தமிழக அரசின் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் உழவர்களின் பயன்பாட்டுக்காக வெளியிடப்பட்டுள்ள முக்கியச் செயலி உழவன். இதில் இப்போது 21 வகை சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவையாவன:
மாநில அரசால் மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் மானியத் திட்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களுக்குத் தேவையான இடுபொருள்கள்களை இந்தச் செயலி மூலம் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
பயிர்க் காப்பீடு விவரம் குறித்து அறியலாம். விவசாயிகள் தங்களுக்கு அருகிலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் உள்ள உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்களை அறிந்து கொள்ளலாம்,
மேலும், அரசு வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள விதைகள் இருப்பு விவரம் மற்றும் விலை விவரங்களை அறிந்து கொள்ளலாம். வேளாண்மையில் மிகப் பெரிய சவாலாக உள்ள கூலியாட்கள் பற்றாக்குறையைச் சரி செய்ய உதவும், வாடகை இயந்திரங்கள் மற்று அவற்றை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் குறித்த விவரம் அறியலாம்.
இடைத்தரகர்களிடம் சிக்காமல், விளை பொருள்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய ஏதுவாக, மாநிலம் முழுவதும் உள்ள சந்தை நிலவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
களையெடுத்தல், உரமிடுதல், பயிர்ப் பாதுகாப்பு மருந்து தெளித்தல் போன்ற விவசாயப் பணிகளில் பாதிப்பு ஏற்படாமல் சரியாகச் செய்ய உதவும் வானிலையைப் பற்றி அறிந்து கொள்ளலாம். விவசாயிகள் அவரவர் பகுதி உதவி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலரை எளிதில் தொடர்பு கொள்ளலாம். பயிருக்கேற்ற உரம், பூச்சி, நோய் நிர்வாகம் மற்றும் விளைபொருள் விற்பனை வாய்ப்பை அறிந்து கொள்ள முடியும்.
நஞ்சில்லா உணவை அனைவரும் பெறும் வகையில், மாவட்ட வாரியாக, இயற்கை விவசாயிகளின் தரவுகள் மற்றும் விற்பனையாளர்கள் விவரங்களை அறிந்து கொள்ளலாம். உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் அவற்றின் மூலம் விற்பனை செய்யப்படும் பொருள்களைப் பற்றிய விவரங்களை அறிய முடியும்.
தமிழகம் முழுவதுமுள்ள அணைகளின் நீர் மட்டம், அவ்வப்போது ஏற்படும் சூழலுக்கேற்ப பின்பற்ற வேண்டிய உத்திகளை அளிக்கும் வேளாண் செய்திகள், உழவர்களின் எண்ணங்களைத் தெரிவிக்க உதவும் வேளாண் கருத்துகளைத் அறிந்து கொள்ள முடியும்.
அனைத்துப் பயிர்களுக்கும் ஏற்ற, பூச்சி மற்றும் நோய்க் கண்காணிப்புப் பரிந்துரைகளைப் படங்கள் மூலம் அறியலாம். விவசாயிகள் தங்களுக்குத் பயிற்சிகள் மற்றும் அவற்றுக்கான முன்பதிவை இந்தச் செயலி மூலம் செய்ய முடியும்.
உழவன் இ சந்தை, பட்டு வளர்ப்பு மற்றும் மானியங்கள், விலை விவரங்களை அறியலாம். தரிசு நிலங்களைப் பரிசு நிலங்களாக மாற்றுவதற்கு இந்தச் செயலி மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
விவசாயிகள் தங்களின் உற்பத்தியை உயர்த்தி, வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில், அரசின் அனைத்துத் திட்டங்களும் அனைத்து விவசாயிகளையும் எளிதில் சென்றடைய இந்தச் செயலி உதவும்.
கூகுளில் பிளே ஸ்டோர் என்னும் பகுதிக்குச் சென்று உழவன் எனத் தட்டச்சு செய்து ஒரே கிளிக்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிறகு நமது கைப்பேசி எண், குடியிருப்பு விவரங்களைப் பதிவு செய்து இச்செயலியைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். இப்போது தங்களுக்குத் தேவையான இடுபொருள்களை உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு நூறு சத முன்னுரிமை வழங்கப்படுவதால் இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தலாம்.
வி.சுரேஷ்குமார்,
வேளாண்மை உதவி இயக்குநர்,
தளி வட்டாரம், கிருஷ்ணகிரி – 635 001.