தச் சேர்க்கை மற்றும் அயல் மகரந்தச் சேர்க்கை. பெரும்பாலான தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வது மகரந்தச் சேர்க்கை வழியாகத் தான்.
இரண்டு வகை மகரந்தச் சேர்க்கையும் தானாக நடைபெறாது, அந்த மகரந்தச் சேர்க்கை நடைபெறச் சில காரணிகள் தேவை. அரிசி, கோதுமை போன்ற புல்வகைத் தாவரங்களுக்கு, அதாவது, தானிய விளைச்சல் தரும் தாவரங்களுக்குக் காற்று தான் காரணி. இவற்றின் பூக்கள் மிகச் சிறிதாய், கண்களுக்குப் புலப்படாத அளவில் இருக்கும். மென்மையாகக் காற்று வீசும் போது, பூக்களின் மகரந்தம் அடித்துச் செல்லப்பட்டு அடுத்த தாவரத்தில் படியும்.
இப்படி, இந்த வகைத் தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை இயல்பாக நடைபெறும். ஆனால், வேறு பல தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறப் பூச்சிகளின் உதவி தேவை. தேனீ, வண்டு, பட்டாம்பூச்சி எனப் பல்வேறு வகைப் பூச்சிகள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன.பூவின் தேனைக் குடிக்க வரும் தேனீயின் கால்களில் மகரந்தம் ஒட்டிக் கொள்ளும்.
அந்த மகரந்தத்துடன் பறக்கும் தேனீ மற்றொரு பூவில் அமரும் போது, அந்தப் பூவில் அந்த மகரந்தம் ஒட்டிக் கொள்ளும். தேனீக்குத் தெரியாமல் இயற்கையாய் நடக்கும் நிகழ்வு இது. அயல் மகரந்தச் சேர்க்கைக்கும் தன்மகரந்தச் சேர்க்கைக்கும் பூச்சியினங்கள் அவசியம். பெருமளவு தானியப் பயிர்களுக்குப் பூச்சிகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை அவசியமில்லை என்றாலும், பல்வேறு காய் கனிகளைப் பயிர் செய்யத் தேனீக்களின் உதவி அவசியம்.
பூசணி, பரங்கி, வெள்ளரி எனப் பல்வேறு காய்கனித் தாவரங்கள் விளைவதற்குப் பூச்சிகள் அவசியம். அளவுக்கு அதிகமாகப் பூச்சி மருந்துகளைத் தெளிப்பதால், மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சியினங்கள் அழிந்து, இந்தியாவில் விளைச்சல் குறைந்துள்ளது என, பார்த்திபோ போஸ் அவர்களின் ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் பெருமளவு தேன் இயற்கை முறையிலேயே கிடைக்கிறது. ஆனால், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தேனீ வளர்ப்பு என்பது செயற்கையாக நடைபெறுகிறது.
செயற்கையாக வளர்க்கப்படும் தேனீக்கள் அருகிலுள்ள வயல் வெளிகளில் தேனெடுக்கப் போகும் போது, மகரந்தச் சேர்க்கைக்கு உதவி, விளைச்சலைப் பெருக்கி வந்தன. சமீபத்தில் அங்கே பெருமளவு செயற்கைத் தேன் கூடுகள் பாதிக்கப்பட்டு, திடீர் திடீரெனத் தேனீக்கள் மடிந்தன. இதன் தொடர்ச்சியாக அங்கே சமீப ஆண்டுகளில் மகசூல் பெருமளவில் குறைந்துள்ளது.
இதனால், தேனீக்கள் திடீரென அழிந்ததற்கான காரணத்தை ஆராய்ந்தார்கள். அமெரிக்க விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை மிக அதிகமாகத் தெளிப்பதால், 40-50% தேன் கூடுகள் அழிந்து விடுகின்றன என அறிந்தார்கள். இந்த இழப்புகளுக்குக் காரணம் -நியோனிகொட்டிநாய்ட் neonicotinoids என்னும் புதிய வகைப் பூச்சிக்கொல்லி மருந்து தான். இந்தப் பூச்சிக்கொல்லி மருந்து, செடியின் விதையிலேயே செலுத்தப்படுகிறது.
