முக்கனிகளில் முதலில் நிற்பது மா. இந்த மாவில் சத்துகள் மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைய உள்ளன.
எனவே, பெரும்பாலான மக்கள் மா மற்றும் மா சார்ந்த பொருள்களை விரும்பி உண்கின்றனர்.
சத்தும் சுவையும் மிகுந்த மாம்பழ உற்பத்தியில் விவசாயிகள் பல்வேறு இடர்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.
குறிப்பாக, நோய்கள், பூச்சித் தாக்குதல் ஒருபுறம் இருக்க, மாம் பிஞ்சுகள் மரத்திலிருந்து அதிகமாக உதிர்வது விவசாயிகளைக் கவலைப்பட வைக்கும் நிகழ்வாகும்.
இது, மகசூல் மற்றும் வருவாய் இழப்புக்கு முக்கியக் காரணியாக உள்ளது.
இந்நிலையில், கீழே உதிரும் மாம் பிஞ்சுகளை பொடியாக மாற்றுவது, விவசாயிகளுக்குக் கை கொடுப்பதாக இருக்கும்.
நூறு கிராம் மாங்காய்ப் பொடியில் உள்ள சத்துகள்
ஈரப்பதம்: 6.8 கிராம்,
சக்தி/ஆற்றல்: 337 கி.கலோரி,
கொழுப்பு: 7.8 கிராம்,
புரதம்: 2.8 கிராம்,
மாவுச்சத்து: 64 கிராம்,
கால்சியம்: 180 மி.கி.,
பாஸ்பரஸ்: 16 மி.கி.,
இரும்பு: 45.2 மி.கி.,
தாதுகள்: 4.9 கிராம்,
நார்ச்சத்து: 13.7 கிராம்.
உணவில் சுவையைக் கூட்டிடச் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்கள்; காய்ந்த வேர்கள், மரப் பட்டைகள், விதைகள் ஆகியவற்றின் பொடி வடிவமாகும்.
இந்த நறுமணப் பொருள்கள், செரிமான நொதிகள், உமிழ்நீர் மற்றும் அமிலச் சுரப்பைத் தூண்டும்.
மாங்காய்ப் பொடியும் நறுமணப் பொருள்களில் ஒன்றாகும்.
இது, தமிழில் மாங்காய்ப் பொடி என்றும், ஹிந்தியில் ஆம்சூர் என்றும் அழைக்கப் படுகிறது.
வட மாநில மக்கள் புளிப்புச் சுவைக்காக, மாம்பொடியைச் சமையலில் சேர்க்கின்றனர்.
மாங்காய்ப் பொடித் தயாரிப்பு
மாம்பிஞ்சுகளை, ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் உப்பு மற்றும் சிறிதளவு மஞ்சள் வீதம் கலந்த கலவையில் பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு நல்ல நீரில் கழுவ வேண்டும். பிறகு, 0.3-0.5 செ.மீ. துண்டுகளாக நறுக்க வேண்டும்.
அடுத்து, ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ மாங்காய்க்கு 20 கிராம் வீதம் உப்பிட்டு எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இது, இயற்கை பாதுகாப்பானாகப் பயன்படுகிறது. பிறகு, மின் உலர்த்தியில் 16 மணி நேரம் காய வைக்க வேண்டும்.
இந்த வசதி இல்லாத நிலையில், மாம் பிஞ்சுகளை வெள்ளைத் துணியால் இலேசாக மூடி வெய்யிலில் உலர்த்தலாம்.
பிறகு, பொடியாக அரைத்துக் காற்றுப் புகாத கலனில் சேமித்து வைக்க வேண்டும். இது, 9-12 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
இது மிகவும் எளிய முறையில், குறுகிய காலத்தில் செய்து முடிக்கும் உத்தியாகும்.
ஒரு கிலோ மாங்காய்ப் பொடியைத் தயாரிக்க, 8-10 கிலோ மாங்காய் தேவைப்படும். ஒரு கிலோ பொடியை 300-500 ரூபாய்க்கு விற்கலாம்.
பயன்படுத்தும் முறைகள்
அனைத்துச் சமையலிலும் புளிப்புச் சுவைக்காக இதைப் பயன்படுத்தலாம்.
மருத்துவக் காரணங்களால் தக்காளியைச் சேர்த்துக் கொள்ள முடியாத போது, மாங்காய்ப் பொடியைப் பயன்படுத்தலாம்.
சாம்பார், இரசம், காய்கறிக் கூட்டு, பொரியல், மாசாலா பொடிகள் மற்றும் அடுமனைப் பொருள்களில் சேர்க்கும் போது, அந்தப் பொருள்களின் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.
நன்மைகள்
எளிதில் உணவைக் கொடாமல் பாதுகாக்கும். உணவு உடலில் நன்கு செரிக்க உதவும்.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.
இதிலுள்ள ஏ, சி வைட்டமின்கள், சருமச் செல்களின் மறு உற்பத்திக்கு, சருமப் பராமரிப்புக்கு உதவும்.
வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் நிறைவாக இருப்பதால், கண்களுக்கு மிகவும் நல்லது.
ம.இரம்யா சிவசெல்வி, மனையியல் தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம், தேனி மாவட்டம்.