கால்நடைத் தீவனப் பயிர்களில் சோளம் முக்கியம் வாய்ந்த தீவனப் பயிராகும்.
தமிழ்நாட்டில் உள்ள தீவனச்சோள வகைகளில் கோ.எஃப்.எஸ். தீவனச்சோளம் தனிச் சிறப்பு மிக்கது.
ஏனெனில், இது இறவை, மானாவாரி ஆகிய இரண்டு முறைகளிலும் பயிரிட ஏற்றது.
இறவையில் இந்தத் தீவனச் சோளத்தைப் பயிரிட்டால் எட்டு முதல் பத்து அறுவடைகள் வரை செய்யலாம். ஏக்கருக்கு ஆண்டுக்கு 50-60 டன் பசுந்தீவனம் கிடைக்கும்.
இப்பயிர், மானாவாரியில் குறைந்த மழையில் வறட்சியைத் தாங்கி வளர்ந்து, குறுகிய காலத்தில், சத்து மற்றும் சுவையுள்ள பசுந்தீவனத்தைத் தரும்.
இதைப் பதப்படுத்தி வைத்தும் தீவனமாகக் கால்நடைகளுக்குத் தரலாம்.
இந்தத் தீவனச் சோளம் எல்லா மண்ணிலும் நன்கு வளரும். இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.
மானாவாரியில், தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் விதைக்கலாம்.
விதைப்புக்கு முன் நிலத்தை 2-3 முறை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்கு 10 டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும்.
ஆறு மீட்டர் நீளத்தில் பார்களை அமைத்து, அவற்றின் இருபுறமும் 40-50 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.
சதுரப் பாத்திகளை அமைத்துக் கோடுகளைக் கிழித்தும் விதைகளை விதைக்கலாம்.
மானாவாரியில் நல்ல ஈரம் இருக்கும் போது நேரடியாக விதைக்கலாம். ஏக்கருக்கு ஐந்து கிலோ விதைகள் தேவைப்படும்.
விதைத்து 25 நாட்கள் கழித்து, ஏக்கருக்கு 25 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.
ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் 30 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.
விதைத்ததும் பாசனம் செய்ய வேண்டும். அடுத்து மூன்று நாட்களில் பாசனம் செய்ய வேண்டும்.
பிறகு, மண்வாகு, மழையின் நிலை போன்றவற்றைப் பொறுத்து, 8-10 நாட்கள் இடைவெளியில் பாசனம் தர வேண்டும்.
மானாவாரியில் 8-10 நாட்கள் இடைவெளியில் 5-6 நாட்கள் மழை பெய்தாலே போதும்.
முதல் அறுவடையை 60-65 நாட்களில் செய்யலாம். அடுத்தடுத்த அறுவடைகளை 55-60 நாட்கள் இடைவெளியில் செய்யலாம்.
முதல் அறுவடையில், ஏக்கருக்கு 8 டன் தீவனம் கிடைக்கும். மற்ற அறுவடைகளில் 7 டன் வீதம் தீவனம் கிடைக்கும்.
கறவை மாடுகளுக்குத் தினமும் 20 கிலோ வீதமும், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு 3-5 கிலோ வீதமும் கொடுக்கலாம்.
இளம் பயிரில் ஹைட்ரோ சயனிக் ஆசிட் என்னும் நச்சுப் பொருள் இருப்பதால், கதிர் வந்த பிறகு தான் அறுவடை செய்து கொடுக்க வேண்டும்.
இந்தத் தீவனச்சோள விதைகளுக்கு நல்ல விற்பனை வாய்ப்பு இருப்பதால், விதைகள் உற்பத்தி செய்தும் இலாபம் பெறலாம்.
முனைவர் மு.ச.முருகன், உதவிப் பேராசிரியர், கால்நடைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி அற்றும் பயிற்சி மையம், இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.