ஆகையால், இத்தகைய செடிகளில் தேனெடுக்க வரும் பூச்சிகள் அழிந்து விடுகின்றன. இந்தப் பூச்சிகளில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்களும் அடங்கும். அந்தச் செடிகளில் இருக்கும் இரசாயனம் தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதிப்பதால், தேன் கூட்டுக்குப் போகும் வழியை மறந்து திசை மாறிப் போகின்றன. திசைமாறிப் போன இந்தத் தேனீக்கள் மடிவதோடு பிரச்சினை முடியவில்லை.
இந்தத் தேனீக்கள் கொண்டு வரும் தேனுக்காகக் காத்திருக்கும் இராணித் தேனீயும் உணவு இல்லாமல் மடிந்து விடும். இராணித்தேனீ இறந்ததும் அந்தக் கூட்டுக்குத் தேவையான புதிய வேலைக்காரத் தேனீக்கள் உருவாக முடியாததால், அந்தத் தேன்கூடு முற்றிலும் அழிந்து விடும். தேனீக்கள் மாண்டு போவதால் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறாமல் போகிறது. இதனால், பழம், காய்கறி மகசூல் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. தேனீக்கள் கூட்டம் கூட்டமாகச் செத்து மடிவதால், தேனுக்கும் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
பூச்சி மருந்து நிறுவனங்கள், இதற்கு எங்களது தயாரிப்பு காரணமில்லை எனச் சப்பைக்கட்டுக் கட்டினாலும் காரணம் இதுதானே? பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையாய் நடந்த ஒரு நிகழ்வை, திடீரென்று நமது பேராசைக்காக மாற்றி அமைத்தால், இயற்கை அழியாமல் அள்ளியா கொடுக்கும்? இந்தியாவிலும் கடந்த சில ஆண்டுகளாக தேனீக்கள் தொடர்பான ஆராய்ச்சி நடைபெற்று வந்தது. அந்த ஆராய்ச்சியின் முடிவு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
தாவரங்களில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள் இறப்பதால், தேசிய அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விளைச்சல் வெகுவாகப் பாதிக்கப்படுவதாக அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது. விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். உலகக் காய்கனி உற்பத்தியில் 14 சதவீதத்தை இந்தியா உற்பத்தி செய்கிறது. காய்கனி உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சியினங்கள், தேனீக்கள் அழிந்தால் இந்திய விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படும். உணவு உற்பத்திக் குறைந்தால் பஞ்சம் ஏற்படும். உணவு உற்பத்திக்குத் தேவையான மகரந்தச் சேர்க்கைக்குத் தேனீ இனம் மிகமிக அவசியம். அப்படிப்பட்ட தேனீ இனம் பூமியிலிருந்து என்று முற்றாக அழிகிறதோ, அந்த நாள் முதல் பத்து ஆண்டுக்குள் மனித இனம் உணவு கிடைக்காமல் முற்றிலும் அழிந்து விடும்.
மனிதனின் உணவுச் சங்கிலியில் தேனீக்களால் கிடைக்கும் பலன் அளவிட முடியாதது. அந்த உணவுச் சங்கிலியில் ஒரு கண்ணி விட்டுப் போனால் ஒட்டுமொத்தச் சங்கிலி அமைப்புமே அறுபட்டுப் போகும். அதனால், இயற்கை விவசாயத்துக்கு மாறா விட்டால் இழப்பு நமக்குத் தான். இந்த பூமி மனிதனுக்காக மட்டும் படைக்கப்படவில்லை. அனைத்து உயிர்களுக்காவும் படைக்கப்பட்டது என்பதை மனிதன் நினைவில் கொள்ள வேண்டும்.
தற்பெருமைக்காகத் தன் தீவில் இருந்த கடைசி மரத்தையும் வெட்டி விட்டு உணவு கிடைக்காமல் அழிந்து போன ஈஸ்டர் தீவு மக்களின் வரலாற்றை ஒட்டுமொத்தப் புவிக்குமான பாடமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தவிர்ப்போம்! தேனீக்களைக் காப்போம்!
நம்பிக்கை ராஜ்