சொட்டுநீர்ப் பாசன முறையைப் பரவலாகக் கையாளும் விவசாயிகளில் பலர், பாசன நீருடன் உரங்களைக் கலந்து விடலாம் என்பதைப் பற்றி இன்னும் அறியவில்லை.
இன்னமும் கூட உரங்களை நேரடியாகப் பயிர்களுக்கு இட்டு, சொட்டுநீர்ப் பாசனம் செய்வதும்; உரங்களை மணலில் கலந்து கையால் வீசுவதும்; மழை பெய்யும் முன்பே நிலத்தில் உரத்தைப் பரப்பி வைத்து வேடிக்கை பார்ப்பதும் முற்றிலும் அறியாமை ஆகும்.
சாகுபடி செய்யும் பயிரின் தேவையைத் துல்லியமாகக் கண்டறிந்து, தேவையான நீரைத் தினமும் தரலாம். இந்த நீருடன் இட வேண்டிய கரையும் உரங்களைக் கலந்து விடலாம்.
இந்த உரங்களைப் பற்றிய அட்டவணையும் உள்ளது. அதனைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் வெளியிட்டு உள்ளது. ஆனாலும், இதைப் பற்றி இன்னமும் அறியாத நமது விவசாயிகள், பணத்தை அள்ளி வீசி அதிக உரமிட்டு அல்லல் படுகிறார்கள்.
பொதுவாக எந்த ஒரு தாவரமும் தனது அன்றாடத் தேவைக்கு மேல் ஒரு சொட்டு நீரைக்கூட எடுப்பதில்லை. அதைப் போல, தனது தேவைக்கு மேல், எந்த உரத்தையும், ஒரு கிராம் கூடக் கூடுதலாக எடுத்து வைத்துக் கொள்ளாது.
குறைந்தளவு யூரியாவை அல்லது வேப்பம் புண்ணாக்குச் சத்தை நேரடியாக உண்ணாது. எந்த ஒரு உரமும் நீரில் கரைந்து திரவமாக வேண்டும். அதை அருகிலுள்ள சல்லி வேர்கள் உறிஞ்சிப் பயிருக்குத் தர வேண்டும்.
அப்போது தான் அது பயிருக்குப் போய்ச் சேரும். அளவுக்கு மீறி உணவை, நீரை உண்டு விட்டு அல்லல் படும் குணம், மனிதனிடம் மட்டும் தான் உள்ளது.
பயிருக்குத் தேவையான உரத்தை அளித்திட, சொட்டுநீர்ப் பாசன அமைப்பில், வெஞ்சுரி என்னும் உறிஞ்சு குழல் உள்ளது. அது சத்துகளை உறிஞ்ச உதவுகிறது.
நீரில் கரையும் சத்துகளைக் கொண்ட உரக் கரைசலை எடுத்துச் செல்ல உதவுகிறது. இதற்குக் கரையும் உரப்பாசனம் என்று பெயர்.
இந்தக் கரையும் உரப்பாசன முறையில் உரம் வீணாவது இல்லை. வெகு எளிதில் உரத்தை இட மாற்றம் செய்திடப் பாசனநீர்க் குழாய்கள் உள்ளன.
கரையும் உரப்பாசனம் செய்ய அதிக ஆட்கள் தேவை யில்லை. நேரடியாகப் பயிரின் வேர்ப் பகுதியில் திரவ நிலையில் உரத்தைச் சரியாக இடுவதால், உர விரயம் வெகுவாகக் குறைகிறது.
பயிரின் வளர்ச்சிப் பருவத்தில் அவ்வப்போது எல்லாப் பயிர்களுக்கும் ஒரே அளவில் உரம் கிடைப்பதால், பூச்சி, நோய்த் தாக்கம் இல்லாத சூழலில், பயிர்கள் சீராக வளர்ந்து சிறந்த மகசூலைத் தருகின்றன.
இதற்குக் கடினமான உபகரணம் எதுவும் தேவை யில்லை. மேலும், பயிருக்கு உரம் சென்றடைவதைக் கவனிப்பதும் எளிது.
பயிர்கள் வாரியாக, கரையும் உரப்பாசன அட்டவணை உள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் இந்த உத்தியைத் தவறாமல் கடைப்பிடித்து விளைச்சலைப் பெருக்கி வாழ்க்கையில் உயருங்கள்.
பொறிஞர் எம்.இராஜமோகன், தலைமைப் பொறியாளர், நீர்வள ஆதாரத்துறை மற்றும் தலைமை இயக்குநர், பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையம், துவாக்குடி, திருச்சி – 620 015.