திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள், ப.ஓவியா, ச.பூஜா, ப.பூஜா, பி.பிரவீனா, பா.பவித்ரா, த.பவித்திரா ஆகியோர் ஊரகத் தோட்டக்கலைப் பணி அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்காக விளை நிலங்களுக்குச் செல்லும் இவர்கள், அங்குள்ள விவசாயிகளுக்கு நவீன சாகுபடி உத்திகளைக் கொண்டு சேர்க்கின்றனர். செயல்முறை விளக்கமும் செய்து காட்டுகின்றனர்.
இவ்வகையில், தஞ்சை மாவட்டம், பொன்னவராயன் கோட்டையில், வாழைக் கன்றுகளை நேர்த்தி செய்வது பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். குறிப்பாக, இரஸ்தாளி, மொந்தன், விருப்பாச்சி மற்றும் வாடல் நோயால் பாதிக்கப்படும் பிற வகைகளில், வாடல் நோயைத் தவிர்க்க, வாழைக் கன்றுகளை நேர்த்தி செய்வதைச் செயல் விளக்கமாகச் செய்து காட்டினர்.
வாழையைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த, கன்றுக்கு 40 கிராம் கார்போபியூரான் குருணை வீதம் எடுத்து, களிமண்ணில் கலந்து, கன்றுகளின் வேர்ப்பகுதியில் நன்கு தடவி 24 மணி நேரம் நிழலில் உலர்த்தி நட வேண்டும் என்று விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.